அமோனியா வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 68 அசாம் தொழிலாளர்கள், ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்!

3 Min Read

ஊத்துக்கோட்டை, ஜூன் 30- பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21ஆம் தேதி எதிர்பாராத விதமாக அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில், அங்கு பணியில் இருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் பலர் வாயுவைச் சுவாசித்து மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்ட சக ஊழியர்கள், சிகிச்சைக்காக மஞ்சங்காரணை மற்றும் செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.

அமோனியா வாயுக்கசிவு

அவர்களில் மேல் சிகிச்சைக்காக 20 பேர் சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்களைச் சேர்ந்த 16 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

விபத்தைத் தொடர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த திருமண மண்டபத்தில் 146 வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களைப் பத்திரமாகச் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முதல்கட்டமாக: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 59 தொழிலாளர்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) சிறப்புப் பேருந்து மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து ஒடிசா மாநில அதிகாரிகளின் மேற்பார்வையில் அவர்கள் ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அசாம் தொழிலாளர்கள்

இரண்டாம் கட்டமாக: நேற்று (29.6.2026) அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 44 ஆண்கள், 24 பெண்கள் என மொத்தம் 68 தொழிலாளர்கள் மாநகரப் பேருந்து மூலம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் அசாம் மாநில அதிகாரிகளால் தங்களது சொந்த ஊருக்கு ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த இரண்டாம் கட்டப் பயணத்தின்போது, திருவள்ளூர் ஆர்டிஓ ரவிச்சந்திரன், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ராஜேஷ்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஓ) அற்புதராஜ் ஆகியோர் நேரில் சென்று தொழிலாளர்களை வழி அனுப்பி வைத்தனர்.

‘நீட்’ வினாத்தாள் கசிவு

கைதான 10 பேரின்
நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

புதுடில்லி, ஜூன் 30– இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த மே 3ஆம் தேதி நடந்தது.
வினாத்தாள் முன் கூட்டியே கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் இத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் வினாத்தாள் கசிவு வழக்கில் மகாராட்டிரா, ராஜஸ்தான், அரியானா, பீகார் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து 13 பேரை சிபிஅய் கைது செய்தது.
இவர்களில் 10 பேரின் நீதிமன்ற காவல் நிறைவடைந்தது. இதையடுத்து, 10 பேரும் டில்லி சிபிஅய் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று (29.6.2026) காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 10 பேரின் நீதிமன்ற காவலை ஜூலை 11 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஜூலை 1 முதல் கட்டுப்பாடின்றி பெட்ரோல், டீசல் விற்பனை

ஒன்றிய அரசு அறிவிப்பு!

புதுடில்லி, ஜூன் 30- நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் நாளை (ஜூலை 1) முதல் முழுமையாக நீக்கப்படுவதாக ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கட்டுப்பாட்டிற்கான பின்னணி

ஈரான் போர் காரணமாக உலகளாவிய அளவில் எரிபொருள் விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டன. இதனால் நமது நாட்டில் உள்ளூர் அளவில் பெட்ரோலியப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுப்பதற்காக, கடந்த ஜூன் 12ஆம் தேதி முதல் ஒன்றிய அரசு சில தற்காலிகக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இதன்படி, ஒரு வாகனத்திற்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 200 லிட்டர் டீசல் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும், தொழில் மற்றும் வணிக நிறுவன நுகர்வோர் சில்லறை விற்பனை நிலையங்களில் எரிபொருள் வாங்குவதற்குத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

கட்டுப்பாடுகள் நீக்கம்

தற்போது ஈரான் நாட்டில் போர் நிறுத்தப் பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் நிலவும் பெட்ரோலியப் பொருட்களின் தற்போதைய விநியோக நிலவரம் குறித்து ஒன்றிய அரசு விரிவான ஆய்வு மேற்கொண்டது.
அதில், விநியோகம் சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஜூன் 12இல் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து அமல்படுத்துவது அவசியமில்லை என்று அரசு முடிவு செய்துள்ளது.
அரசின் உத்தரவு
மோட்டார் ஸ்பிரிட் மற்றும் அதிவேக டீசல் (சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகத்தின் தற்காலிக ஒழுங்குமுறை) ஆணை, 2026இன் பிரிவு 3இன்கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஜூன் 12 தேதியிட்ட கட்டுப்பாட்டு உத்தரவை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இந்த புதிய உத்தரவு நாளை (1.7.2026) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் பொதுமக்களும், வணிக நுகர்வோரும் வழக்கம் போல எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பெட்ரோல் மற்றும் டீசலை வாங்க முடியும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *