புதுடில்லி, ஜூலை 1- கடந்த 2021-ஆம் ஆண்டு கரோனா பரவல் காரணமாகப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளைத் தயாரிக்க சிபிஎஸ்இ (CBSE) ஒரு குறிப்பிட்ட மதிப்பீட்டு நடைமுறையைக் கையாண்டது.
தகவல் அறியும்
உரிமைச் சட்டம்
இந்த நடைமுறையின்படி, தனது மதிப்பெண்கள் கணக்கிடப் பட்டதற்கான மதிப்பீட்டு ஆவணங் களைக் கேட்டு 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் மனுத் தாக்கல் செய்திருந்தார். சிபிஎஸ்இ-யின் மதிப்பீட்டுச் செயல்முறையில் ஏற்பட்ட பிழையால் தனக்குக் கடுமையான மனஉளைச்சலும், சோர்வும் ஏற்பட்டதாகவும், அதற்காகத் தான் மருத்துவ சிகிச்சை பெற வேண்டியிருந்தது என்றும் அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார். ஆனால், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதைக் காரணம் காட்டி, மாணவியின் மனுவுக்குப் பதிலளிக்க சிபிஎஸ்இ நிர்வாகம் மறுத்துவிட்டது.
மேல் முறையீடு
சிபிஎஸ்இ-யின் இந்த முடிவை எதிர்த்து, மாணவி தரப்பில் மத்திய தகவல் ஆணையத்திடம் (CIC) மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தகவல் ஆணையர் சுதா ராணி ரெலாங்கி, மாணவிக்கு ஆதரவாக அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.
அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டதாவது:
“மாணவர்களின் கோரிக்கையின் பேரில் மதிப்பெண்கள் மற்றும் விடைத்தாள்களை வழங்குவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்கும் நிலையான செயல்பாட்டு நடை முறையை (SOP) சிபிஎஸ்இ அமல் படுத்துவது தற்போதைய சூழலில் மிகவும் அவசியமான ஒன்றாகும்.”
மேலும், சம்பந்தப்பட்ட மாணவியின் மதிப்பெண் மதிப்பீட்டு அறிக்கையை உடனடியாக அவருக்கு வழங்க வேண்டும் என்றும் மத்திய தகவல் ஆணையர் சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
