திராவிடர் கழகத்தின் களப்பணிகள் வரலாற்றில் குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்டு மிகச்சிறப்பாக நடைபெற்ற நிகழ்வுகள் ஏராளம் உண்டு. சேலத்தில் 4.7.2026, சனிக்கிழமை அன்று காலையில், கே.எம்.பி.திருமண அரங்கில் நடைபெற்ற பொதுக்குழு நிகழ்ச்சி, அவற்றையெல்லாம் மிஞ்சி விட்டது. கழகத்தின் தலைவர், திராவிடர் கழக வரலாற்றில் திருப்பம் தந்த சேலத்தில் பொதுக்குழு நடைபெறும் என்று குறுகிய கால இடைவெளியில் அறிவித்தார். அந்த பொதுக்குழுவைத்தான் வரலாற்றில் இடம் பிடிக்கக்கூடிய வகையில் சேலம் மாவட்டத் தோழர்கள், மாவட்டத் தலைவர் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் வழிகாட்டுதலில் செவ்வனே நடத்தி முடித்திருக்கின்றனர். அனைத்துத் தோழர்களும் நேரம் காலம் பார்க்காமல்; தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், கழகத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி பணிகளில் ஈடுபட்டதால்தான் இதெல்லாம் சாத்தியமாயிற்று!
ஆம், அப்படித்தான் ஒவ்வொன்றை யும் செய்து அசத்தியிருந்தார்கள் தோழர் கள். எத்தனையெத்தனை பணிகள்? உணவு, தங்கும் இடம், சுவரெழுத்துகள், விளம்பரப் பதாகைகள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்தல், அதைவிட முக்கியமாக நிகழ்ச்சிக்குத் தேவையான நிதியை நன்கொடை மூலம் திரட்டல். இதற்காக அமைக்கப்பட்ட குழுவினருடன், சின்னக் கடைவீதி, பழைய பேருந்து நிலையம். கள்ளால் குத்து, உழவர் சந்தை. காய்கறிச் சந்தை ஆகிய பகுதிகளில் கடை கடையாகச் சென்று துண்டறிக்கைகள் வழங்கி, நன்கொடை திரட்டி அதிலும் முத்திரை பதித்திருந்தார்கள். இப் பணிகளையெல்லாம் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு, தோழர்களை ஊக்குவித்திருக்கிறார். கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு பயன்படும் வகையில் கே.எம்.பி.திருமண அரங்கத்தின் படிகளில் ஏறுவதைத் தவிர்ப்பதற்காக சாய்வு தளம் அமைத்திருந்தனர். உணவு ஏற்பாடும் சிறப்பாக இருந்தது. இப்படி எதையுமே நேர்த்தியுடன் பொதுக்குழுவோ, மாநாடோ எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது சேலம் பொதுக்குழுவும், தீர்மான விளக்கப் பொதுக்கூட்டமும்.

சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜு தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன், கடைவீதி வசூலை பணியைத் தொடங்கி வைத்தார். அதே போல், மேட்டூர் கழகக் காப்பாளர் பழனி புள்ளையண்ணன், சி.சுப்பிரமணியன் மற்றும் ஓமலூர் ஒன்றியப் பொருளாளர் சவுந்தரராஜன் ஆகியோர் நிதி வழங்கி, நன்கொடைப் பணிகளைத் தொடங்கி வைத்தனர். மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி தலைமையில், மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, ஆத்தூர் மாவட்டத் தலைவர் சுரேஷ், ஆத்தூர் மாவட்டச் செயலாளர் நீ.சேகர், சேலம் மாவட்டச் செயலாளர் மூணாங்கரடு சரவணன், பொதுக்குழு உறுப்பினர் கமலம் அம்மாள், மாவட்ட துணைத் தலைவர் சு.இமயவரம்பன், மேட்டூர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அன்புமதி, தருமபுரி மகளிர் அணித் தோழர் பெ.சகுந்தலா, வெண்ணந்தூர் செல்வகுமார், சேலம் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சக்திவேல், மேட்டூர் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சிறீதர், இளைஞர் அணித் தோழர் செல்வம், தருமபுரி மாவட்ட இளைஞரணித் தோழர் அ.பிரபாகரன், ஆத்தூர் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சே.செந்தமிழ் சேரன் ஆகியோர் சளைக்காமல் கடை கடையாக துண்டறிக்கைகளை வழங்கி நன்கொடை திரட்டினர். மக்களும் சிறப்பாக ஒத்துழைத்தனர். இதனால் பொதுக்குழுவுக்கு செலவில்லாமலும் நல்ல வகையில் விளம்பரம் கிடைத்தது.
