அயோத்தி கோவில் முறைகேடு பற்றி – ‘‘தினமலர்’’ ஏட்டின் தலையங்கம் (6.7.2026)

3 Min Read

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பிரமாண்ட ராமன் கோவிலை, சிறீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இந்த கோவில் உண்டியல்களில் செலுத்தப்படும் காணிக்கை மற்றும் பெறப்படும் நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாக சமீபத்தில் எழுந்த புகாரை அடுத்து, எஸ்.அய்.டி., எனப்படும் , சிறப்புப் புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

அதன் முதற்கட்ட விசாரணை அறிக்கை அடிப் படையில், ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் முன்னாள் பொதுச்செயலர் சம்பத் ராயின் ஓட்டுநர் ராமசங்கர் யாதவ் உட்பட எட்டு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெரிய அளவில் முறைகேடு நடந் திருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, சிறீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் கடந்த அய்ந்து ஆண்டு கால கணக்குகளை மறுதணிக்கை செய்ய வும், எஸ்.அய்.டி., முடிவு செய்துள்ளது.

சங் பரிவாரங்களின் விருப்பப்படியும், உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணையின் முடிவில் வெளியான தீர்ப்பின் அடிப்படையிலும் தான், அயோத்தியில் ராமன் கோவில் கட்டப்பட்டது. அதுமட்டுமின்றி, பாரதிய ஜனதா கட்சியை மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சிக்கு கொண்டு வருவதில், ராமஜென்மபூமி இயக்கம் ஒரு தீர்க்கமான பங்கை ஆற்றியது.

பா.ஜ.,வின் வளர்ச்சி மற்றும் தேர்தல் வெற்றிகளுக்கு ராமன் கோவில் விவகாரம் முக்கிய பங்காற்றியுள்ளது என்று சொன்னால் யாரும் மறுப்பதற்கு இல்லை.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல ஹிந்து தலைவர்கள், இக்கோவிலின் கட்டுமான பணியை, தேசத்தின் முக்கியத்துவம் வாய்ந்த செயலாகவே முன்னிறுத்தி வந்தனர். இக்கோவில் வெறும் மத வழிபாட்டுத்தலமாக மட்டுமின்றி, தேசிய பெருமையின் அடையாளமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே, நிதி முறைகேடு மற்றும் நிர்வாக குளறுபடிகள் குறித்த குற்றச்சாட்டுகள், கோவில் நிர்வாகத்தின் நற்பெயருக்கு மட்டுமல்லாமல், அதனுடன் அரசியல் ரீதியாக தொடர்புடை தலைவர்களுக்கும், ஹிந்து அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

அதேநேரத்தில், இக்கோவில் தொடர்பான முறைகேடுகள், ராம பக்தர்களையும், கோவில் கட்டும் திட்டத்தை நனவாக்க பல ஆண்டுகளாக உழைத்தவர்களையும் காயப்படுத்தியுள்ளது என்றும் கூறலாம். கோவிலுக்கு பக்தர்கள் அளிக்கும் நன்கொடைகள், செலுத்தும் காணிக்கைகள், அதன் மேம்பாட்டிற்கும், பக்தர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கவும் பயன்படுத்தப்பட வேண்டும். அதை உறுதி செய்ய, மத்திய, மாநில பா.ஜ., அரசுகள் தவறி விட்டன என்பதே நிதர்சனம்.

அயோத்தியில் ராமன் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதற்காக, மக்களின் உணர்வுகளை துாண்டி விடுவதில், பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளும் வெற்றி பெற்றன. அதன்பின், கட்டப்பட்ட கோவிலில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதில் போதிய அக்கறை காட்டவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

இதற்கிடையில், ‘இந்த நன்கொடை மற்றும் காணிக்கை முறைகேடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடுவ தில்லை. அதை மீறி யாராவது வாதிட முன்வந்தால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டால், அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்’ என, வழக்குரைஞர்கள் சங்கம் ஒன்று எச்சரித்திருப்பது பாராட்டத்தக்கது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அப்படிப் பட்ட சூழலில், இந்த நன்கொடை முறைகேடு சர்ச்சை, உ.பி., மாநிலத்தை ஆளும் பா.ஜ., கட்சிக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனால், முறைகேடு தொடர்பான விசா ரணையை விரைவாக முடித்து, குற்றவாளிகளை அடையாளம் கண்டு, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தருவது அவசியம். அத்துடன் கோவில் நிர்வாகத்தின் செயல்பாடுகளிலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அதுவே, ராம பக்தர்களின் நெஞ்சில் பால் வார்க்கும் செயலாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *