தமிழ்நாடு அரசு 6 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை, ஜூலை 7- தமிழ்நாடு ‘லோக் ஆயுக்தா’ சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரிய பொதுநல மனுவுக்கு, ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக, ஒன்றிய அரசால் 2013ஆம் ஆண்டு ‘லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்’ கொண்டுவரப்பட்டது. இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் 2018ஆம் ஆண்டு ‘தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம்’ இயற்றப்பட்டு, அதே ஆண்டு நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்தது.
பொதுநல வழக்கு
இந்நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த வி.ஜீவகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
‘லோக் ஆயுக்தா’ இணையதள விவரங்களின்படி, 2019 முதல் 2024 வரை 617 புகார்கள் முடிக்கப்பட்டுள்ளன. 2025 டிசம்பர் வரை 137 புகார்கள் நிலுவையில் உள்ளன. ஆனால், இதில் எத்தனை வழக்குகளில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, நிலுவை வழக்குகளின் தற்போதைய நிலை என்ன போன்ற விவரங்கள் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை.
விதிமீறல் அரசாணை
‘லோக் ஆயுக்தா’ செயலாளராக, துணை செயலாளர் அந்தஸ்து கொண்ட அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால், ஓய்வு பெற்ற அல்லது பணியில் உள்ள மாவட்ட நீதிபதியை செயலாளராக நியமிக்கும் வகையில், விதிகளை திருத்தி 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இது ஒன்றிய அரசின் முதன்மைச் சட்டத்தை மீறும் செயலாகும். எனவே, செயலாளர் நியமனம் தொடர்பாக விதிகளை திருத்தி வெளியிடப்பட்ட அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்; ‘லோக் ஆயுக்தா’ சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.
நீதிமன்ற விசாரணை மற்றும் உத்தரவு
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர்கள் எம்.வேல்முருகன் மற்றும் கிரிஜா வேல்முருகன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து 6 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டுத் துறை, உள்துறைச் செயலாளர் மற்றும் பொதுத்துறைச் செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
பயணிகளுக்கான போதிய வசதிகள் இல்லாமையால்
சென்னை விமான நிலையத்தின் தரவரிசை தொடர்ந்து சரிவு!
5ஆவது இடத்தையும் இழக்கும் அபாயம்!
சென்னை, ஜூலை 7- தரவரிசையில் சென்னை விமான நிலையங்கள் பின் தங்கிய நிலையில், தற்போது உள்ள 5ஆவது இடத்தையும் கொல்கத்தாவிடம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒருகாலத்தில் டில்லி, மும்பைக்கு அடுத்தபடியாக நாட்டின் 3ஆவது பரபரப்பான விமான நிலையமாக இருந்த சென்னை, தற்போது பெங்களூரு மற்றும் அய்தராபாத்துக்கு பின்னால் தள்ளப்பட்டுள்ளது. இப்போது உள்ள 5-வது இடத்தையும் கொல்கத்தாவிடம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பயணிகளுக்கான போதிய வசதிகள் இல்லாமை. ஓடுபாதை (ரன்வே) நெரிசல் மற்றும் விமான நிறுவனங்கள் சேவைகளை குறைத்து வருவது போன்ற காரணங்களால் சென்னை விமான நிலையத்தின் தரவரிசை தொடர்ந்து சரிந்து வருகிறது.
பயணிகள்
இந்திய விமான நிலைய ஆணையத்தின் கடந்த மே மாதம் புள்ளிவிவரங்களின்படி, கொல்கத்தா விமான நிலையம் 18.70 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளது. சென்னை விமான நிலையம் 19.04 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளது. இரண்டிற்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 34 ஆயிரம் பயணிகள்தான். விமான இயக்கங்களிலும் கொல்கத்தா வேகமாக முன்னேறி வருகிறது. மே மாதத்தில் சென்னை விமான நிலையத்தில் 13,025 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், கொல்கத்தாவில் 12,080 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. வித்தியாசம் வெறும் 945 விமானங்களாக மட்டுமே உள்ளது.
இருக்கை திறன்
ஏப்ரல் மாதத்தில் 6ஆவது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை, மே மாதத்தில் மீண்டும் 5ஆவது இடத்தை பிடித்தாலும், அதன் முன்னிலை மிகவும் குறைவாகவே உள்ளது. சென்னையின் உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்த 14.85 லட்சத்தில் இருந்து இந்த ஆண்டு 13.93 லட்சமாக, 6.2 சதவீதம் குறைந்துள்ளது.
மாறாக, கொல்கத்தாவில் உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை 15.96 லட்சத்தில் இருந்து 16.59 லட்சமாக, 4 சதவீதம் உயர்ந்துள்ளது. அய்தராபாத் விமான நிலையம் சென்னையை விட மேலும் முன்னிலை பெற்றுள்ளது. மே மாதத்தில் அய்தராபாத் 25.49 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளது.
சென்னை 19.04 லட்சம் பயணிகளை மட்டுமே கையாண்டுள்ளது. விமான இயக்கங்களிலும் அய்தராபாத் 17,306 விமானங்களை கையாண்டுள்ளது. சென்னை 13,025 விமானங்களை மட்டுமே கையாண்டுள்ளது.
ஜூன் மாதத்தில் நாட்டின் பரபரப்பான 10 விமான நிலையங்களில் 7 விமான நிலையங்களில் புறப்படும் விமானங்களின் இருக்கை திறன் குறைந்துள்ளது. அதில் அய்தராபாத்தில் 18.5 சதவீதமும், சென்னையில் 16.6 சதவீதமும், கொல்கத்தாவில் 11 சதவீதமும் சரிவு பதிவாகியுள்ளது.
இருப்பினும், சென்னை விமான நிலைய அதிகாரிகள். தற்போது நடைபெற்று வரும் டாக்ஸிவே மற்றும் ஒருங்கிணைந்த முனைய பணிகள் முடிவடைந்தால் விமான நிலையத்தின் செயல்திறன் கணிசமாக மேம்படும் என்று தெரிவித்துள்ளனர்.
