பெண்களைப் பாதிக்கும் மிக முக்கிய நோய்களில் ஒன்று மார்பகப் புற்றுநோய். இது ஏற்படுவதற்கானக் காரணங்களை அறிந்து முன்னெச்சரிகையாகச் செயல் பட்டால் நோய்ப் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். மார்பகப் புற்றுநோய் வருவதற்கானக் காரணங்கள் மற்றும் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
- மார்பகப் புற்றுநோய் என்றால் என்ன?
மார்பகத்தில் இருக்கும் செல்கள் இயல்பை மீறி வேகமாக வளர்ந்து கட்டியாக மாறும் நிலையே மார்பகப் புற்றுநோய். இது பெண்களிடம் அதிகமாக காணப்படும் ஒரு முக்கிய நோயாகும்.
- இந்த நோய் பெண்களுக்கு மட்டும்தான் வருமா?
இல்லை. பெண்களிடம் அதிகம் இருந்தாலும், ஆண்களுக்கும் இந்த நோய் வர வாய்ப்பு உள்ளது. ஆனால் அது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
- எந்த வயதில் இந்த நோய் அதிகம் வருகிறது?
பொதுவாக 40 வயதுக்கு மேல் உள்ள பெண்களிடம் அதிகமாக கண்டறியப்படுகிறது. ஆனால் இளம் வயதிலும் வர வாய்ப்பு இருக்கிறது.
- குடும்ப மரபு இந்த நோய்க்கு காரணமா?
ஆம். தாய், சகோதரி அல்லது குடும்பத்தில் யாருக்காவது இருந்தால், மற்றவர்களுக்கும் ஆபத்து அதிகமாக இருக்கலாம்.
- மார்பகத்தில் கட்டி இருந்தால் அது கண்டிப்பாக புற்றுநோயாக இருக்க வாய்ப்புள்ளதா?
அப்படி இல்லை. சில கட்டிகள் சாதாரணமானவையாக இருக்கலாம். ஆனால் எந்த கட்டியையும் மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும்.
- மார்பகப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன?
மார்பகத்தில் கட்டி, வடிவ மாற்றம், வலி, நிபிளில் இரத்தம் அல்லது நீர் வருதல் போன்றவை ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.
- வலி இல்லாத கட்டி ஆபத்தில்லையா?
இல்லை. பல நேரங்களில் புற்றுநோய் கட்டிக்கு ஆரம்பத்தில் வலி இருக்காது. அதனால் வலி இல்லை யென்றாலும் கவனமாக இருக்க வேண்டும்.
- மார்பகத்தின் வடிவம் மாறுவது ஏன்?
புற்றுநோய் செல்கள் வளரும்போது மார்பகத்தின் அமைப்பை மாற்றக்கூடும். இதனால் வடிவம் மாறலாம்.
- நிபிளில் இருந்து நீர் அல்லது இரத்தம் வந்தால் என்ன அர்த்தம்?
இது சில நேரங்களில் புற்றுநோயின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம். உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
- தோலில் சுருக்கம் அல்லது குழி தோன்றினால்?
இது புற்றுநோய் செல்கள் தோலை பாதிக்கும்போது ஏற்படும். இதை அலட்சியம் செய்யக்கூடாது.
- கைக்குழியில் கட்டி வந்தால் அது தொடர்புடையதா?
ஆம். புற்றுநோய் லிம்ப் நோட்களுக்கு பரவியிருக்கலாம்.
- பெண்கள் தாமாகவே மார்பகத்தை பரிசோதிக்கலாமா?
ஆம். மாதம் ஒருமுறை தாங்களே பரிசோதித்து மாற்றங்களை கவனிக்கலாம்.
- தானாக பரிசோதனை செய்வது எப்படி உதவும்?
ஆரம்பத்திலேயே சிறிய மாற்றங்களையும் கண்டுபிடிக்க இது உதவும்.
- Mammogram என்றால் என்ன?
மார்பகத்தின் எக்ஸ்-ரே படம் எடுத்து உள்ளே மாற்றங்கள் இருக்கிறதா என்பதை பார்க்கும் பரிசோதனை.
- Mammogram எல்லாருக்கும் தேவையா?
40 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு மருத்துவர் ஆலோசனையின்படி அவசியமாக இருக்கலாம்.
- Ultrasound ஏன் செய்யப்படுகிறது?
கட்டியின் உள்ளமைப்பை நன்றாக பார்க்க இது உதவுகிறது.
- Biopsy என்றால் என்ன?
சிறிய திசுவை எடுத்துப் பரிசோதித்து அது புற்றுநோயா என்பதை உறுதி செய்வது.
- Biopsy ஆபத்தானதா?
இல்லை. இது பொதுவாக பாதுகாப்பான பரிசோதனை.
- ஆரம்பத்தில் கண்டுபிடித்தால் முழுமையாக குணமாகுமா?
ஆம். ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால் குணமாகும் வாய்ப்பு மிகவும் அதிகம்.