இன்னொரு சிறப்பு, துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பொதுக்குழுவில் பேசும் போது, ”கழகக் கொடிக் காடுகள்” என்றே சிறப்பாக உவமித்தார். இந்த உவமைக்கு பொருந்திப் போனதா சேலம் பொதுக்குழு, தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் மைதானம் ஆகியவற்றில் கட்டப்பட்டிருந்த கொடிகள்? ஆம் என்கிறது கள நிலவரம். 4.7.2026, சனிக்கிழமை அன்று, கே.எம்.பி.திருமண அரங்கில் காலையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு கூட்டம் ஆகட்டும், அதே நாளின் மாலையில் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தீர்மான விளக்கம் பொதுக்கூட்டம் ஆகட்டும், இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் சேர்ந்து மாவட்டம் எங்கிலும், 2,120 கழகக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அம்மாடியோவ்… என்று வியக்கத்தான் தோன்றுகிறது. சேலம் நகரத்திற்கு வரும், திருச்சி, ஈரோடு, தருமபுரி, சென்னை ஆகிய நான்கு முக்கியச் சாலைகளிலுமே கருப்பு சிவப்பு கழகக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. இதில் 20 கொடிகள் மிகப்பெரியது. இவை மாலை தீர்மான விளக்க மாநாட்டு மைதானத்தில் இருபுறமும் தலா 10 கொடிகளாகக் கட்டப்பட்டிருந்தன. அத்துடன் அதற்கடுத்த அளவுள்ள கொடிகளும் ஊடே கட்டப்பட்டிருந்தன. மற்ற 2,000 க்கும் மேற்பட்ட கொடிகள் சேலம் நகரமெங்கும் கட்டப்பட்டிருந்தன. குறிப்பாக அம்மாபேட்டை பெரியார் பகுத்தறிவு சுடர் தூணில் இருந்து அரசு கலைக் கல்லூரி மேம்பாலம் வரை ஒன்றரை கி.மீ தூரமும், சீலநாயக்கன்பட்டி கவுடா முதல் கோட்டை மைதானம் வரை இரண்டரை கி.மீ.தூரமும், சேலம் ரயிலடியில் இருந்து கோட்டை மைதானம் வரையிலுமாக மூன்று கிலோமீட்டர் தூரமும், குரங்கு சாவடி வட்டச்சாலை (ரவுண்டானா) முதல் 5 சாலை வட்டச்சாலை வரை அரை கிலோமீட்டர் தூரமுமாக மொத்தம் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் கழகக் கொடிகள் சீரான வரிசையில் சாலையின் இருபுறமும் கட்டப்பட்டிருந்தன. கொடிகள் வரிசை, வரிசையாகப் பறப்பதைக் கண்டவுடன் காந்தம் போல ஈர்க்ககூடியவையாக அவை இருந்தன. சேலத்திற்குள் எந்தச் சாலையில் வந்தாலும் கருப்பு, சிவப்பு நிறத்திலான திராவிடர் கழகக் கொடிகளைக் காணாமல் ஒருவர் சேலத்திற்கும் நுழையவும் முடியாது! வெளியேறவும் முடியாது என்கிற அளவில், எங்கெங்கு காணினும் கழகக் கொடிகளடா! தோள்கள் எலாம் பூரிக்குது அடடா…! என்று, புரட்சிக்கவிஞர் போல் கவித்துவமாக வியக்கும் வண்ணம்தான் காட்சிகள் எங்கெங்கும் இருந்தன! கண்கள் பட்ட இடமெல்லாம் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்தன. நிச்சயமாக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், ”கழகக் காடுகள்” என்று உவமித்தது மிகையன்று.
அதுமட்டுமா? கொடிகள் கட்டப்பட்ட வட்டச் சாலைகள் (ரவுண்டானாக்கள்) எண்ணிக்கையே வியப்பை ஊட்டும் வண்ணம் இருந்தது. அம்மாபேட்டை பெரியார் பகுத்தறிவு சுடர் தூண் வட்டச் சாலை, சீலநாயக்கன்பட்டி மேம்பாலம் கீழுள்ள வட்டச்சாலை, கொண்டலாம்பட்டி வட்டச்சாலை, குரங்குச் சாவடி வட்டச்சாலை, 5 ரோடு வட்டச்சாலை, மாநகராட்சி (கார்ப்பரேஷன்) அலுவலக முன்னுள்ள வட்டச்சாலை, கோட்டை மைதானம் வட்டச்சாலை என, மொத்தம் 7 வட்டச்சாலைகளில் கழகக் கொடிகள் சீரான உயரத்தில் சீரான அளவில் கம்பீரமாகப் பறந்து, சேலம் மாவட்டம் மட்டுமல்ல, பக்கத்து மாவட்டங்களிலும் பொதுக்குழுவைப் பற்றிய விளம்பரத்தையும் ஒரு விவாதத்தையுமே கிளப்பி விட்டிருந்தது. அதுமட்டுமல்ல, 1944 க்குப் பின்னர் 2026 இல், இதுவே சேலத்திற்கே ஒரு தனி களையையும் கொடுத்திருந்தது.
சேலம் பொதுக்குழு மற்றும் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தின் மாட்சிகள் அவ்வளவுதான் என்று எண்ணிவிட வேண்டாம். சேலம் மாநகரைச் சுற்றி யுள்ள தாதம்பட்டி இடுகாடு சுவர், அம்மாபேட்டை பழனியாண்டி மருத்துவமனை அருகில், தில்லை நகர் வாசல், டி.எம்.எஸ். பாலம், ஆனந்தா பாலம், பழைய பேருந்து நிறுத்தம் குடியிருப்பு வாரியத்தின் சுவற்றிலேயே இரண்டு இடத்திலும், பழைய பேருந்து நிறுத்தத்தின் போஸ் மைதானத்தின் சுவர், ஜெயா திரையரங்கம் அருகில், துணிக் கடை வீதி அப்சரா சாலை இறக்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், பொதுமருத்துவமனை சாலை இறக்கம், தொங்கும் பூங்கா மேம்பாலச் சுவர், தொங்கும் பூங்கா மேம்பாலம் இரண்டாவது சுவர், பாலபாரதி பள்ளிக்கூடம் அருகில், பழைய ஆணையாளர் அலுவலகம் பின்புறச் சுவர், காந்தி விளையாட்டு அரங்கம் எதிரில், நால்ரோடு பாலம் பக்கவாட்டுச் சுவர், பால் சந்தை (மார்க்கெட்) மேம்பாலம், புதிய பேருந்து நிலையம் கலைஞர் மாளிகை எதிர் சுவர், 5 ரோடு சந்திப்பில் ஏற்காடு சாலை (அழகாபுரம்), குரங்குச் சாவடி சுடுகாட்டுச் சுவர், மாமாங்கம் மேம்பாலம் கீழ்புறத்தில், மாமாங்கம் மேம்பாலம் எதிர் சுவர் என மொத்தம் 24 இடங்களில் சுவரெழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. இதை சதுர அடிக்கணக்கில் சொல்ல வேண்டுமானால், சேலம் பொதுக்குழு மற்றும் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்திற்கென்று மொத்தம் எழுதப்பட்ட சுவரெழுத்துகள், 15,795 ச.அடிகள் ஆகும். இவையில்லாமல் மாநாட்டு மைதானத்தில் பதாகைகளும் கட்டப்பட்டிருந்தன.
இந்த ஒட்டுமொத்த பின்னணியில் தான் காலையில் பொதுக்குழுவும், அதில் அறப்போராட்டத்திற்கு 1000 இளைஞர்களைக் கேட்டு, 1,706 இளைஞர்களின் பட்டியலை கழகத் தலைவரிடம் அளித்ததும், அவர் மட்டற்ற மகிழ்ச்சியில் பூரித்து நின்றதும், ஒரு மகிழ்ச்சியான செய்தி என்று சிறு மழலையைப் போலவே பேசியதும், மாலையில் தீர்மானங்களை விளக்கி, மாநில மாநாடு போல் கூடியிருந்த மக்களை நல்வழிப்படுத்தியதும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஒட்டி நடைபெறவிருக்கும் திட்டங் களும், அதனால் சமூகத்தில் ஏற்படப் போகும் மாற்றங்களும் என, 1944ஆம் ஆண்டைப்போலவே, 2026ஆம் ஆண்டும் ஒரு திருப்பத்தைத் தரவிருக்கிறது. அதை வருங்காலம் நினைவு கூர்ந்து பேசிக்கொண்டே இருக்கும். எப்படி 1944 ஆம் ஆண்டு சேலம் மாநாட்டை பேசும் போதெல்லாம் பெரியாரையும், அண்ணாவையும் நினைவுகூற வேண்டியுள்ளதோ, அதுபோலவே 2026 ஆம் ஆண்டு சேலம் மாநாட்டை நினைவு கூறும் போதெல்லாம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களையும், அறப்போராட்டக் கள வீரர்கள் பட்டியலும், அதனால் ஏற்பட்ட ஏற்றங்களும், மாற்றங்களும் என்றென்றைக்கும் நினைவு கூறப் பட்டுக்கொண்டே இருக்கும். இதுதான் காட்சி! இதுதான் காட்சியின் மாட்சி!
