சென்னை, மே 22 ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை நேற்று (21.5.2026) விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 25 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். 4 பெண்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அதே நேரம் 19 மாவட்டங்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக கட்சி 108 இடங்களை மட்டுமே பெற்று தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றது.
தவெக மெஜாரிட்டியை நிரூபிக்க மேலும் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்பட்டது. இதையடுத்து திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள், அய்எம்யூஎல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மைக்கு தேவையான 118 சட்டமன்ற உறுப்பினர்களை ஆளுநர் முன் நிரூபித்தது. இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் கடந்த 10ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். முதல மைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கும் கடந்த 16ஆம் தேதியன்று துறைகள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில், தவெக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டு, தமிழ்நாடு அமைச்சரை நேற்று (21.5.2026) காலை 10 மணிக்கு விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி, ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக 23 பேர் இணைய உள்ளதாக மக்கள் மாளிகை அதிகாரப்பூர்வமாக நேற்று (21.5.2026) காலை 9 மணிக்கு அறிவித்தது. இதைத்தொடர்ந்து, நேற்று (21.5.2026) காலை 10 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக்காப்பு தீர்மானம் நிறைவேற்றி வைத்தார்.
இந்த நிலையில், ஏற்கெனவே இருந்த அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டு, புதிய அமைச்சர்களுக்குத் தனித்தனியே துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே அமைச்சராக பதவியேற்ற செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, நிர்மல்குமாரிடம் இருந்து சட்டப்பேரவை விவகாரங்கள் துறை, செங்கோட்டையனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்கள் விவரம் வருமாறு:
மீன்வளத்துறை – சிறீநாத் (தூத்துக்குடி)
கால்நடைத்துறை – கமலி (அவிநாசி)
பால்வளத்துறை – விஜயலட்சுமி (குமாரபாளையம்)
வனத்துறை – ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்)
சுற்றுச்சூழல்துறை – ராஜீவ் (திருவாடனை)
வீட்டுவசதித்துறை – ராஜ்குமார் (கடலூர்)
கூட்டுறவுத்துறை – காந்திராஜ் (அரக்கோணம்)
சிறு,குறு, நடுத்தர தொழில்துறை – மதன்ராஜா (ஓட்டபிடாரம்)
சமூகநலன், மகளிர் நலத்துறை – ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்)
சுற்றுலாத்துறை – ராஜேஷ் குமார் (கிள்ளியூர்)
கைத்தறி, ஜவுளித்துறை – விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு)
வணிகவரி, பத்திரப்பதிவுத்துறை – லோகேஷ் தமிழ்ச்செல்வன் (ராசிபுரம்)
போக்குவரத்துத்துறை – விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு)
இந்து சமய அறநிலையத்துறை – ரமேஷ் (சிறீரங்கம்)
உயர்கல்வித்துறை – பெ. விஸ்வநாதன் (மேலூர்)
செய்யறிவு, தகவல் தொழில்நுட்பத்துறை – குமார் (வேளச்சேரி)
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை – சம்பத் குமார் (கோவை வடக்கு)
தொழிலாளர் நலத்துறை – முகமது பர்வேஸ் (அறந்தாங்கி)
மனிதவளத்துறை – சரத்குமார் (தாம்பரம்)
நிதித்துறை – மரியவில்சன் (ஆர்.கே.நகர்)
வெளிநாடுவாழ் தமிழர் நலன் – தென்னரசு (சிறீபெரும்புதூர்)
வேளாண் துறை – வினோத் (கும்பகோணம்)
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை – விக்னேஷ் (கிணத்துக்கடவு)
(இ்ன்று (22.5.2026) காலை அ.மு. ஷாஜகான், வன்னிஅரசு ஆகியோரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
