கியூபா ஒரு சின்னஞ்சிறிய நாடு. அமெரிக்காவிற்கு 70 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. பிடல் காஸ்ட்ரோவும், சேகுவாராவும் அமெரிக்க ஆக்கிரமிப்பிலிருந்து விரட்டி அடித்து கியூபாவை மீட்டு வெற்றி கண்டனர். கம்யூனிசச் சித்தாந்தங்களைக் கொண்ட சோசலிச நாத்திக நாடு.
“நம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாக இருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விசயமே அல்ல!” என்கிறார் கியூபாவின் நிர்மானச் சிற்பி மாவீரன் பிடல் காஸ்ட்ரோ. மனிதகுலத்தின் எழுச்சி மிகுந்த புரட்சியாளரின் இணை இருவரும் இணைந்த போராட்டமே அது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை விரட்டியடிக்கப்பட்ட பின்னர், அதிபர் பிடல் காஸ்ட்ரோ மிகத் தெளிவாகத் திட்டமிட்டு, பின்தங்கிய நிலையை முற்றிலும் மாற்றம் பெற்று, அனைத்து துறைகளிலும் முனைப்புடன் செயல்வடிவமிட்டு, முன்னேற்றம் கண்ட நாடாக விளங்குகின்றது.

விவசாயம், தொழிலகங்கள், கல்வி, மருத்துவம், வணிக மேம்பாடு, தனி மனித மேம்பாடு, பண்பாடு என அனைத்துத் துறைகளிலும் இமய சாதனை புரிந்து வளர்ந்த நாடாக அரை நூற்றாண்டுக்குள் வளர்ந்து உயர்ந்துள்ளது.
குறிப்பாக ஓர் ஆயிரம் வீடுகள் கொண்ட பகுதிக்கு ஒரு மருத்துவரும், ஒரு செவிலியரும் வீதியின் நடுப் பகுதியில் மருத்துவமனையுடன் கூடிய மருத்துவருக்கான குடியிருப்பு. மக்களைத் தேடி மருத்துவம், வேளாண் மையில் புரட்சி. ஒரு வாழைத்தாரில் 50 சீப்புகள் கொண்ட வாழைத்தார் உற்பத்தி பெருக்கம். அய்ந்து மரத்தின் வாழையின் காய்ப்புத் திறன் ஒரே வாழை மரத்தில் காய்க்கும் திறன் அமைப்பு – கல்வியில் 25 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் உயர்நிலைக் கல்வி வரை கட்டணம் இல்லாக் கட்டாயக் கல்வி, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியானச் சீருடை. வியத்தகு மாற்றம், வளர்ச்சி அதிதீவிர முன்னேற்றம் கண்ட நாடு அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் கியூபா.
2019 முதல் 2020 வரை உலகையே வாட்டி வதைத்த கரோனா தொற்று நோய் பாதித்த நிலையில் கியூபா மக்களை எந்தவித கரோனா தொற்று நோயும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. என்ன காரணம்? கரோனா தொற்று வருவதற்கு முன்பே மருந்தைக் கண்டறிந்தது. போதிய இருப்பு வைத்திருந்தனர். மருத்துவத் துறையினரின் எதிர்நோக்கு, செயல்பாட்டு முறைகள் என்றே கூறலாம்.
2021-2022ஆம் ஆண்டு இங்கிலாந்தின் 142 பேர்கள் கப்பல் வழியாக உலகச் சுற்றுலா சென்று திரும்பும்போது, நோய்த் தொற்று ஏற்பட்டு, எந்த நாடும் ஏற்காத சூழலில், கியூபா மருத்துவர்கள் துறைமுகத்தில் வெள்ளைக் கொடியைக் காட்டி கப்பல் சுற்றுலா நோய்த் துறையினர்களை அழைத்துச் சென்று, இரண்டு திங்களுக்கு கரோனா மருந்து, உணவு, தங்கும் இடவசதி செய்து, பின்னர் அவர்களின் நாட்டிற்கு வான்ஊர்தி மூலம் அனுப்பி வைத்தனர். இது நாத்திகர்கள் என்றும் மனித நேயமிக்கவர்கள் என்பதற்குச் சான்றாகும்.

அமெரிக்காவின் தடைகளை எதிர்கொண்டு மருத்துவத் துறையில் தொடர்ந்து பல அரிய சாதனைகளைச் செய்து வரும் கியூபா மருத்துவர்கள் தற்போது புற்றுநோய்க் கட்டிகளைக் குணப்படுத்தும் ஹெபர்சா வேக்ஸ்’ (HEBERSA VAX) என்ற புதிய தடுப்பூசி ஒன்றை உருவாக்கி மருத்துவ உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
பல்வேறு வகையான புற்று நோய்களையும் குணப்படுத்தும் வகையிலான இத்தடுப்பூசியின் மருத்துவப் பரிசோதனைகள் வெற்றியடைந்துள்ளன. இந்த முடிவுகளைத் தொடர்ந்து இத்திட்டத்தின் முதன்மை விஞ்ஞானி யானெவிஸ் மொரேரா தியாஸ் மற்றும் அவரது மருத்துவக் குழுவினருக்குக் கியூபா அதிபர் மிளுயெல் தியாஸ் கானல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தத் தடுப்பூசியானது ஒரு ‘சிகிச்சைக்கான தடுப்பூசி” அல்லது செயல்பாட்டு நோய் எதிர்ப்புச் சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஹெபர்சா வேக்ஸ் தடுப்பூசி முற்றிய நிலையிலுள்ள குடல், கல்லீரல், சினைப்பை, சிறுநீரகப் புற்று நோய்களுக்கு தீர்வு கண்டுள்ளது என கியூபா மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தடுப்பூசி தோலின் அடியில் ஊசி மூலம் எளிதாகச் செலுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு மருத்துவ உலகில் சின்னஞ்சிறிய நாடான கியூபா வெற்றிக் கொடி நாட்டியுள்ளது.
உலகின் சட்டாம்பிள்ளைத்தனமும் ஆதிக்க சக்தியாக விளங்கும் அமெரிக்கா மனிதர்களைக் காக்கும் மருத்துவர்களைக் கொண்டு புதிய புதிய மருந்துகளை அறிவியல் ரீதியாக கண்டறியாமல் எந்த நாட்டில் பொருளாதாரத் தடைகளை விதிக்கலாம், எந்த நாட்டில் போர் நடத்தலாம், தங்களிடமுள்ள போர்க் கருவிகளை விற்பனை செய்து எப்படி பொருள் திரட்டலாம் என்ற முனைப்பிலுள்ளது.
– இரா.முல்லைக்கோ, பெங்களூரு
