திரைப்பட இயக்குநர், நடிகர், பத்திரிகையாளர் கே.பாக்யராஜ் மறைவு – கழகத் தலைவர் இரங்கல்!

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் அவர்கள் (வயது 73) மாரடைப்பு காரணமாக இன்று (27.6.2026) காலை மறைவுற்றார் என்ற அதிர்ச்சிச் செய்தி நம்மைப் பெரிதும் வருந்தச் செய்கிறது. அண்மையில் தான் அவரது ஆசான் ‘இயக்குநர் இமயம்’, ‘புரட்சிக் கலைவேந்தர்’ பாரதிராஜா அவர்கள் மறைவுற்றார். இந் நிலையில் இயக்குநர் பாக்யராஜ் அவர்களின் மறைவு மேலும் துயரமளிக்கிறது. ‘திரைக்கதைத் திலகம்’ என்று திரைத்துறையில் இந்திய அளவில் சிறப்பித்துச் சொல்லப்படக் கூடியவர். தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, இசை, தயாரிப்பு என்று பல துறைகளிலும் ‘சகலகலா வல்லவராகத்’ பன்முக வித்தகராக’ தன்னுடைய முத்திரையைப் பதித்தவர்.

ஜாதியையும், தீண்டாமையையும், வர்ணாசிரம தர்மத்தையும் அப்பட்டமாகப் படம்பிடித்து, துணிச்சலுடன் கேள்வி எழுப்பிய அவருடைய ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் – பார்ப்பனர்களின் எதிர்ப்பையும், மிரட்டலையும் சந்தித்த போது, நாம் அவருக்கு ஆதரவாகப் படம் வெளிவரத் துணை நின்றதுடன், அவரது இல்லத்திற்கே சென்று அவரைப் பாராட்டியதைப் பெரிதும் மதிப்புடன் நோக்கியவர். இயல்பான அவரது நகைச்சுவைத் திறனால், பல திரைப்படங்களிலும் இத்தகைய கருத்துகளை முன்வைத்தவர். தந்தை பெரியார் மீதும், நம் இயக்கத்தின் மீதும் பெருமதிப்பு கொண்டவர்.

35 ஆண்டுகளுக்கு முன்னால் ‘பாக்யா’ என்ற பத்திரிகையையும் தொடங்கி, தொடர்ந்து நடத்தி வந்த ஆற்றலாளர். அதில் அவரது கேள்வி-பதில் பகுதி எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் ஒன்றாகும்.

அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்! அவரது மறைவால் துயருறும் அவரது இணையர், மகன், மகள் உள்ளிட்ட குடும்பத்தினர், திரையுலகினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் நமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *