
வல்லம், ஜூலை 14- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பாலிடெக்னிக் கல்லூரியின் செயல்பாடுகள், விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள், கல்லூரி வளாகம், பாடத்திட்டம், பேராசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதோடு அவர்களை கல்லூரியின் புதிய சூழலுக்கு தயார்ப்படுத்தும் நோக்கத்தோடு 17.06.2026 முதல் 23.06.26 வரை இக்கல்லூரி வளாகத்தில் அறிமுகப் பயிற்சி திட்டம் (Induction Programme) நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்ச்சி
அறிமுகப் பயிற்சித் திட்டத்தின் முதல் நாளான 17.06.2026 அன்று அந்தந்த துறை வாரியாக மாணவ மாணவிகள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வகுப்பின் மாணவப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்பு, இக்கல்லூரியின் ஆற்றல் மிகு தாளாளர் முனைவர் வீ.அன்புராஜ், அவர்கள் மாணவ மாணவிகளிடையே உரையாற்றும்போது மாணவர்கள், தொழில் நிறுவனங்களில் வேலை செய்வதைவிட, துறைசார்ந்த வெற்றிகரமான தொழில்முனைவோராக உருவாக, இந்த பாலிடெக்னிக் கல்லூரியில் கிடைக்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி, சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மதிய உணவிற்குப்பின் இக்கல்லூரியின் முதல்வர் க.ப.வெள்ளியங்கிரி மாணவர்கள் எவ்வாறு ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உரைநிகழ்த்தினார். பின்பு இக்கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அதன் பின்பு மாணவ, மாணவிகள் அனைவரும் அனைத்து துறைகள் சார்ந்த வகுப்பு மற்றும் ஆய்வகங்களுக்கு சென்று பார்வையிட்டு அறிந்து கொண்டனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி
அறிமுகப் பயிற்சித் திட்டத்தின் இரண்டாம் நாளான 18.06.2026, அன்று முதலாவதாக மாணவ, மாணவிகள் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்தும் பணி உடைப்பு அமர்வு (Ice–breaking Session) நிகழ்வு நடைபெற்றது. அதன் பின்பு, திராவிடர் கழகத்தலைமைப் பேச்சாளர் பெரியார் செல்வம் மாணவ, மாணவிகளிடையே தலைமைப் பண்பு மற்றும் ஒழுக்கத்தின் மேன்மை பற்றிய எழுச்சியுரை ஆற்றினார்.
தேநீர் இடைவேளைக்குப்பிறகு புதிதாக இணையும் மாணவர்களின் சுய அறிமுக நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இக்கல்லூரியில் வெற்றிகரமாக இயங்கி வரும் பெரியார் அறிவியல் கழகம் போன்ற பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.
அன்று மதியம் தஞ்சாவூர் பிரய்ன் ஸ்கில்ஸ் நிர்வாக இயக்குநர் பாலாஜி மாணவர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். இக்கல்லூரியின் மேனாள் மாணவர்கள் தாங்கள் எவ்வாறு இக்கல்லூரியில் நன்கு படித்து வேலை வாய்ப்பு பெற்று வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறோம் என்பதை புதிய மாணவர்களிடத்தில் தெளிவாக எடுத்துக் கூறினார்கள். புதிய மாணவர்களுக்கும் மேனாள் மாணவர்களுக்கும் கலந்துரையாடல் வாயிலாக வழிகாட்டுதலும் வாழ்வியல் சம்மந்தமாக கருத்துகளும் பரிமாறப்பட்டன.
மூன்றாம் நாள் நிகழ்ச்சி
மூன்றாம் நாளான 19.06.26 அன்று காலை இக்கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியர் ரெ.அய்யநாதன் “வளரிளம் பருவத்தில் மாணவர்களின் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்” என்ற தலைப்பில் உரை யாற்றினார். பின்பு “போதைப் பொருள் ஒழிப்பு” என்ற தலைப்பில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ரெ.நடராஜன் மற்றும் பெ.மாதவன் ஆகியோர் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்கள்.
தேநீர் இடை வேளைக்குப் பிறகு கெட் ஸ்டார்ட் டிரைனிங் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்
அய்.ஞானசீலன் தலைமைப்பணி பற்றிய உரை நிகழ்த்தினார். பின்பு EOMS (21001:2018) பற்றிய விழிப்புணர்வு உரையை முதுநிலை பேராசிரியர் ஆர்.லலிதா நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, இக்கல்லூரியில் செயல்பட்டு வரும் Periyar Foundation for Pre-Incubation மற்றும் Outcome Based Education, NBA, IE(I) மற்றும் ISTE ஆகியவற்றைப் பற்றி இக்கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா விளக்கமாக எடுத்துரைத்தார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மூன்றாம் ஆண்டு கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கிடையே கலந்துரையாடல் வாயிலாக கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
பின்பு மனிதகுல மேன்மை மற்றும் வழிகாட்டுதலின் மகிமை” பற்றி மாணவர் ஆலோசகர் எஸ்.மைக்கேல்ராஜ் மாணவர்களிடையே உரையாற்றினார். அடுத்ததாக கட்டட எழிற்கலை, மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல், அமைப்பியல், இயந்திரவியல், கணினியியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் மற்றும் மார்டன் ஆபீஸ் பிராக்டீஸ் ஆகிய துறைகளின் துறைத் தலைவர்கள் தங்கள் துறை பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்கள். பின்பு விளையாட்டு மற்றும் யோகா ஆகியவற்றைப் பற்றி உடற்கல்வி இயக்குநர் முனைவர் இரா.கோ. கிரிதரபிரசாத் தெளிவாக எடுத்துரைத்தார்.
நான்காம் நாள் நிகழ்ச்சி
நான்காம் நாளான 22.06.26 அன்று இக்கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலர் ரெ.அய்யநாதன் இக்கல்லூரியின் இயங்கும் வேலை வாய்ப்புத்துறை மூலம் மூன்றாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு 100 சதவிகிதம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவது பற்றி உரை நிகழ்த்தினார்.
பின்பு வயது வந்தோர் உடல் நலம் பற்றி மருத்துவர் எம்.முருகேசன் உரை நிகழ்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அடுத்ததாக இயந்திரவியல் விரிவுரையாளர் எஸ்.ஜீவானந்தம் வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் வேலைவாய்பு எவ்வாறு ஏற்படுத்தி தரப்படுகின்றது என்பது பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.
அடுத்து பாடத்திட்டத்தைப் பற்றி மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பாட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புரியும் வண்ணம் விளக்கினார்கள். அன்று மதிய உணவிற்குப்பின் இக்கல்லூரியின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ப.சாந்தி மாணவ, மாணவிகளிடையே தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு முறைகள் பற்றி உரையாற்றினார்.
பின்பு முதலாமாண்டுத் துறைத்தலைவர் க.நீலாவதி பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகள் பற்றி உரையாற்றினார். அடுத்து இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர் மூ.தவமூர்த்தி மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் “செயல்பாடுகளில் மனோதத்துவ தாக்கம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
22.06.26 அன்று கந்தர்வகோட்டையில் அமைந்திருக்கும் டெல்டா புட்ஸ் (Delta Foods) என்ற நிறுவனத்திற்கு முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் அனைவரும் அழைத்து செல்லப்பட்டனர். டெல்டா புட்ஸ் என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களையும் நெல், சோளம் போன்ற உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் சேமிப்புக் கிடங்குகளையும் பார்வையிட்டு அறிந்து கொண்டனர்.
அய்ந்தாம் நாள் நிகழ்ச்சி
பயிற்சியின் அய்ந்தாம் நாளான 23.06.2026 அன்று லாஜிக்சென் கம்பெனியின் திட்ட மேலாளர் சேதுபதி, “தொழிற்சாலை வல்லுநர்களுடன் கலந்துரையாடல்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். பின்பு நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியை ஞா.செங்கொடி, நாட்டு நலப்பணித் திட்டம் பற்றிய விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.
இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் சிறிய அளவிலான “செய்முறை திட்டங்கள்” என்ற தலைப்பில் இயற்பியல் பேராசிரியர் எஸ்.பாலமுருகன் மற்றும் வேதியியல் பேராசிரியை எல்.சசிகலா ஆகியோர் உரை ஆற்றினார்கள். பின்பு மதிய உணவு இடைவேளைக்குப் பின் ”படைப்புத்திறன் மிக்க கணிதப் புதிர்கள்” என்ற தலைப்பில் முதலாமாண்டு துறைத்தலைவர் க.நீலாவதி மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ப.சாந்தி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
25.06.2026 அன்று முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் அனைவரும் வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்டு கல்வி நிறுவனத்தைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் அறிந்து கொண்டனர்.
அடுத்து உரையாற்றிய இக்கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் க.ரோஜா நமது கல்லூரி பெற்ற பல்வேறு சாதனை விருதுகளைப் பற்றி மாணவ, மாணவிகளிடையே விளக்கிக் கூறினார். நிகழ்ச்சி இறுதியில் மாணவ, மாணவிகளின் கருத்துப் பின்னூட்டம் ( Feedback) பெறப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.
