செங்கல்பட்டில் நடத்திய சுயமரியாதை முதல் மாகாண மாநாட்டில்,
துறைமுகம் உள்ளிட்ட நிறுவனங்கள் பொது நிறுவனங்களாக இருக்க வேண்டும் என்று
இந்தியாவிலேயே முதல்முறையாகத் தீர்மானம் போட்டு –
வேலைத் திட்டமாகவும் அறிவித்த இயக்கம், பெரியார் இயக்கமே!
மாநில உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக உயிருக்குத் துணிந்த வீரர்கள் இருக்கிறோம்!
நெய்வேலி, ஜூலை 10 செங்கல்பட்டில் நடத்திய சுய மரியாதை முதல் மாகாண மாநாட்டில், துறைமுகம் உள்ளிட்ட நிறுவனங்கள் பொது நிறுவனங்களாக இருக்க வேண்டும் என்று இந்தியாவிலேயே முதல்முறையாகத் தீர்மானம் போட்டு – ேவலைத் திட்டமாகவும் அறிவித்த இயக்கம், பெரியார் இயக்கமே! மாநில உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக உயிருக்குத் துணிந்த வீரர்கள் இருக்கிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவதைக் கண்டித்துத் தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி கண்டன உரை
ஆசிரியர் கி.வீரமணி கண்டன உரை
கடலூர் மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில், நெய்வேலி நகரம் முக்கிய கடைவீதியில் – காமராஜர் சிலை அருகில் 7.7.2026 அன்று காலை 10.30 மணிக்கு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவதைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.
அவரது கண்டன உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
நெய்வேலியில், அற்புதமானப் பள்ளிக்கூடம். நெய்வேலி மருத்துவமனையில், நெய்வேலி நிர்வாகத்தினால் நடத்தப்பட்டபோது, நல்ல உயர்ந்த, சிறந்த மருத்துவர்களை எல்லாம் நியமித்தார்கள். இன்றைக்கு நான் கேள்விப்பட்டேன், அதுவும் தனியார் மயமாகிவிட்டது என்று. எல்லாமே தனியார் மயம், தனியார் மயம், தனியார் மயம்!
ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி.யினுடைய கொள்கையே அரசுத் துறையே இருக்கக்கூடாது என்பதுதான்!
காங்கிரஸ் ஆரம்பித்து வைத்தது; அது சிறிய அளவில் தொடங்கியது. எப்பொழுதும் முதலில் சிறிய அளவில் ஓட்டைப் போட்டால், சிறிய அளவுள்ள கொசு உள்ளே போகிற அளவிற்கு இருந்தால், பிறகு பிறகு யானையே உள்ளே போகும். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே, இன்றைக்கு என்ன ஆயிற்று? புகழேந்தி அவர்கள் சொன்னதைப் போல, ஆர்.எஸ்.எஸ்.சினுடைய கொள்கை, பி.ஜே.பி.யினுடைய கொள்கை என்ன வென்றால் அரசுத் துறையே இருக்கக்கூடாது. எல்லாமே தனியார்த் துறையாக இருக்கவேண்டும்; எல்லாமே மார்வாடிகள் வசம் இருக்க வேண்டும். எல்லாமே வடநாட்டு பெருமுதலாளிகளிடம் இருக்க வேண்டும் என்பதுதான்.
அந்த வகையிலேதான், ஒன்றியத்தில் மோடி தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி, மும்முரமாகத் தனியார் மயத்தை வளர்த்துக் கொண்டுள்ளது. அதற்கு முன்னால், வாஜ்பேயி தலைமையிலே இருந்த ஆட்சி – நேரு அவர்கள், காங்கிரஸ் கட்சி ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த போது கூட, அவர்கள் எல்லாம் ஓரளவுக்குத்தான் தனியார் மயத்திற்கு இடம் கொடுத்தார்கள்.
ரயில்வே, விமான நிலையங்கள் உள்ளிட்டவை பொதுத் துறையாகவேண்டும் என்று தீர்மானம் போட்ட ஒரே இயக்கம் திராவிடர் கழகம்!
செங்கல்பட்டில் நடத்திய சுயமரியாதை முதல் மாகாண மாநாட்டில், இந்தியாவிலேயே முதல் முறையாக அத்தனைப் பொது நிறுவனங்களும், ரயில்வே ஆனாலும், துறைமுகங்களானாலும் அவையெல்லாம் மக்கள் சொத்தாக இருக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டத் தலைவர் தந்தை பெரியார் – தீர்மானம் போட்ட இயக்கம் நம்முடைய இயக்கம். வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன.
பிறகு அது படிப்படியாகச் செயலுக்கு வந்தது. நேரு அவர்கள் பிரதமராக இருக்கும்போது, அந்தப் பொதுத்துறை வளர ஆரம்பித்தது. ஆனால், வங்கி கள் உள்பட இந்திரா காந்தி காலத்திலே கூட தேசிய மயமாக்கப்பட்டது. ஆனால், அவை இன்றைக்குத் தலைகீழாக மாற்றப்படுகிறது. பொது நிறுவனங்கள் எல்லாம் பலியாகலாமா? இப்பொழுது முழுக்க முழுக்க பங்குகள் விற்பனை என்று சொல்லி, நெய்வேலியும், இன்னும் சில ஆண்டுகள் நாமெல்லாம் ‘மவுன குருசாமி’களாக இருந்தால் என்ன ஆகும் என்றால், அதானி இங்கே இருப்பார் – அம்பானி இருப்பார் – டாட்டா இருப்பார் – நம் மக்கள் இருக்க மாட்டார்கள்.
தமிழ்நாடு அரசு, ‘‘வேடிக்கைப் பார்த்துக் கொண்டி ருக்கிற அரசாக, ஒரு பொம்மை அரசாக இருங்கள். இல்லையானால் உங்களுக்கு நிதி கொடுக்க மாட்டோம்’’ என்று மிரட்டுவார்கள். மு.க.ஸ்டாலின் மாதிரி ஒரு முதலமைச்சர் இருந்தால், அதை எதிர்த்து நிற்பார். ஆனால், மற்றவர்கள், அதனை எதிர்த்து நிற்பார்களா? அல்லது ஜோசியம் கேட்டுவிட்டு, எதிர்க்கலாமா, வேண்டாமா? என்று பார்க்கக்கூடிய நிலை இருக்கும்.
மாநில உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக உயிருக்குத் துணிந்த வீரர்கள் இருக்கிறோம்!
எப்படி இருந்தாலும், எங்களை மாதிரி இருக்கக்கூடிய உயிருக்குத் துணிந்த வீரர்கள் இருக்கிறோம். இந்த உரிமைகளைக் காப்பாற்று வதற்காக.
விமானத் துறையா, இப்பொழுது அது யாரிடம் இருக்கிறது? டாட்டா விடம் இருக்கிறது.
ஏர் இந்தியா இப்பொழுது கிடையாது.
இந்தியாவைவிட சிறிய நாடு சிங்கப்பூர்; சிறிய நாடு குவைத் – இந்தியாவிலிருந்து பல பேர் அங்கே போகிறார்கள். அந்த சிறிய நாடுகள் எல்லாம் விமான நிலையங்களை அரசு நிறுவனங்களாக நடத்துகின்றன. ஆனால், இந்தியாவில் என்ன நிலை? பல காலம் அரசு நடத்திய ஏர் இந்தியா விமானங்கள் எல்லாம் யாரிடம் இருக்கிறன்றன என்றால், ஒன்றிய அரசாங்கத்திடம் இல்லை. அதற்குப் பதிலாக விமானம் டாட்டாவிடம் – விமான நிலையம் அதானியிடம். அதே மாதிரி துறைமுகங்கள் அதானியிடம், மற்ற இடங்கள் அம்பானியிடம்
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தால்
ஒன்றிய அரசுக்கு நட்டம் இல்லை!
ஒன்றிய அரசுக்கு நட்டம் இல்லை!
ஆகவே, அனைத்தும் தனியார் துறையாகி வருகின்றன. இந்த நெய்வேலி நிறுவனம் மிகப்பெரிய அளவிற்கு லாபம் தரக்கூடிய நவரத்தினம் இது. இதனால், ஒன்றிய அரசுக்கு நட்டம் இல்லை. ‘‘தனியாருக்கு ஏன் விற்கிறீர்கள்?’’ என்று நம்முடைய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால், ‘‘அந்தப் பொதுத் துறை நிறுவனம் நட்டத்தில் நடக்கிறது; ஆகவே, தனியாரிடம் கொடுக்கிறோம்’’ என்று பதில் சொல்கிறார்கள்.
நம்மாட்களில் சிலர், புரியாமல் சரி, சரியென்று தலையாட்டுவார்கள்.
நட்டத்தில் நடந்தாலும் விற்கிறார்கள்;
லாபத்தில் நடந்தாலும் விற்கிறார்கள்!
லாபத்தில் நடந்தாலும் விற்கிறார்கள்!
