லக்னோ, ஜூன் 29- அயோத்தி ராமன் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் உத்தரப் பிரதேச காவல் துறையினர் 8 பேர்மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்துள்ளனர்.
அயோத்தி ராமன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட காணிக்கைப் பணம் மற்றும் நகைகள் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்அய்டி) அமைத்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தர விட்டார்.
இந்நிலையில், எஸ்அய்டி தனது 20 பக்க இடைக்கால அறிக்கையை அரசிடம் சமர்ப்பித் துள்ளது. அறக்கட்டளை மற்றும் வங்கியுடன் தொடர் புடைய சந்தேக நபர்கள் உட்பட சுமார் 150 பேரிடம் சிறப்புக் குழு விசாரணை நடத்தியுள்ளது. மேலும், சிறீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளையை மறு சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு வழங்கி உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் 8 பேர் மீது உத்தரப் பிரதேச காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
கைதான 8 பேர் யார், யார்?
அயோத்தி ராமன் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான 8 பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சில மணி நேரங் களில் அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவினாஷ் ஷுக்லா, அனுகல்ப் மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா, மணிஷ் குமார் யாதவ், கருணேஷ் பாண்டே, ராமஷங்கர் மிஸ்ரா, சுபாஷ் சிறீவஸ்தவா, ராம் ஷங்கர் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் அடையாளம் தெரியாத பலர் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர்.
திருட்டு, நம்பிக்கை துரோகம், திருடப்பட்ட சொத்தைப் பெறுதல் அல்லது மறைத்தல், சதி என பிஎன்எஸ் குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு பிரிவின் கீழும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
