இஸ்தான்புல், ஜூலை 10- அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. அண்மையில் அமெரிக்க தாக்குதல்களால், பொதுமக்கள் உயிரிழந்ததாக டெஹ்ரான் தெரிவித்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் பதற்றம் அதிகரித்து வருகின்றன.
இந்தநிலையில், ஈரானின் புஷஹ்ர் அணுமின் நிலைய வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதியில் அமெரிக்காவின் ஏவுகணை ஒன்று தாக்கியுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலால் அணுமின் நிலையத்தின் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கோ அல்லது அணுஉலைக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கதிர்வீச்சு கசிவு போன்ற ஆபத்துகள் எதுவும் கண்டறியப்படவில்லை என பன்னாட்டு அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.
இதனிடையே அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக, குவைத், பஹ்ரைன், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ இலக்குகளை தாக்கியது ஈரான் ராணுவம்.
குவைத்தில் உள்ள அமெரிக்காவின் பாட்ரியோட் ஏவுகணைத் தடுப்பு அமைப்பு, கத்தாரில் உள்ள சாட்டிலைட் ஆண்டெனா மய்யம், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ எரிபொருள் சேமிப்பு நிலையங்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சீனாவில் பலத்த மழை,
வெள்ளத்திற்கு 39 பேர் உயிரிழப்பு
பீஜிங், ஜூலை 10- சீனாவில் பெய்து வரும் கனமழை மற்றும் கடும் வெள்ளத்திற்கு 39 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மேசாக் புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் குவாங்சி பிராந்தியத்தில் உள்ள அணை உடைந்தது. அணை வெள்ள நீர் நான்னிங் நகரில் புகுந்ததில் 26 பேர் உயிரிழந்தனர். வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை மொத்தம் 39 பேர் உயிரிழந்து விட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளத்தில் தப்பிய பாம்புகள்: குவாங்சி மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் வளர்ப்பு பண்ணைகளில் இருந்து 900க்கும் மேற்பட்ட நச்சு பாம்புகள் வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குவாங்சியில் உள்ள பாம்புப் பண்ணையை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அதில் வளர்க்கப்பட்ட பாம்புகள் கிராமங்களுக்குள் புகுந்துள்ளன. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
