கோயம்புத்தூர், ஜூலை 1 – ‘வானம்பாடி’ இயக்கத்தைத் துவக்கியவர் களில் ஒருவரும், இரு முறை ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற மூத்த எழுத்தாளருமான புவியரசு (96) நேற்று (30.6.2026) காலமானார்.
1930-ஆம் ஆண்டு கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் பிறந்த இவரது இயற்பெயர் ஜெகநாதன். ‘ஜெகநாதன்’ என்பது சமஸ்கிருதப் பெயர் என்பதால், தனித்தமிழில் பற்றுக்கொண்டு தன் பெயரை ‘புவியரசு’ என்று மாற்றிக் கொண்டார்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் இண்டர்மீடியட் முடித்த அவர், பேரூர் தமிழ்க் கல்லூரி தொடங்கப் பட்டபோது அதில் சேர்ந்த முதல் குழு மாண வர்களில் ஒருவராகப் பயின்று ‘புலவர்’ பட்டம் பெற்றார்.
மரபுக் கவிதைகளில் இருந்து தமிழைப் புதுக்கவிதை நடைக்கு மடைமாற்றிய பெருமை ‘வானம்பாடி’ இயக்கத்திற்கு உண்டு. கவிஞர்கள் அப்துல் ரகுமான், மு.மேத்தா, சிற்பி பாலசுப்பிரமணியம், சிதம்பரநாதன் ஆகியோருடன் இணைந்து இவ்வியக்கத்தின் முக்கியத் தூணாக புவியரசு திகழ்ந்தார்.
சிறந்த நாடகக் கலைஞ ரான இவர், கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு என 120-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி யுள்ளார்.
இவர் எழுதிய ‘சொந்தக் கவிதை’ நூலுக்காக ஒரு முறையும், இவர் மொழிபெயர்த்த சிறந்த நூலுக்காக ஒருமுறையும் என இருமுறை ‘சாகித்திய அகாடமி’ விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஷேக்ஸ்பியர், கலீல் ஜிப்ரான், உமர் கய்யாம், ஓஷோ, தஸ்தயேவ்ஸ்கி, ரவீந்திரநாத் தாகூர் ஆகிய உலகப் புகழ்பெற்ற பேராளுமைகளின் படைப்புகளை ஆங்கிலம், ரஷ்யன், ஹங்கேரியன், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இருந்து தமிழுக்குக் கொண்டு வந்தவர்.
தமிழ்த் திரையுலகிலும் தடம் பதித்த புவியரசு, கமல்ஹாசனின் ‘மகாநதி’, ‘விருமாண்டி’ மற்றும் திருச்செல்வத்தின் ‘ஹவுஸ்ஃபுல்’ உள்ளிட்ட திரைப்படங்களில் வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் பங்களிப்பை செலுத்தியுள்ளது குறிப் பிடத்தக்கது.
கோவை பெரியநாயக் கன் பாளையத்தை அடுத்துள்ள பிரஸ் காலனி, சிவா நகர் பகுதியில் உள்ள இல்லத்தில் வயது முதிர்வு காரணமாக காலமானார்.
அவருக்கு தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இலக்கியவாதிகளும், அரசியல் பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த தோழர் புவியரசு இறுதி நிகழ்வுகள் பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள பிரிக்கால் எரியூட்டு மயானத்தில் நடைபெற்றது.