- தாமதமாக கண்டுபிடித்தால் என்ன ஆகும்?
நோய் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவி சிகிச்சை சிரமமாகலாம்.
- புற்றுநோய் எங்கு பரவலாம்?
எலும்பு, நுரையீரல், கல்லீரல் போன்ற இடங்களுக்கு பரவலாம்.
- என்னென்ன சிகிச்சைகள் இருக்கின்றன?
அறுவை சிகிச்சை, கீமோதெரபி, ரேடியேஷன், ஹார்மோன் சிகிச்சை போன்றவை உள்ளன.
- அறுவை சிகிச்சை எப்போது தேவை?
கட்டி பெரியதாக இருந்தால் அல்லது மருத்துவர் அவசியம் என்றால் செய்யப்படும்.
- மார்பகத்தை முழுவதும் அகற்ற வேண்டிய நிலை வருமா?
சில நேரங்களில் நோயின் நிலையைப் பொறுத்து முழுவதும் அகற்ற வேண்டி வரலாம்.
- கீமோதெரபி என்றால் என்ன?
புற்றுநோய் செல்களை அழிக்க மருந்து மூலம் கொடுக்கப்படும் சிகிச்சை.
- கீமோ எடுத்தால் முடி உதிருமா?
ஆம். ஆனால் அது தற்காலிகம். சிகிச்சைக்கு பிறகு மீண்டும் வளரும்.
- ரேடியேஷன் சிகிச்சை என்றால்?
கதிர்வீச்சு மூலம் மீதமுள்ள புற்றுநோய் செல்களை அழிக்கும் முறை.
- சிகிச்சை வலியாக இருக்குமா?
சில சிகிச்சைகள் சிரமமாக இருக்கலாம். ஆனால் மருத்துவர் அதை கட்டுப்படுத்த உதவுவார்.
- சிகிச்சைக்கு பிறகு சாதாரண வாழ்க்கை சாத்தியமா?
ஆம். பலர் சிகிச்சைக்கு பிறகு இயல்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
- மீண்டும் இந்த நோய் வருமா?
சிலருக்கு வரலாம். அதனால் தொடர்ந்து பரிசோதனை அவசியம்.
- உடற்பயிற்சி இந்த நோயைத் தடுக்க உதவுமா?
ஆம். தினசரி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி ஆபத்தை குறைக்க உதவும்.
- உணவு பழக்கம் முக்கியமா?
மிகவும் முக்கியம். நல்ல உணவு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். காய்கறி, பழங்கள், தானியங்கள், புரதம் நிறைந்த உணவுகள் நல்லவை.
- எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்?
அதிக எண்ணெய், ஜங்க் உணவு, அதிக சர்க்கரை உணவுகளை குறைக்க வேண்டும்.
- புகைபிடித்தால் புற்றுநோய் வருமா?
ஆம். இது புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கிறது. அதிகமாக மதுபானம் அருந்துவது ஆபத்தை உயர்த்தலாம்.
- உடல் பருமன் பாதிக்குமா?
ஆம். அதிக உடல் எடை புற்றுநோய் வர வாய்ப்பை அதிகரிக்கலாம்.
- குழந்தைக்கு பாலூட்டுவது பாதுகாப்பா?
ஆம். பாலூட்டும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஆபத்து குறைவாக இருக்கும்.
- மன அழுத்தம் காரணமா?
நேரடி காரணம் இல்லை. ஆனால் உடல் நலனை பாதிக்கலாம்.
- கிராமப்புற பெண்களும் பரிசோதனை செய்ய வேண்டுமா?
ஆம். நகரம், கிராமம் என்ற வித்தியாசம் இல்லை. அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
- ஆண்கள் இதைப் பற்றி தெரிந்திருக்க வேண்டுமா?
ஆம். குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு ஆதரவாகவும் விழிப்புணர்வாகவும் இருக்க வேண்டும்.
- இது தொற்றுநோயா?
இல்லை. ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாது.
- இந்த நோயால் உயிரிழப்பு
அதிகம் ஏங்படுமா?
தாமதமாக கண்டுபிடித்தால் ஆபத்து அதிகம். ஆனால் ஆரம்பத்தில் கண்டுபிடித்தால் உயிரைக் காப்பாற்றலாம்.
- மக்களுக்கு சொல்ல வேண்டிய முக்கிய செய்தி என்ன?
மார்பகத்தில் சிறிய மாற்றம் இருந்தாலும் அதை அலட்சியம் செய்யக்கூடாது. ஆரம்ப பரிசோதனை, சரியான சிகிச்சை மற்றும் விழிப்புணர்வே உயிரைக் காப்பாற்றும்.
மார்பகப் புற்றுநோய் பற்றி தெரிந்து கொள்வது ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கியம். “முன்கூட்டியே கண்டறிவோம், உயிரைக் காப்போம்” என்ற எண்ணத்துடன் பெண்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
