சிறுபான்மையினரைக் குறிவைத்து எஸ்.அய்.ஆர். பணிமூலம் 5.2 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும்! ஒன்றிய பாஜக அரசுக்கு அய்.நா. சபை அறிவிக்கை

3 Min Read

நியூயார்க், ஜூலை 13 நாட்டில் மக்கள் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக மரபை ஒழிக்கும் நோக்கத்திலும்; ஒரே கட்சி ஒரே ஆட்சியைக் கொண்டு வரவும் வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்கும் சிறப்பு திட்டத்தை மோடி அரசு தேர்தல் ஆணையம் மூலம் செயல்படுத்தி வருகிறது. அதாவது தோல்வி பயத்தால் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்களை குறிவைத்து (நீக்கம்), வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்அய்ஆர்) மோடி அரசு நாடு முழுவதும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

5.2 கோடி பேர் நீக்கம்

முதற்கட்டமாக பீகாரிலும், இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட தேர்தலைச் சந்தித்த மாநிலங்களிலும் எஸ்அய்ஆர் நடந்து முடிந்தது. மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மூன்றாம் கட்ட எஸ்அய்ஆர் பணி முடிவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது வரை மொத்தம் 5.2 கோடி (2 ஆம் கட்டம் வரை) பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இதில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்கள் வாக்குகள் 90% ஆகும். சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் வாக்களித்தால், தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால், மோடி அரசு எஸ்அய்ஆர் பணியை ஒரு முக்கிய வேலையாக தேர்தல் ஆணையம் மூலம் மேற்கொண்டு வருகிறது என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கே தெரியும்.

அய்.நா. சபை

இந்நிலையில், எஸ்அய்ஆர் பணி மூலம் சிறுபான்மையினரைக் குறி வைத்து 5.2 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் அய்.நா. சபையின் சிறுபான்மையினர் விவகாரங்கள், கருத்துச் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரம் ஆகிய பிரிவுகள், ஒன்றிய மோடி அரசுக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக அய்.நா.வின் சிறப்புத் தூதர்கள் நிக்கோலஸ் லெவ்ராட், அய்ரின் கான் மற்றும் நசீலா கானியா ஆகியோர் இணைந்து ஒன்றிய அரசுக்கு எழுதியுள்ள கடித்தத்தில், ‘‘எஸ்அய்ஆர் என அழைக்கப்படும் சிறப்புத் தீவிர சீர்திருத்தத்தின் மூலம் இந்தியாவின் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒட்டுமொத்தமாக 5.2 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது மனித உரிமைகள், பேச்சுரிமை மற்றும் அரசியலில் பங்கேற்பதற்கான ஜனநாயக உரிமைகள் ஆகியவை மீறப்பட்டுள்ளனவா? என்ற கேள்வி எழுகிறது.

95 சதவிகிதம்….

வாக்காளர் பட்டியலில் இருந்து முஸ்லிம் வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டதற்கு மேற்கு வங்கத்தின் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியை ஒரு முக்கியமான ஆதாரம் ஆகும். தற்போது மேற்கு வங்க முதலமைச்சராக உள்ள பாஜகவின் சுவேந்து அதிகாரி போட்டியிட்டு பெரும்பான்மையுடன் வென்ற நந்திகிராம் தொகுதியில் நீக்கப்பட்ட ஒட்டுமொத்த வாக்காளர் பெயர்களில் 95 சதவீதம் பேர் முஸ்லிம் வாக்காளர்கள் ஆவர். ஆனால், அந்தத் தொகுதியின் மொத்த மக்கள் தொகையிலேயே முஸ்லிம்கள் 25 சதவீதம் மட்டுமே உள்ள னர். நீக்கப்பட்ட பலரிடம் முறையான, செல்லுபடியாகும் இந்திய அடையாள ஆவணங்கள் இருந்தபோதிலும் அவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. இது எப்படி? இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தை அணுகிய போதிலும், இந்த சீர்திருத்த நடவடிக்கைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதேபோன்ற விவகாரங்கள் பீகாரிலும் நடந்துள்ளதால் சிறுபான்மையினரிடையே குடியுரிமை சார்ந்த அச்சம் எழுந்துள்ளது.

ஏஅய் மழுப்பல்

வாக்காளர் பட்டியலில் உள்ள முறை கேடுகளைக் கண்டறிய இந்திய அரசு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மிக மோசமானது. ஏஅய் தொழில்நுட்பக் கோளாறுகள் காரண மாகவே தகுதியான லட்சக்கணக்கான வாக்காளர்கள் பட்டியலிலிருந்து தவறாக வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று சந்தேகமும் கிளம்பியுள்ளது. ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவினரைத் தேர்தல் நடைமுறையிலிருந்து நீக்குவது போன்ற அணுகுமுறை, முஸ்லிம் குடிமக்களுக்கு எதிரான பாகுபாட்டிற்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிப்பதைப் போலாகிவிடும். இது இந்தியா ஏற்றுக்கொண்டுள்ள ‘பன்னாட்டு இனப் பாகுபாடு ஒழிப்பு உடன்படிக்கை மற்றும் 1992ஆம் ஆண்டின் அய்.நாவின் சிறுபான்மையினர் உரிமைப் பிரகடனத்திற்கு’ எதிரானது.

பதிலளிக்க வேண்டும்

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வர்களின் துல்லியமான எண்ணிக்கை, அதற்கான முறையான காரணங்கள், தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளின் எண்ணிக்கை மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாட்டைத் தவிர்க்க அரசு எடுத்த நடவடிக்கைகள் உள்ளிட்ட 7 முக்கிய விவ காரங்கள் குறித்து விரிவான அறிக்கை மற்றும் விளக்கத்தை அளிக்க வேண்டும்” என மோடி அரசிடம் அய்.நா., தூதர்கள் தங்கள் கடிதத்தில் உத்தரவிட்டுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *