சென்னை, ஜூலை 11– சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரயில் பயண ஒழுங்குமுறைகள்:
மெட்ரோ ரயில் பயண ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி, சக பயணிகளின் வசதிக்கும் அமைதிக்கும் மதிப்பளிக்குமாறு அனைத்துப் பயணிகளையும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
மெட்ரோ ரயில் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம் 2002 பிரிவு 59இன் கீழ், சக பயணிகளுக்குத் தொந்தரவு விளைவிப்பதோ அல்லது அவர்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
அபராதத் தொகை ரூ.2,500 ஆக உயர்வு
ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (MoHUA) 19.06.2026 அன்றுவெளியிட்ட அரசிதழ் (Gazette) அறிவிப்பின்படி, ‘ஜன் விஸ்வாஸ் சட்டம் 2026’-இன் கீழ் ஒரு புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி, மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகங்களில் மற்ற பயணிகளுக்குஇடையூறு விளைவிக்கும் செயல்களில் (உதாரணமாக: செவியில் பொருத்தி கொள்ளும் ஒலிபெருக்கிஇல்லாமல் உரத்த சத்தத்தில் பாட்டு கேட்பது போன்றவைகளில்) ஈடுபடுபவர்களுக்கான அபராத தொகை, பிரிவு 59-இன் கீழ், முன்பிருந்த ரூ.500-லிருந்து தற்போது அதிகபட்சமாக ரூ.2,500 வரைஉயர்த்தப்பட்டுள்ளது.
ஸ்பீக்கர் மோட் பயன்பாடு
மேலும், விதிகளை மீறும் பயணிகள் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ வளாகத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, சக பயணிகளின் பயண சூழலைக் கருத்தில் கொண்டு, அனைவரும் செவியில் பொருத்திகொள்ளும் ஒலிபெருக்கியை (Headphones) பயன்படுத்துமாறும், மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகத்திற்குள் உரத்த குரலில் உரையாடுதல் மற்றும் ஸ்பீக்கர் மோட் பயன்பாட்டைத் தவிர்க்குமாறும்சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகத்தான மனிதநேயம்!
மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் கொடை!
4 பேர் மறுவாழ்வு பெற்றனர்
சென்னை, ஜூலை 11- ஆவடி ஆனந்தநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 41). கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த மாதம் 29ஆம் தேதி தனது வீட்டில் வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதற்காக தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுரேஷ்குமார் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சுரேஷ்குமாரின் உடல் உறுப்புகளை கொடையாக அளிக்க அவரது குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தனர். அதன்படி, அவரது உடலில் இருந்து கல்லீரல், தோல் மற்றும் கண்கள் ஆகியவை கொடையாகப் பெறப்பட்டன.
இதில் கல்லீரல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், தோல் மற்றும் கண்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. இதன் மூலம் மொத்தம் 4 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
உடல் உறுப்பு கொடையாக அளித்த சுரேஷ்குமாரின் உடலுக்கு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கவிதா மற்றும் செவிலியர்கள், ஊழியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
10 நாள்களில் மேட்டூர் அணைக்கு கபினியின் உபரி நீர்!
நீர்வளத் துறை எதிர்பார்ப்பு
மேட்டூர், ஜூலை 11- கேரள மாநிலத்தில் தொடரும் மழை காரணமாக கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதால் அடுத்த 10 நாள்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரள மாநிலம் வயநாட்டில் பெய்துவரும் மழை காரணமாக கருநாடக மாநிலத்தின் உள்ள கபினி அணைக்கு வரும் நீரின் அளவு 10.7.2026 அன்று காலை 15,198 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கபினி அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 65 அடி உயரம் கொண்ட கபினி நீர்மட்டம் 10.7.2026 அன்று காலை 48.35 அடியாக உயர்ந்துள்ளது. 19.52 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையில் 10.42 டிஎம்சி இருப்பு உள்ளது. நீர் வரத்து இதே நிலையில் நீடித்தால் பத்து நாள்களில் கருநாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை நிரம்பி உபரி நீர் காவிரியில் திறக்க வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கபினி உபரி நீர் காவிரி திறக்கப்பட்டால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
