புதுடில்லி, ஜூலை 11- நாள்தோறும் இன்சுலின் ஊசி செலுத்தும் தேவை உள்ள நீரிழிவு நோய் மருத்துவப் பயனாளிகளுக்காக, வாரத்துக்கு ஒரு முறை மட்டும் செலுத்தினால் போதுமான புதிய வகை இன்சுலின் ஊசியை, டென்மார்க்கைச் சேர்ந்த ‘நோவோ நோர்டிஸ்க்’ நிறுவனம் நேற்று முன்தினம் (9.7.2026) நம் நாட்டில் அறிமுகப்படுத்தியது.
நம் நாட்டில் தற்போது 10.1 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நீரிழிவுக்கு முந்தைய நிலையில் 13.6 கோடி பேர் உள்ளனர். உடலில் இன்சுலின் உற்பத்தி ஆகாத நிலையில் உள்ளவர்கள், ‘டைப் – 1’ நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த வகை நீரிழிவு நோயால் நம் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர், நாள்தோறும் இன்சுலின் ஊசி செலுத்தும் தேவை உள்ளவர்கள்.
தீவிர ‘டைப் – 2′ நீரிழிவு நோய் மருத்துவப் பயனாளிகளும், குருதியில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, நாள்தோறும் இன்சுலின் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. அன்றாடம் ஊசி போடுவதற்கு பயந்து, பலர் இன்சுலின் சிகிச்சையை தொடங்குவதை தாமதப்படுத்தி வருவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
இந்நிலையில், வாரம் ஒரு முறை மட்டும் செலுத்தும் புதிய இன்சுலின் ஊசியை, அய்ரோப்பிய நாடான டென்மார்க்கைச் சேர்ந்த நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த புதிய இன்சுலின் மருந்து, ‘இன்சுலின் அய்கோடெக்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு, ‘அவிக்லி’ என்ற பிராண்ட் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
‘பிளெக்ஸ்டச்’ என்ற பேனா வடிவ கருவி வாயிலாக இந்த இன்சுலின் செலுத்தப்படும். இந்த மருந்து, நம் நாட்டில் நேற்று முன்தினம் (9.7.2026) அறிமுகப்படுத்தப்பட்டது.
இது குறித்து, மருந்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: நீரிழிவு நோய் மருத்துவப் பயனாளிகள் நாள்தோறும் இன்சுலின் ஊசி செலுத்தும் சுமை குறைவதால், அவர்கள் சிகிச்சையை தாமதப் படுத்தாமல் தொடங்கவும், தொடர்ந்து சிகிச்சையை பின் பற்றவும் இது உதவும்.
புதிய வகை இன்சுலின் மருந்தின் 700 யூனிட் கொண்ட ஒரு பேக்கின் விலை, 2,611 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; ஒரு யூனிட் விலை, 3.73 ரூபாய்.
தற்போது பயன்பாட்டில் உள்ள அன்றாட இன்சுலினுடன் ஒப்பிடுகையில் இது, 30 – 40 சதவீதம் வரை மலிவானது. நாள்தோறும் 10 யூனிட் இன்சுலின் பயன்படுத்தும் மருத்துவப் பயனாளிகளுக்கு, வாரத்துக்கு 70 யூனிட் போதுமானதாக இருக்கும். இதற்கான செலவு, வாரத்துக்கு 261 ரூபாய் மட்டுமே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
