கார்ப்பரேட் கனவான்களுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி – பசித்த வயிறுகளுக்குப் பட்டினிதான் பரிசா?

4 Min Read

ஒரு மனிதருக்கு மாதத்திற்கு 14 கிலோ ஊட்டச்சத்து தேவை என்று மருத்துவர்கள்
கூறும் நிலையில், 7 கிலோ மட்டுமே தருவோம் என்று ஒன்றிய அரசு கூறுவது நியாயமா?

ஒரு மனிதருக்கு மாதத்திற்கு 14 கிலோ ஊட்டச்சத்து தேவை என்று மருத்துவர்கள் கூறும் நிலையில், 7 கிலோ மட்டுமே தருவோம் என்று ஒன்றிய அரசு கூறுவது நியாயமா? கார்ப்பரேட் கனவான்களுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் தள்ளுபடிபசித்த வயிறுகளுக்குப் பட்டினிதான் பரிசாஎன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இவ்வாண்டு ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்றத் தொடர் கூட்டம் தொடங்கி நடைபெறவிருக்கும் நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தை மாற்றிவிட அனைத்து ஏற்பாடு களில் மும்முரமாக ஆர்.எஸ்.எஸ். மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி முழு வேகத்தில் இருக்கிறது.

‘அரிய வகை’ உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு – நிதி உதவிகளை வாரி இறைத்துள்ள பா.ஜ.க. அரசு!

சமதர்மம், கூட்டாட்சி, மாநில உரிமைகள், ஏழை, எளிய உழைக்கும் மக்களின் வாழ்வுரிமைகளையும் பறிக்கும் பல புதிய சட்ட மசோதாக்களையும், சட்டத் திருத்தங்களையும் கொண்டு வந்து அனைவருக்கும் கல்வி என்பதைப் பறித்து, உயர்ஜாதி, உயர் வர்க்கத்திற்கே இனி கல்வி  கிட்டும் வாய்ப்பு என்ற சூழலை உருவாக்கி, டாக்டர் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டத்தின் பீடிகையில் உள்ள சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி, சமதர்மம், ஜனநாயகக் குடியரசு ஆகிய கொள்கைகளைக் காணாமற் போகச் செய்து, பன்மதம், பன்மொழி, பல கலாச்சாரங்கள், நாட்டின் பன்மைத் தத்துவங்களைத் தூக்கி எறிந்து, ஒற்றை ஆட்சி, அதுவும் ஹிந்துராஷ்டிரம், ஆரிய சமஸ்கிருத கலாச்சாரம் மட்டுமே என்று கொண்டு வர முயற்சிக்கிறது. ஒருபுறத்தில் ‘ஏழைகள்’ என்பவர்களை வரையறை செய்யும் அளவுகோலில் ‘உயர்ஜாதி ஏழைகள்’ என்று பிரித்துக் கூறி, ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் – நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.2000 சம்பாதிக்கும் ‘அரிய வகை’ உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு அவர்களது எண்ணிக்கைக்கும் கூடுதல் விகிதமாக வழங்கி நிதி உதவிகளையும் வாரி இறைத்துள்ளது பா.ஜ.க. அரசு!

மறுபுறத்தில் உண்மையாகவே நாட்டில் ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாது தவிக்கும் மக்களுக்கு, எளிய விலையில் இலவசமாக பசி, பட்டினி போக்க முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசால் அளிக்கப்பட்ட உணவு உரிமையைப் – பறிக்க சட்டச் சம்மட்டியை ஓங்கிட தயாராகி வருகின்றனர் என்பது அதிர்ச்சிக்குரிய ஆபத்தாகும்!

ஒன்றிய அரசின் நுகர்வோர் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்மூலம் கொண்டு வரத் திட்ட மிடப்பட்டுள்ள புதிய தேசிய உணவுப் பாதுகாப்புத் திருத்த மசோதா –

தற்போது குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்படும் 35 கிலோ ரேஷன் உணவுப் பங்கீட்டு அளவை, நபர் ஒருவருக்கு வெறும் 7 கிலோவாகக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாம்!

இத்துடன், ஒரு குடும்பத்திற்கான அதிகபட்ச வரம்பு அளவை 35 கிலோவாக நிர்ணயிக்கிறது! இதற்கு விசித்திரமான விளக்கமாக சிறிய மற்றும் பெரிய குடும்பங்களுக்கிடையே சமமான விநியோகத்தை உறுதி செய்து சீர்படுத்தவே இந்த நடவடிக்கை என்றும், சிறிதும் கருணையின்றி விளக்கம் கூறுகிறது ஒன்றிய அரசின் துறை.

புதிய விழைவு உத்தேசப்படி, 5 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள ஏழைக் குடும்பங்களில், தலா 7 கிலோ, அதிகபட்சம் 35 கிலோ என்ற அவர்களது திட்டப்படி பார்த்தால், ஒட்டுமொத்தப் பங்கீடு மிகக் குறைந்து பாதிப்பு ஏற்படுமே!

ஏழைகளை மேலும் படு ஏழைகளாக, பட்டினிப் பட்டாளங்களாகவே ஆக்கும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தக் கூடும்.

ஓரணியில் நின்று, தடுத்து நிறுத்துவது
அவசிய, அவசரமாகும்!

எதிர்க்கட்சிகள் இதனைக் கடுமையாகக் கண்டித்து, நிறைவேற்றவிடாமல் தோற்கடிக்க ஓரணியில் நின்று,  தடுத்து நிறுத்துவது அவசிய, அவசரமாகும்!

இந்திய மருத்துவக் கவுன்சில் ICMR கொடுத்த பழைய பரிந்துரைகளின்படி, ஒரு மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், உடல்நலப் பாதுகாப்புக்கும், மாதத்திற்குத் தலா 14 கிலோ உணவு தானியங்கள் தேவை என்று கூறியுள்ளது.

ஊட்டச்சத்து நிபுணர்களும், மருத்துவ அறிஞர்க ளும் இதுவே (35 கிலோ அளவு) போதாது என்று பரிந்துரைத்து, கருத்துக் கூறியுள்ள நிலையில், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையைவிட வாக்களித்த ஏழைகளின் வயிற்றில் ஈரத் துணியுடன் இருக்கும் பரிதாபத்திற்கு தொடக்க விழா நடத்துவது நியாயமா? அறமா?

உழைக்கும் வர்க்கத்தைப்
பட்டினிப் போடலாமா?

வாஜ்பேயி ஆட்சி முடிந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 2014 இல் ஆர்.எஸ்.எஸ். மோடி அவர்களது பி.ஜே.பி. ஆட்சி அமைந்தபோது, ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ – எல்லோரையும் உள்ளடக்கிய நாட்டு வளர்ச்சி (Inclusive Growth) என்று முழங்கியதை ஏனோ ‘வசதியாக’ மறந்துவிட்டு, கார்ப்பரேட் கனவான்களுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்து, உழைக்கும் வர்க்கத்தைப் பட்டினிப் போடலாமா?

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

12.7.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *