பொது ‘டெட்’ தேர்வு அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மீது ஆசிரியர்கள் அதிருப்தி

2 Min Read

சென்னை, ஜூலை 10-  பொது ‘டெட்’ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடாமல் டிஆர்பி காலதாமதம் செய்து வருவதாக இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், பி.எட் பட்டதாரிகள் அதிருப்தியில் உள்ளனர்.

ஒன்றிய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு (‘டெட்’) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி, ஆண்டுக்கு 2 தடவை கட்டாயம் ‘டெட்’ தேர்வு நடத்தப்பட வேண்டும். இந்த விதிமுறையின்படி, ஒன்றிய அரசு பள்ளிகளுக்கான ‘சி-டெட்’ தேர்வு ஆண்டுக்கு 2 தடவை திட்டமிட்டபடி நடத்தப்படுகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் ‘டெட்’ தேர்வு நடத்தும் ஆசிரியர் தேர்வு வாரியமோ (டிஆர்பி) இந்த விதிமுறையை இதுவரை எந்த ஆண்டிலும் அமல்படுத்தல்லை. ஆண்டுக்கு ஒரு ‘டெட்’ தேர்வு நடத்தப்பட்டாலே பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. கடைசியாக ‘டெட்’ தேர்வு கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பரில் நடத்தப்பட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி, இந்த ஆண்டுக்கான முதலாவது பொது ‘டெட்’ தேர்வுக்கு கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூலை மாதத்தில் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். 2ஆவது தேர்வுக்கான அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டு டிசம்பரில் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால், முதலாவது தேர்வுக்கான அறிவிப்புகூட இன்னும் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ‘டெட் தேர்வு ஜூலை 4,5ஆம் தேதிகளில் தேர்வு நடத்தப் பட்டது. இந்தத் தேர்வுக்கு பணியில் இல்லாத ஆசிரியர்கள் அனுமதிக் கப்படவில்லை. தற்போது பள்ளிகளில் பணிபுரியாத இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இந்த ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட் முடித்தவர்கள் பொது ‘டெட்’ தேர்வுக்கான அறிவிப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட் முடித்தவர்கள் கூறும்போது, “என்சிடிஇ விதிமுறையின்படி, ‘சி-டெட்’ தேர்வு ஆண்டுக்கு 2 தடவை திட்டமிட்டபடி நடத்தப்படுகிறது. ஆனால், டிஆர்பி மட்டும் ஆண்டுக்கு ஒரு டெட் தேர்வைகூட நடத்த காலதாமதம் செய்வது ஏன் என்று தெரியவில்லை. எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல் பொது ‘டெட்’ தேர்வுக்கான அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும். அதேபோல் தேர்வு முடிவையும் விரைந்து வெளியிட வேண்டும்” என்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *