பொதுவாக நமது கைப்பேசியில் உள்ள மென்பொருளில் அவ்வப்போது ‘அப்டேட்’ செய்துகொள்ளுங்கள் என்று செய்தி வரும். அதாவது அந்த செயலியை ‘மேம்படுத்திக் கொள்ளுங்கள்’ என்பது போன்று நாகரிகம் வளர வளர நிறவெறி, மதவெறி, ஜாதிவெறி ‘அப்டேட்’ ஆகிகொண்டே வருகிறது.
ஜூலை 4 ஆம் தேதி அய்க்கிய அமெரிக்க நாடு உருவான நாளைக் கொண்டாடிக்கொண்டு இருக்கும் போது (இதை அவர்கள் விடுதலை நாள் என்று கொண்டாடுகிறார்கள்) அதே நாளில் அமெரிக்கா நிறவெறி, மதவெறி, ஜாதிவெறியின் புதிய பரிமாணத்தில் நுழைந்துள்ளதாக அய்க்கிய நாடுகளின் அறிக்கையை ‘Special Rapporteur on contemporary forms of racism’ வெளியிட்டது. இதனை ‘பிட்டுஸ்பெர்க் ஸ்கூல் ஆப் லா’ இந்த ஆண்டுக்கான சட்ட ஆய்விற்காக எடுத்துள்ளது.
உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த அறிக்கை குறித்து இந்தியாவில் உள்ள எந்த இதழ்களும் இதைக் குறித்து எழுதவில்லை என்பது மிகவும் கவலைக்குரியது.

இதில் இந்தியர்கள் வெளிநாடுகளில் சென்று ஜாதிவெறியோடு புதிய பரிமாணத்தில் நடந்து கொள்வதும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
கடல் கடந்தும் தொடரும் ஜாதித் தீண்டாமை!
“கல்வி ஒன்றே ஜாதியக் கொடுமைகளில் இருந்து ஒருவரை விடுவிக்கும்” என்ற பாபாசாகேப் அம்பேத்கரின் கூற்றை நம்பி, கடுமையான உழைப்பால் உயர்கல்வி கற்று, அமெரிக்கா போன்ற நாடுகளின் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் உயர்ஜாதி அல்லாத (தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட) சமூகத்தைச் சேர்ந்த இந்தியர்கள் பெரும் புறக்கணிப்பைச் சந்தித்துக் கொண்டு வருகின்றனர்.
எல்லைகளைக் கடந்து விட்டாலும், பார்ப்பனர்கள் மற்றும் அவர்களால் ஜாதி வெறியூட்டப்பட்ட மக்களின் மனங்களில் இருக்கும் ஜாதியப் படிநிலைகளும், பாகுபாடுகளும் மாறவில்லை என்பதையே அண்மைக்கால நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
அமெரிக்காவில் இந்தியப் பொறியாளர்களின் ஜாதிவெறி உலக அளவில் விவாதப் பொருளானதற்கு மிக முக்கிய சான்று 2021இல் சிஸ்கோ நிறுவனத்திற்கு எதிராக கலிஃபோர்னியா மாநில அரசு தொடர்ந்த வழக்காகும்.
சிஸ்கோ நிறுவனத்தில் பணிபுரிந்த தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த திறமையான பொறியாளருக்கு, அங்கு உயர் பதவியில் இருந்த இரு இந்திய பார்ப்பன அதிகாரிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பொறியாளரின் தகுதி மற்றும் திறமையைப் புறக்கணித்து, அவருக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வைத் தடுத்ததோடு, சக ஊழியர்கள் மத்தியில் அவரை அவமானப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா வேலைவாய்ப்பு மற்றும் வீட்டுவசதித் துறை (DFEH) இந்த ஜாதிப் பாகுபாட்டை கையில் எடுத்து, அமெரிக்க சட்டப்படி இது குடிமை உரிமை மீறல் (Civil Rights Violation) என்று வழக்குத் தொடர்ந்தது.
இது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த வழக்குக்கு அமெரிக்காவிலேயே சரியான சான்றுகள் இல்லை என்று கூறி, இன்றும் இழுத்தடிக்கின்றனர். இதுதான் நவீன வகை ஜாதியப் பரிமாணம் ஆகும்.

மென்பொருள் நிறுவனங்களில் மேலாளர்களாகவும், இயக்குநர் களாகவும் இருக்கும் உயர்ஜாதி அதிகாரிகள், தங்களுக்குக் கீழ் பணிபுரியும் தாழ்த்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்டச் சமூகப் பொறியாளர்களைக் கையாளும் சில நுட்பமான உழைப்புச் சுரண்டல் முறைகளாகும்.
திறமையை வேண்டுமென்றே
குறைத்து மதிப்பிடுதல்:
ஒடுக்கப்பட்ட சமூகப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் எவ்வளவுதான் திறமையாக வேலை செய்தாலும், “இவர்கள் இடஒதுக்கீடு மூலம் படித்து வந்தவர்கள், இவர்களுக்குப் பெரிய அளவில் திறமை இருக்காது” என்ற தவறான பொதுப்புத்தியை உயர் அதிகாரிகள் மறைமுகமாகப் பரப்புவது; மேலும் “இவரது பெற்றோர்கள் எங்கள் வீட்டில் மலம் அள்ளினார்கள்” என்று கூறுவது போன்றவை.
தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டிய நேரத்தில், தங்களது ஜாதியைச் அல்லது இதர உயர்ஜாதி ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்து, ஒடுக்கப்பட்ட கல்வியாளர்களைப் புறக்கணிப்பது.
நிறுவனத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பணிகளைப் பார்ப்பனர்களுக்கு வழங்கி விட்டு, ஒடுக்கப்பட்ட சமூக ஊழியர்களுக்கு சாதாரணப் பணிகளை வழங்குவது; இதனால், ஆண்டு மதிப்பீட்டின் போது அவர்களின் செயல்திறன் குறைவாகக் காட்டப்பட்டு, பதவி உயர்வும் ஊதிய உயர்வும் மறுக்கப்படுகிறது.
சான்றுகளும், ஆய்வுகளும்!
அமெரிக்காவில் ஜாதிப் பாகுபாடு என்பது ஒரு சில தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல, அது ஒரு பரவலான கட்டமைப்பு என்பதைப் பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
அமெரிக்காவில் உள்ள ‘ஈக்வாலிட்டி லேப்ஸ்’ என்ற மனித உரிமை அமைப்பு நடத்திய ஆய்வில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் வாழும் 3இல் 2 ஒடுக்கப்பட்ட ஊழியர்கள் தங்களின் பணியிடங்களில் ஜாதியப் பாகுபாட்டை எதிர்கொள்வதாகக் கூறியுள்ளனர்.
60 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் ஜாதி அடிப்படையிலான கேலிகளுக்கும், அவதூறுகளுக்கும் ஆளாகியுள்ளனர்.
40 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு மற்றும் சலுகைகள் ஜாதி காரணமாக மறுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
2022இல் கூகுள் நிறுவனத்தில் ஜாதி ஒழிப்பு குறித்துப் பேசவிருந்த தேன்மொழி சவுந்தரராஜன் என்ற செயல்பாட்டாளரின் உரை, அங்குள்ள சில உயர்ஜாதி இந்திய ஊழியர்களின் கடுமையான எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டது. இது சிலிக்கான் வேலி நிறுவனங்களுக்குள் ஜாதிய ஆதிக்கம் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதைக் காட்டியது.
அமெரிக்காவில் தீண்டாமை என்பது நேரடியாகக் கடைப்பிடிக்கப்படாவிட்டாலும், சமூக மற்றும் கலாச்சார ரீதியாக அது வெளிப்படுகிறது:
ஜாதி அறியும் உத்திகள்
சாப்பாட்டு மேசையிலோ அல்லது தனிப்பட்ட உரையாடல்களிலோ “நீங்கள் சைவமா?”, “சொந்த ஊர் எது?”, “எந்தக் கல்லூரியில் படித்தீர்கள்?” போன்ற கேள்விகள் மூலம் ஒருவரின் ஜாதியைக் கண்டறியும் மறைமுக முயற்சிகள் நடக்கின்றன.
அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட ஜாதிச் சங்கங்கள் (எ.கா: தெலுங்கு, தமிழ் அல்லது வடஇந்திய ஜாதி அமைப்புகள்) தங்களுக்குள் ஒரு இணைப்புச் சங்கிலியை உருவாக்கி, வேலைவாய்ப்புகள் மற்றும் பரிந்துரைகளை தங்களின் ஜாதியினருக்கு மட்டுமே வழங்கிக் கொள்கின்றன.
பிரிட்டன், ஆஸ்திரேலியா நாடுகளில் பரவும் நவீன ஜாதிவெறி மற்றும் தீண்டாமை!
இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து பிரிட்டன் ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.
பிரிட்டனில் தீண்டாமை
பிரிட்டனில் வாழும் ஹிந்து சமுகத்தினரிடையே ஜாதியக் கட்டமைப்பு ஆழமாக வேரூன்றியுள்ளது.
தலித் அமைப்புகளின் அறிக்கையின்படி (Dalit Solidarity Network) பிரிட்டனில் வாழும் உயர்ஜாதி அல்லாத ஹிந்து மக்கள் பணியிடங்களிலும், சமூகக் கூடங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும் ஜாதியப் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.
பிரிட்டன் அரசின் சமத்துவ அலுவலகம் (Government Equalities Office) நடத்திய ஆய்வில், அந்நாட்டில் ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகள் (Caste discrimination) பணியிடங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சுகாதாரத் துறையில் நிலவுவது மிகவும் அதிகமாகிக் கொண்டு வருவது உறுதி செய்யப்பட்டது.
மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் பணிபுரியும் உயர்ஜாதி அல்லாத ஊழியர்கள், மேலாளர்கள் தங்களின் ஜாதியைத் தெரிந்துகொண்ட பிறகு பதவி உயர்வுகளை மறுப்பதும், ஒதுக்கி வைப்பதும் நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
பிரிட்டனில் உள்ள சைவ மற்றும் வைணவக் கோயில்கள் உயர் ஜாதி யினரால் மட்டுமே நிர்வகிக்கப் படுகின்றன 2017ஆம் ஆண்டு லண்டன் வெயிட்பீல்ட் பகுதியில் உள்ள ஹிந்து கோயில் ஒன்றில் ரவிதாஸிய சமூக (அருந்ததியர் போன்றது)இணையருக்கு திருமணம் நடத்திவைக்க கோயில் நிர்வாகம் மறுத்துவிட்டது.
மிகவும் கொடிய ஜாதியத் தீண்டாமை! ஆனால், கோவில் நிர்வாகம் கூறியதோ சரியாக குடியுரிமை ஆவணங்கள் வழங்கவில்லை, இணையரில் ஒருவர் பணி நிமித்தம் லண்டன் வந்துள்ளார் என்றெல்லாம் கதை கட்டியது அந்த ஹிந்து கோயில் நிர்வாகம். இதனால் வெகுண்டெழுந்த ‘ரவிதஸியா’ சமூகத்தினர் தங்களுக்கு எனத் தனி கோயிலைக் கட்டிக்கொண்டனர் அதன் பிறகு அந்த இணையருக்கு திருமணம் நடந்தது.
பொது இடங்களில் ஜாதி பார்த்துப் பழகுவது இன்று நாகரிக நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
அண்மையில் ‘யு ஆர் ஓஸ்வால்’ என்ற ஒரு ‘ஹேஷ்டேக்’ லண்டனில் பெரும் விவாதப் பொருள் ஆனது. “அதாவது நான் உயர்ஜாதி ஓஸ்வால் – நீங்களும் அதே ஜாதி என்றால் வாங்க பழகலாம் என்ற பொருளில் அது இருந்தது. அடுத்த சில நாட்களில் பல உயர்ஜாதியினர் பார்ப்பன பிரிவுகளிலும் இதே போல் ‘ஹேஸ்டேக்’ உருவாகி விட்டது. இது உயர்ஜாதி அல்லாதவர்களை மிகவும் இழிவு படுத்தும் ஒன்றாக மாறிப்போனது.
ஆஸ்திரேலியாவில் பரவும் ஜாதிய நச்சு
அண்மைய பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவிற்குப் புலம்பெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது.
இதனுடன் சேர்ந்து ஜாதியப் பாகுபாடுகளும் அங்கு வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளன.
ஆஸ்திரேலிய மனித உரிமைகள்
ஆணையத்தின் (AHRC) கவலை
ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பணியிடங்களில் ஜாதி சார்ந்த துன்புறுத்தல்கள் நடப்பதாக ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையத்திற்குப் புகார்கள் சென்றுள்ளன.
மெல்ஃபோர்ன் மற்றும் சிட்னி போன்ற நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங் களில் பயிலும் இந்திய மாணவர்கள், சக இந்திய மாணவர்களின் ஜாதி யைக் கண்டறிய ‘குடும்பப் பெயர்’, அவர்கள் வெஜ் அல்லது நான்வெஜ் மற்றும் அவர்களின் பூர்வீகம் எது போன்ற கேள்விகளை மறைமுகமாகக் கேட்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஜாதி தெரிந்தபின் தங்குமிடம் மறுக்கப்படுகிறது அல்லது விரட்டப் படுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் தங்களின் குறிப்பிட்ட ஜாதிப் பெயர்களில் (எடுத்துக்காட்டாக: ஜாட், ரெட்டி, கம்மா, ‘பிராமணர்’ சங்கங்கள்) முகநூல் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, தங்களுக் குள்ளேயே உதவிகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். இது மற்ற ஜாதி யினரைத் தனிமைப்படுத்தும் செயலாக மாறுகிறது.
அந்நாட்டு அரசுகள் இந்தச் சிக்கலை எதிர்கொள்ளச் சட்டப் பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.
பிரிட்டனின் சமத்துவச் சட்டம்: பிரிட்டனில் ஜாதியப் பாகுபாட்டைத் தடைசெய்யும் வகையில் இந்தச் சட்டத்தில் ‘ஜாதி’ என்ற வார்த்தையை இணைக்கப் பல ஆண்டுகள் போராட்டங்கள் நடைபெற்றன. இந்திய அமைப்புகளின் சில எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், பாகுபாடுகளுக்கு எதிரான தீர்ப்புகளில் ஜாதி ஒரு காரணியாகப் பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களின் நடவடிக்கை!
ஆஸ்திரேலியாவின் சில முன்னணி பல்கலைக் கழகங்கள் தங்களின் பன்முகத்தன்மை மற்றும் பாகுபாடற்ற கொள்கைகளில் ‘ஜாதி’ சார்ந்த பாகு பாட்டையும் ஒரு குற்றமாகச் சேர்க்கத் தொடங்கியுள்ளன.
“இந்தியாவை விட்டு ஒருவன் வெளியேறினாலும், அவனது மனதை விட்டு ஜாதி வெளியேறுவதில்லை.”
கல்வியும் நாகரிகமும் மனிதனைப் பக்குவப்படுத்தும் என்று நம்பப்படும் வேளையில், அமெரிக்கா பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளிலும் ஜாதிவெறி தீயாகப் பரவுவது மனிதகுலத்திற்கே பெருத்த பின்னடைவாகும்.
உலகளாவிய அரங்கில் இந்தியாவின் பெருமையைக் குலைக்கும் இந்த ஜாதிய நஞ்சை வேரறுக்க, புலம் பெயர்ந்த நாடுகளின் அரசாங்கங்கள் கடுமையான சட்டங்களைக் கொண்டுவருவதோடு, இந்தியச் சமூகமும் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அய்க்கிய நாடுகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது
அய்க்கிய நாடுகள் அமைப்பின் ஜாதிவெறி நிறவெறி மதவெறி தொடர்பான அறிக்கையில் மேலை நாட்களில் நடக்கும் ஜாதிவெறி தொடர்பாக சிறிய பகுதி மட்டுமே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் அமெரிக்காவில் கருப்பின மக்களை நிறவெறிப்பாகுபாட்டை காரணம் காட்டி இழிவுபடுத்தும் செயல்கள் அதிகரித்து வருவது மற்றும் விளையாட்டில் மதரீதியாக பாகுபாட்டை காட்டி குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் விளையாட்டு குழுவினருக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
