கொல்கத்தா, ஜூலை 8 மேற்கு வங்க மாநிலத்தில் 11 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக் குள்ளாக்கப்பட்டு, உயிருடன் குளத்தில் வீசி கொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
பரிசுப் பொருள் வாங்க
மேற்குவங்க மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், பரூய்பூர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர், கடந்த 4.7.2026 அன்று தனது தோழியின் பிறந்தநாளுக்கு பரிசுப் பொருள் வாங்குவதற்காக வெளியில் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், பதற்றமடைந்த பெற் றோரும் உறவினர்களும் பல இடங்களில் தேடியுள்ளனர். சிறுமி கிடைக்காததைத் தொடர்ந்து, பரூய்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது.
மீட்கப்பட்ட உடல்
புகாரின் பேரில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த 5.7.2026 அன்று அங் குள்ள ஒரு குளத்தில் இருந்து சிறுமியின் உடல் பிணமாக மீட்கப்பட்டது.
சிறுமியின் உடற்கூராய்வு (Post-mortem) அறிக்கை குறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில்”சிறுமியின் பிறப்புறுப்பில் கடுமையான காயங்கள் உள்ளன. உடலின் பல்வேறு பகுதிகளில் கடித்ததற்கான அடையாளங்களும், தலையில் பலத்த பொருளால் தாக்கப் பட்டதற்கான தடயங்களும் கண்டறியப் பட்டுள்ளன. மிகக் கொடூர மாக தாக்கப்பட்டு, சிறுமி உயிருடன் குளத்தில் வீசப்பட்டுள்ளார். நீரில் மூழ்கியே அவர் உயிரிழந்துள்ளார்” என்று தெரிவித்தார்.
காவல்துறை விசாரணை
இந்த கொடூரக் கொலை தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்டமாக இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஆனந்த் சர்க்கார் என்பவரை நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த நிகழ்வு குறித்து விசாரிக்க மாநில அரசு 6 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.
இதற்கிடையில், இந்த கொடூரச் செயலில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஏற்பட்ட பதற்றத்தில் காவல்துறையின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.
மம்தா மெழுகுவர்த்தி பேரணி
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நீதி கோரியும் மேற்குவங்க முன்னாள் முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா தனது காளிகாட் இல்லத்தில் இருந்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடத்தினார். இந்தப் பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டோலா சென், பிரதிமா மண்டல் மற்றும் டெரைக் ஓ பிரையன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு, சிறுமிக்கு நீதி கோரும் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டவாறு சென்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.
