புதுடில்லி, ஜூலை 5- நீட் (NEET) தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் நடந்துள்ள முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (CJP) சார்பில் கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம், நேற்று (4.7.2026) 15ஆவது எட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் (CPI), மார்க்சிஸ்ட் (CPI-M) மற்றும் சிபிஅய் (எம்-எல்) லிபரேஷன் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இப்போராட்டத்திற்குத் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.
மாணவர்களின் எதிர்காலத்திற்காக நடக்கும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பிரபல காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் தொடர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 4.7.2026 அன்று அவரது பட்டினிப் போராட்டம் 7ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக மாறி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிறுவனர் அபிஜித் திப்கே சாடல்! இது தொடர்பாக சிஜேபி (CJP) அமைப்பின் நிறுவனர் அபிஜித் திப்கே தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
“தொடர் பட்டினிப் போராட்டத்தால் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. அவரது உடல் எடை இதுவரை 5 கிலோ வரை குறைந்துள்ளது. இவ்வளவு தூரம் நிலைமை மோசமாகியும், தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்க பிரதமர் நரேந்திர மோடி இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்கப் போகிறார்?
மாணவர்களின் எதிர்காலமும், உயிர்களும் கேள்விக்குறியாகியுள்ள நிலையிலும், தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்க மறுக்கும் அளவுக்கு அவர் பிரதமருக்கு ஏன் அவ்வளவு முக்கியமானவராக இருக்கிறார்? சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மேலும் மோசமடைந்தால் அதற்கு இந்த ஒன்றிய அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.”
இவ்வாறு அபிஜித் திப்கே ஒன்றிய அரசுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இப்போராட்டம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
