கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 9.7.2025

3 Min Read

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* அயோத்தி ராமன் கோயில் நிதி வசூலில் பெரும் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போலி ரசீதுகள் மூலம் பக்தர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டதோடு, போலி உண்டியல்கள் மற்றும் போலியான QR குறியீடுகள் (QR Code) மூலமாகவும் மோசடி நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கோயில் நிதி நிர்வாகத்தின் மீதான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

* மத்தியப் பிரதேசத்தின் பக்ளாமுகி கோயிலில் நன்கொடை முறைகேடு: விசாரணைக்கு உத்தரவு: மத்தியப் பிரதேசத்தில் உள்ள பக்ளாமுகி கோயிலில், பக்தர்களின் நன்கொடைகளை முறைகேடாக சுரண்டியதாகக் கூறப்படும் ‘இணை நன்கொடை முறை’ (Parallel Donation System) தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அயோத்தி ராமன் கோயில் நன்கொடை விவகாரம் குறித்து எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, இந்த புதிய முறைகேடு குற்றச்சாட்டு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

* யு.ஜி.சி.-நெட் வினாத்தாள் கசிவு: “பொறுப்புக்கூறலை எதிர்பார்ப்பது வீண்” – ராகுல் காந்தி: புதிய யு.ஜி.சி.-நெட் (UGC-NET) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் மற்றும் தர்மேந்திர பிரதான் மீது ராகுல் காந்தி விமர்சனம். சமூகவியல் பாடத்திற்கான வினாத்தாள் பல மாநிலங்களில் ரூ. 2.25 லட்சத்திற்கு விற்கப்பட்டதாக கூறி, 100 பக்கங்கள் கொண்ட கசிந்த பிடிஎப் ஆவணம் குறித்த குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பகிர்ந்துள்ளார்.

தி இந்து

* அரசுப் பள்ளிகளில் ஹிந்து மத பிரார்த்தனைகள்: தடை கோரிய மனு தள்ளுபடி. மாநில அரசுப் பள்ளிகள் மற்றும் மாநில நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சரஸ்வதி வந்தனா, குரு மந்திரம், காயத்ரி மந்திரம், சாந்தி மந்திரம் மற்றும் போஜன் மந்திரம் ஆகியவற்றை ஓதுவதை கட்டாயமாக்கி சத்தீஸ்கர் அரசு கடந்த ஜூன் 12-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

* மதம் மாறியவர்களின் பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து: தமிழ்நாடு அரசு மேல்முறையீடு. இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்’ என்ற உரிமையைக் கோர முடியாது என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மதம் மாறியவர்களும் பிற்படுத்தப்பட்டோர் சலுகைகளைப் பெற அனுமதிக்கும் 2024-ஆம் ஆண்டு அரசாணை அரசியலமைப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

* கோயில் நன்கொடை விவகாரம்: சம்பத் ராயை கைது செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல். அயோத்தி கோயில் நன்கொடை தொடர்பான சர்ச்சையை முன்னிட்டு, சிறீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் பொதுச் செயலாளர் சம்பத் ராயை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும், அறக்கட்டளை உறுப்பினர்கள் தேர்வில் ஏற்பட்டதாக கூறப்படும் தவறுகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தி டெலிகிராப்

* “விபி ஜி ராம் ஜி திட்டம் (VB-G RAM G) திட்டத்தை ‘வேலைக்கான உரிமையை பறிக்கும் செயல்’ என்று காங்கிரஸ் விமர்சனம்; கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிகாரமளித்த வேலைவாய்ப்புக்கான அரசியல மைப்பு உரிமையை பறித்து விட்டு, மாநில அரசுகள் மீது தாங்க முடியாத நிதிச் சுமையை இந்த திட்டம் சுமத்துகிறது” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு.

டைம்ஸ் ஆஃப் இந்தியா

* உயர்கல்வி மொத்தச் சேர்க்கை விகிதத்தில் (GER) இந்தியா 30% மட்டுமே எட்டியுள்ள நிலையில், 2035-க்குள் 50% இலக்கை அடைவது சவாலாக உள்ளது. ஆனால், தமிழ்நாடு 52.3% GER-அய் எட்டி தேசிய இலக்கை ஏற்கெனவே கடந்துள்ளது. பல பாஜக ஆளும் மாநிலங்கள் இன்னும் தேசிய சராசரியை எட்டாத நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

* சுற்றுச்சூழல் அமைச்சரின் நான்கு உதவியாளர்கள் நீக்கப்பட்டதை தொடர்ந்து, ஒன்றிய அரசின் நியமன நடைமுறைகளில் “நிர்வாகச் சீர்குலைவு” இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. “நிதி அளித்து தொழில் பெறும் கலாச்சாரத்தின் வெளிப்பாடாக இது இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது” என ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *