கேள்வி: ‘கூட்டாட்சித் தத்துவங்களைக் கொளுத்திய காங்கிரசு – மாநில உரிமைகளைப் பற்றிப் பேசலாமா?’ என்று நயினார் நாகேந்திரன் பா.ஜ.க.வை மறந்துவிட்டுக் கூறியுள்ளது பற்றி…?
– ச.க.கோதண்டபாணி, திருவள்ளூர்
பதில்: ‘மருத்துவரே, முதலில் உம்மை குணப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்ற முதுமொழிதான் நினைவுக்கு வருகிறது!
கேள்வி: மது விற்பனையின்போது ரூ.10 கூடுதலாக வாங்குவதைத் தவிர்க்க 25 விழுக்காடு ஊதிய உயர்வு செய்துள்ள தமிழ்நாடு அரசின் எதிர்பார்ப்பை டாஸ்மாக் ஊழியர்கள் நிறைவேற்றுவார்களா?
– இரா.பிரபாகரன், காரனோடை
பதில்: பொறுத்திருந்து பார்க்கலாம்!
கேள்வி: ‘திராவிட மாடல்’ ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட திட்ட ஒப்பந்தங்கள் த.வெ..க. ஆட்சியில் இரத்து செய்யப்படுவது ஏன்? ஏற்கத்தக்கதா?
– ம.வ.அருள், சென்னை-11
பதில்: ஜனநாயக ஆட்சியில், திட்டங்களைத் தொடருவதே நியாயமும், நேர்மையுமாகும். நாட்டு வளர்ச்சி பாதிக்கப்படக் கூடாது; தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித்துறை, சாலைத்துறை வளர்ச்சி மிகவும் எடுத்துக்காட்டானது. அது போக்குவரத்தினை வெகுவாக – சிறப்பாக ஆக்கியது; தவறுகள் – ஊழல்களைக் களையலாம். அரசியல் கண்ணோட்டம் இன்றி, மக்கள் நலக் கண்ணோட்டம், புதிய ஆட்சியாளருக்குத் தேவை. ஓர் ஆட்சியினர் அடிக்கல் நாட்டியதை மறு ஆட்சியினர் திறந்து வைப்பது தவிர்க்க முடியாது என்பதைப் புரிந்து செயல்படுதல் நல்லது.

கேள்வி: முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்த ‘விவசாயத்திற்கு இலவச மின்சாரம்’ நிதிச்சுமையா? சமூக நீதியா?
– கவியரசு, அரும்பாக்கம்
பதில்: சமூகநீதியையும் தாண்டி விவசாயிகளின் அக மலர்ச்சிக்கும், நெல் உற்பத்திப் பெருக்கத்துக்கும் நல்ல ஊக்க மாத்திரை.
கேள்வி: தந்தை பெரியார் அவர்கள் நாய்களை, ஏன் பூனைகளையும் கூட தொடர்ச்சியாக நீண்ட நாள்கள் வளர்த்து வந்தார். அதற்கு ஏதேனும் குறிப்பிட்ட காரணம் உண்டா?
– பாபு, பூவிருந்தவல்லி
பதில்: பூனைகளை வளர்த்ததாக நமக்குத் தெரியவில்லை. நன்றி காட்டாத மனிதர்களை விட நாய் காட்டும் நன்றி அவருக்கு மிகவும் பிடித்ததாகியிருக்கலாம். இந்தப் பாடத்தைப் போதிப்பதற்காகக் கூட இருக்கலாம். நாயின் பிரிவாற்றாமையை (மரணத்தின்போது) அய்யாவும், அம்மாவும் மிகவும் துன்புற்றார்கள் என்பதையும் கூடுதலாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

கேள்வி: போர்களினால் உயிரிழப்புகள், கட்டுமானச் சிதைவுகள், நாட்டு வளர்ச்சி, குழந்தைகளின் எதிர்காலம் இவையெல்லாம் பாதிக்கப் படுகின்றனவே – இருந்தும் போர்கள் ஒழிவதற்கு அதிபர்கள் ஏன் சிந்திப்பதில்லை?
– அ.கண்மணி, மதுரை
பதில்: போலி சுய கவுரவமும், அமெரிக்கா போன்ற நாடுகளின் இராணுவ ஆயுத விற்பனையும் கூடக் காரணமாக இருக்கலாம். சில தனி மனிதர்களின் வக்கிரம், மானிடத்தையே தொல்லைக்கு ஆளாக்கும் வேதனைதான்.
கேள்வி: தமிழ்நாட்டில் தொடர்ந்து பல ஆண்டுகள் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளனவே – இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாதா? இதற்கு என்னதான் தீர்வு?
– க.விவேகா, வேலூர்
பதில்: தீர்வு கண்டாக வேண்டும். ஆனால், ஒன்றிய அரசுக்கு மாநிலக் கல்வி உரிமையைத் தாரை வார்த்துவிட்டுக் காண்பது தீர்வாகாது! அரசியலமைப்புச் சட்டப்படி பல்கலைக்கழகங்களின் சுதந்திரம் (Autonomy) பாதுகாக்கப்படும் வகையில் சட்டப்பூர்வமான தீர்வினை மாநில அரசு துணிந்து நின்று வென்று காட்ட வேண்டும். ஆளுநர்களை வேந்தர்களாக்குகின்ற அவர்கள் தலைமையேற்கும் (‘Ex officio’) முறை ஒழிக்கப்பட்டு புதிய ஆட்சி – துணிந்து செய்ய முன்வர வேண்டும்.

கேள்வி: நீரிழிவு நோயாளிகள் 4 பேருக்கு ஒருவர் என தற்போது அறிவித்துள்ளனரே! இது எதைக் காட்டுகிறது?
– ம.கன்னியப்பன், மதுராந்தகம்
பதில்: மக்களின் கட்டுப்பாடற்ற உணவு எடுத் தலையும், அலட்சியத்தையும், ஆபத்தினையும் காட்டுகிறது!
கேள்வி: கரூர் உயிரிழப்பு குறித்த சி.பி.அய். விசாரணை முடிவுறாத நிலையில் அங்கு செல்வதைத் தவிர்க்க வேண்டுமென்ற எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை முதலமைச்சர் ஜோசப் விஜய் மறுக்கலாமா?
– வா.செந்தமிழன், தாம்பரம்
பதில்: நீதிமன்றங்கள் தீர்ப்புக் கூறுமுன், மக்கள் மன்றத்தின் உணர்வை அறிந்து முதலமைச்சர் நடந்து காட்டுதல் அவசியம்.
கேள்வி: தீண்டாமை, ஜாதி ஒழிப்புக்கெனப் போராடிய போராளி இரட்டைமலை சீனிவாசன் குறித்துத் தாங்கள் கூறிட விரும்பும் முக்கியப் பதிவு யாது?
– வெ.விசுவாமித்திரன், திண்டிவனம்
பதில்: நீதிக்கட்சி – பானகல் அரசர் பிரதம அமைச்சராக இருந்த 1920 காலகட்டத்தில் அவர் முன்மொழிந்த முக்கியத் தீர்மானம். “தெருவில் நடப்பதில், ஜாதி அடிப்படையில், தீண்டப்படாதோர் எனப்பட்டவர்களுக்கான உரிமைகளை மறுக்க முடியாது” என்று தீர்மானம் நிறைவேற்றிய சமூகப் புரட்சியாளர்!