பொதுத்துறை நிறுவனம் ஏன் நட்டத்தில் நடக்கிறது? நிறுவனத்தை நடத்தத் தெரியாத அதிகாரிகளை ஏன் நியமிக்க வேண்டும்? ஆகவே, நிர்வாகத்தை நன்றாக நடத்தக்கூடிய உணர்வுள்ளவர்களுக்கு, பொதுத்துறையை நம்பக்கூடியவர்களுக்கு, நாட்டு டைமைத் தத்துவத்தை ஏற்கக் கூடியவர்களுக்கு அந்தப் பொறுப்பைத் தந்தால், அந்த நிறுவனம் நட்டத்தில் நடக்காது.
சரி, நட்டத்தில் நடக்கிறது; ஆகவே, தனியாருக்குக் கொடுக்கிறோம், அது ஒரு ஜஸ்டிபிகேஷன் – நியா யப்படுத்துகிறார்கள். ஏன்யா, லாபத்தில் நடக்கிற பொதுத் துறை நிறுவனத்தை ஏன் விற்கிறீர்கள்? என்று கேட்டால், அதற்கு என்ன பதில் சொல்கிறார்கள் தெரியுமா?
லாபத்தில் நடக்கும்போது விற்றால்தான் வாங்குவார்கள் என்று சொல்கிறார்கள்.
என்ன விசித்திரமான வேடிக்கை பாருங்கள். நட்டத்தில் நடந்தாலும் விற்கிறார்கள். லாபத்தில் நடந்தாலும் விற்கிறார்கள்.
நீண்ட நாள்களுக்கு முன்பு, நாடாளுமன்றத்தில் நம்மாட்கள் கேட்ட கேள்விக்கு ஒரு பதிலைச் சொன்னார்கள்.
‘‘தமிழ்நாட்டில், பெரிய பெரிய தொழிற்சாலைகள் இல்லையே – அவற்றை அமைக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதில்லையே – ஏன்?’’ என்று கேட்ட கேள்விக்கு,
‘‘தமிழ்நாட்டில், பெரிய அளவிற்கு ரயில் வசதி இல்லை; ஆகவே, அங்கே பெரிய தொழிற்சாலைகள் இல்லை’’ என்று பதில் சொன்னார்கள்.
‘‘சரிங்க, தமிழ்நாட்டில் ஏன் ரயில் வசதி இல்லை?’’ என்று கேட்டால்,
‘‘ஏராளமான தொழிற்சாலைகள் இல்லை; அதனால் ரயில் வசதி ஏற்படுத்தவில்லை’’ என்று பதில் சொல்கி றார்கள்.
எவ்வளவு முரண்பாடான, மக்களை முட்டாளாக் கக்கூடிய வாதங்கள் என்பதை நினைத்துப் பார்ருங்கள்.
சொந்த நிலத்தைக் கொடுத்தவர்களுக்கு நெய்வேலி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இல்லை!
அது மாதிரி நண்பர்களே, நாம் பாடுபட்டு, நம்முடைய விவசாயிகள் நெற்றி வேர்வை விழ உழைத்த நிலத்தையெல்லாம் கொடுத்துவிட்டு, பஞ்சைகளாய், பராரிகளாய் இருந்து பிள்ளைகளைப் படிக்க வைத்திருக்கிறார்கள். ‘திராவிட இயக்கத்தினர்’ ஆட்சிக்கு வந்து, எல்லோரையும் படிக்க வைத்தார்கள். காமராஜர் காலத்தில், இதோ சிலையாக இருக்கிறாரே, இந்தக் காமராஜர் காலத்திலே, குலத்தர்மத்தை ஒழித்து, தந்தை பெரியார் வழியிலே நின்று, எல்லாரும் படித்தவுடனே இன்றைக்குப் படித்தவர்களுக்கு வேலை இல்லை. சொந்த மண்ணில் இருக்கிறவர்களுக்கு வேலை இல்லை. அதிலும் கூட, சொந்த மண்ணை, நிலத்தைக் கொடுத்தவர்களுக்கு இந்த நெய்வேலி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இல்லை. இந்தக் கொடுமைகளைக் கண்டிப்பதற்கு எங்களைத் தவிர, சில முற்போக்காளர்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? என்பதை நீங்கள் நன்றாக நினைத்து பார்க்க வேண்டும்.
இந்நிறுவனத்திற்கு ஓர் ஆபத்து என்றால், யார் நிற்கிறார்கள்? இந்நிறுவனத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டு, உயிர் போனால், அது யாருடைய உயிர்? நம்முடைய ஆட்களின் உயிர் அல்லவா? அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இங்கு என்ன நடந்தது? என்று சொல்லும்போதுதான், இந்தச் செய்திகளைக் கொஞ்சம் அருள்கூர்ந்து நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். ஏதோ போராட்டம் நடத்தினோம், விளம்பரம் வாங்கி னோம் என்று சொல்வதற்கு, நாங்கள் என்ன ஓட்டு வாங்குற கட்சியா?
எங்களுக்கு என்ன நட்டம்?
யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று சொல்கிறோம். அதைக் கேட்டால், நல்ல அரசாங்கம் கிடைக்கும். கேட்கவில்லையென்றால், அதனுடைய விளைவுகளை அனுபவிக்கவேண்டும். அவ்வளவு தானே தவிர, எங்களுக்கு என்ன நட்டம்? வங்கியில் ஒரு காசுகூட போடாதவனுக்கு, எந்த வங்கி நொடிந்தால், எங்களுக்கு என்ன நட்டம்? நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஏற்கெனவே இத்தகைய முயற்சிகள் 2006 இல் செய்யப்பட்ட போது, தமிழ்நாடு அரசின் எதிர்ப்பால் அம் முடிவு கைவிடப்பட்டது. பின்னர் 2013 இல் 10% பங்குகளை விற்க முயற்சி செய்யப்பட்ட போது, அதில் 5% பங்குகளைத் தமிழ்நாடு அரசு கேட்டபோதும், முன்பே பல நிறுவனங்களுக்கு 6.44% பங்குகள் விற்பனை செய்யப்பட்டுவிட்ட நிலையில், 3.56% பங்குகளைத் தமிழ்நாடு அரசே வாங்கியது.
தற்போதைய தமிழ்நாடு அரசாங்கமும் இந்தக் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்!
முதலில், அப்போது எழுந்த அந்த எதிர்ப்பிற்கு, அன்றைய அரசாங்கமும் சேர்ந்து ஒத்துழைத்தார்கள். இப்பொழுதும் நாங்கள் நினைக்கிறோம். இந்த அரசாங்கமும் இந்தக் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். தற்போதைய முதலமைச்சரும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்களுடைய உணர்வுகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். ஆட்சிகள் வரும், போகும்; அது வேறு. அதே நேரத்தில், நியாயங்கள் தோற்கக் கூடாது. நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அதுவும் சமூக நீதி, மக்களுடைய உரிமைகளுக்கு – மக்கள் சொத்து – இந்த மக்கள் சொத்தை எடுத்துத், தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது என்ன நியாயம்? என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்
10 சதவிகித பங்குகளை விற்க
முயற்சி செய்தார்கள்!
முயற்சி செய்தார்கள்!
2013 இல் 10% பங்குகளை விற்க முயற்சிக்கப்பட்ட போது, முதலில் ஒட்டகம் மெதுவாக உள்ளே நுழையும்; ஒட்டகம் உள்ளே நுழைந்தால், என்ன அர்த்தம்? கூடாரம் போட்டவன் கொஞ்ச நாளில் வெளியே போய் விட வேண்டும். பிறகு ஒட்டகம்தான் உள்ளே இருக்கும். அதுபோன்று மொத்தமாக விற்றால், பலத்த எதிர்ப்பு வரும். தமிழ்நாட்டில் புரட்சி வரும். ஆகவே, அப்படிச் செய்யக்கூடாது. அதற்குப் பதிலாகக் கொஞ்சம் கொஞ்சமாக – அதாவது சுரண்டி சுரண்டி சுரண்டி – சில பேர் என்ன செய்வான் தெரியுமா? தன்னுடைய வயலின் எல்லைக்கு அடுத்தபடியாக உள்ள எல்லைக் கல்லை மாற்றவேண்டும் என்றால், ஒரே நாளில், எல்லைக் கல்லை மாற்றாமாட்டான். கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்துவான். அது மாதிரி, இவர்கள் என்ன செய்தார்கள் என்றால், 10 சதவிகித பங்குகளை விற்க முயற்சி செய்தார்கள். அதனை எதிர்த்து நாங்கள் போராடினோம். அதில் அய்ந்து சதவிகிதப் பங்குகளை தமிழ்நாடு அரசு கேட்டது. பல நிறுவனங்களுக்கு 6.44 சதவிகிதப் பங்குகள் விற்பனை செய்தது போக, மீதமுள்ள 3.56 சதவிகித பங்குகளை தமிழ்நாடு அரசே வாங்கியது.
இந்த வரலாற்றினைத் தெரிந்துகொள்ளவேண்டும் நீங்கள்.
(தொடரும்)
