கொல்கத்தா, ஜூலை 2 மேற்கு வங்காள மாநிலம், கிருஷ்ணாநகர் பகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தபோது, திரிணாமூல் காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மீது போராட்டக் காரர்கள் முட்டைகள் மற்றும் காய்கறிகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மஹுவா மொய்த்ரா தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், “பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) ஆதர வாளர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். நான் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த இடத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டிருந்தனர், ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுன மாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்,” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவ இடத்தில் எடுக்கப் பட்ட காணொலிகளில், போராட் டக்காரர்கள் கருப்புக் கொடிகளை ஏந்தி, “திரும்பிச் செல்” (Go Back) என முழக்கமிட்டு, மஹுவா மொய்த்ரா இருந்த உணவகத்தின் மீது முட்டைகளை வீசுவது பதிவாகியுள்ளது. மஹுவா மொய்த்ரா உள்ளே இருந்தபடியே அந்தத் தாக்குதலைத் தனது அலைபேசியில் காணொலியாகப் பதிவு செய்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் சமீப காலமாக திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் மீது முட்டைகள் வீசிப் போராட்டம் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது போன்ற செயல்களைச் சட்ட விரோதமானது என்றும், அரசியல் கருத்து வேறுபாடுகளை உடல் ரீதியான அச்சுறுத்தல்களாக மாற்றுவதை ஏற்க முடியாது என்றும் மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்தப் பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப் பட்டுள்ளனர்.
