வெள்ளை அறிக்கைகள் ஓர் அரசியல் உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டு இருக்கின்றனவே தவிர, தீர்விற்காக அல்ல!
கடனைத் திருப்பிக் கொடுக்கக் கூடிய சக்தி வளர வளர, கடன் வாங்கித்தான் ஆட்சியை நடத்த வேண்டும்!
கடன் வாங்காத பொருளாதாரம் என்பது தனி மனித பொருளாதாரத்திற்குச்
தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்
தஞ்சை, ஜூன் 28 ‘‘கடந்த ஆட்சியைக் குற்றம் சொல்ல வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு தயாரிக்கப்பட்ட வெள்ளை அறிக்கைகள் –ஓர் அரசியல் உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டு இருக்கின்றனவே தவிர, தீர்விற்காக அல்ல. கடனைத் திருப்பிக் கொடுக்கக் கூடிய சக்தி வளர வளர, கடன் வாங்கித்தான் ஆட்சியை நடத்த வேண்டும். கடன் வாங்காத பொருளாதாரம் என்பது – அது தனி மனித பொருளாதாரத்திற்குச் சரியாக இருக்கலாம்; அரசு பொருளாதார தத்துவத்திற்கு நேர் எதிரானதாகும்’’ என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தஞ்சையில் தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களுக்குப் பேட்டி!
26.6.2026 அன்று காலை 10 மணியளவில் தஞ்சையில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர் நிலைப் பல்கலைக் கழகம்) சூரிய மின்சக்தி நிலையத்தைத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடங்கி வைத்தார். பின்பு அவர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
மின்வெட்டு என்பது எல்லோரையும் பாதித்துக் கொண்டிருக்கின்றது!
தற்போது மின்சாரத் தேவைகள் அதிகமாக இருக்கக்கூடிய பிரச்சினை இருக்கிறது என்பது எல்லோ ரும் அறிந்த ஒன்றே. அந்த வகையில், மின்வெட்டு என்பது எல்லோரையும் பாதித்துக் கொண்டிருக்கின்றது. அரசியல் களத்திலும் அதுதான் இப்போது மிகப்பெரிய அளவிற்குத் தலைப்பாகிக் கொண்டிருக்கின்றது.
ஒவ்வொரு ஆண்டும்
1000 முதல் 1100 யூனிட் மின்சார உற்பத்தி!
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர் நிலைப் பல்கலைக் கழகம்) இருக்கக்கூடிய தேவைகள் – இங்கு ஏற்கெனவே ஜீரோ கார்பன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, கிரீன் – பசுமைத் திட்டத்தை உருவாக்கிக் கொண்டு, மாவட்டம் முழு வதும்கூட அதற்குப் பொறுப்பேற்றக் கூடிய ஒரு பெரிய பல்கலைக் கழகமாக இப்பல்கலைக் கழகம் வளர்ந்து கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், எங்களுடைய தேவையில், ஒவ்வொரு ஆண்டும் 1000 முதல் 1100 யூனிட் மின்சார உற்பத்தியை, இன்றைக்குப் புதிதாக சூரிய வெப்பத்தின் மூலமாகத் தொடங்கியிருக்கின்றோம்.
ஏற்கெனவே பல முயற்சிகள் செய்யப்பட்டன. அந்த வகையில், எங்களுக்குத் தேவை 3,000 யூனிட்கள் என்றால், அதில் மூன்றில் ஒரு பங்கு இதன்மூலமாகவே கிடைத்துவிடுகிறது. இது எங்களுடைய தேவைக்கு மட்டுமல்ல. பொதுவாக, இதுபோன்ற நிறுவனங்கள், மிகப்பெரிய அளவிற்கு வாய்க்கப்பட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு இது மிக முக்கியமானதாகும். குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், ஆண்டுதோறும் 292 டன் கார்பன்-டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைப்பதின் மூலமாக, இந்தப் பகுதியில் பசுமைக் குடில், வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்துகிறது.
220 கிலோ வாட்ஸ்
மின்சாரம் பெறக்கூடிய தொடக்கவிழா!
இப்பொழுது இருப்பது, புவி வெப்பச் சலனக் கொடுமை, எல்நினோ, சூப்பர் எல்நினோ என்று, பயங்கரமான வெப்பம் வரக்கூடிய சூழ்நிலையில், நாம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுதான் அதற்கு நிரந்தரமான ஒரு தீர்வாக இருக்கும். அந்த நிரந்தரமான தீர்வுக்கு நாம் மற்றவர்களைக் குறை சொல்வதைவிட, அவரவர்களுடைய பங்களிப்பு என்ன என்று பார்க்கும்பொழுது, இந்தப் பல்கலைக் கழக நிறுவனம், மற்றவர்களுக்கு வழிகாட்டக் கூடிய அளவிற்கு, சூரிய வெப்பத்திலிருந்து, சூரிய ஒளியிலிருந்து எங்க ளுடைய தேவைக்கேற்ப, 220 கிலோ வாட்ஸ் மின்சாரம் பெறக்கூடிய தொடக்கவிழா இன்றைக்கு நடைபெற்று இருக்கிறது.
இது மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருக்கும். ஏற்கெனவே இதைவிட பெரிய அளவில் செய்திருக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இது ஒரு சிறிய முயற்சி என்றாலும்கூட, இது மற்றவர்க ளுக்குப் பயன்படவேண்டும்.
இது ஒரு முதல் தொடக்கம்,
முடிவல்ல!
இன்றைக்குத் தொடக்க விழா சிறப்பாக நடந்தி ருக்கிறது. இதுகுறித்து மற்ற நிறுவனங்களுக்கும் நாங்கள் ஆலோசனைகளை வழங்கத் தயாராக இருக்கின்றோம். இந்த நிறுவனமும் இன்னும் அடுத்தக் கட்டத்தை நோக்கிச் சென்று, எங்களுடைய தேவையை முழுவதுமாகப் பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கும், தேவைக்கு மேலே வரக்கூடியதை, மற்றவர்களுக்குத் தரக்கூடிய வாய்ப்பையும் பெறக்கூடிய கட்டத்திற்கு இது ஒரு முதல் தொடக்கம், முடிவல்ல!
கடந்த ஆட்சியைக் குற்றம் சொல்லவேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு
தயாரிக்கப்பட்ட வெள்ளை அறிக்கைகள்தான்!
செய்தியாளர்: புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு த.வெ.க. அரசு பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தார்கள். இப்போது ஒவ்வொரு துறையும் வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறதே, அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: வெள்ளை அறிக்கை என்பது, எதற்காக இப்போது கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பதைவிட, அது ஓர் அரசியல் சாயத்தோடு வரக்கூடிய வாய்ப்பாகத்தான் பொதுவானவர்களுக்கே தோன்றுகிறது.
ஏனென்றால், கடந்த ஆட்சியைக் குற்றம் சொல்ல வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு தயாரிக்கப்பட்ட வெள்ளை அறிக்கைகள்தான் – நிதியைப் பொருத்தவரையிலும் சரி, அதேபோல, மின்சாரத் துறை சார்பாகக் கொடுக்கப்பட்ட வெள்ளை அறிக்கையும் சரி.
அதுகுறித்த பதிலை, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றவர்கள் சொன்னாலும்கூட, இன்றைக்கு வரவும் மிகப்பெரிய அளவிற்கு வந்திருக்கிறது. அதேபோல, செலவுகளும் வந்திருக்கிறது என்னும்போது, அடிப்படை யில் ஒரு கருத்தைச் சொல்கிறேன்.
தனி மனிதப் பொருளாதாரத்திற்கும், அரசு பொருளாதாரத்திற்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு!
ஓர் அரசு, பட்ஜெட் போட்டாலும் சரி, அல்லது மின்சாரத் துறையில் அதனுடைய தேவைகளை வைத்தாலும் சரி, தனி மனிதப் பொருளாதாரத்திற்கும், அரசு பொருளாதாரத்திற்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. அதனை அறவே மறந்துவிட்டு, அரசியல்வாதி கள், அரசியல் செய்ய முயற்சிக்கிறார்கள்.
தனி மனிதப் பொருளாதாரத்தில், வரவு என்பது முதல்; செலவு என்பது அதற்கேற்ப. அரசு பொருளாதாரத்தில், செலவு என்பது முதலில். என்னென்ன திட்டங்கள் போடவேண்டும்; அதற்கு எப்படி எப்படி நிதியை உருவாக்கவேண்டும் என்பதற்காக வரவு அதற்கேற்ப இருக்கவேண்டும்.
அந்த வரவுகளுக்குப் பல வழிகள் உண்டு. கடன் வாங்குவது – ஓர் அரசு கடன் வாங்குவது தவறே அல்ல. எதற்காகக் கடன் வாங்குகிறார்கள்? அந்தக் கடன் மூலமாக எப்படி முதலீடு செய்யப்படுகிறது? அந்த முதலீட்டின் மூலமாக எப்படி வருமானம் வருகிறது? என்பதுதான் முக்கியம்.
வளர்ச்சிக்கான, எதிர்காலத்திற்கான முதலீடு!
உதாரணமாக, கல்விக்காக செலவழிக்கிறார்கள் என்று சொன்னால், அதை செலவு என்று சொல்லமாட்டார்கள்; அது வளர்ச்சிக்கான, எதிர்காலத்திற்கான முதலீடு பிள்ளைகளுக்கு. அதுபோன்று, ஒவ்வொரு துறையிலும் வருகிறபோது, அதனை மேலெழுந்தவாரியாக அரசி யலுக்குப் பயன்படுத்தக் கூடியவர்கள் இருக்கிறார்கள். சாதாரண மக்கள் மத்தியில், ‘‘வரவு எட்டணா, செலவு பத்தனா, கடைசியில் துந்தனா?’’ என்பது பாடலுக்கு நன்றாக இருக்குமே தவிர – அதுவும் தனி மனிதப் பொருளாதாரமாகும்.
உலக வங்கியே கடன் கொடுப்பதற்காகத்தான் இருக்கிறது!
அரசு பொருளாதாரத்தில், செலவை முதலில் முடிவு செய்யவேண்டும். கல்விக்கு எவ்வளவு? வளர்ச்சிக்கு எவ்வளவு? அடிக்கட்டுமானத்தை சரிவர செய்தால், வெளிநாட்டுக்காரர்கள் இங்கே முதலீடு செய்வார்கள். அந்த அடிக்கட்டுமானத்தை நாட்டில் உருவாக்குவதற்காக, நல்ல சாலைகள், மற்றவற்றிற்காக கடன் வாங்கிச் செய்யலாம். உலக வங்கியே கடன் கொடுப்பதற்காகத்தான் இருக்கிறது. கடன் வாங்குவது தவறே அல்ல. ஆனால், அதன்மூலம் ஏற்படுகின்ற பயன் என்ன? என்று பார்க்கின்ற நேரத்தில், இதுபோன்ற வெள்ளை அறிக்கைகள் வெளிவருகின்றன.
குறிப்பாக, என்ன செய்யப் போகிறார்கள் என்று அவர்கள் இதுவரை சொல்லவில்லை. சென்ற
ஆட்சியைக் குறை சொல்லியே, ஆட்சியை நடத்திவிட முடியாது.
ஒரே வார்த்தையில், அதற்குப் பதில் இருக்கிறது. அதனாலேதானே மக்கள் உங்கள்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்கள். கடந்த ஆட்சியையே நீங்கள் குறை சொல்லிக் கொண்டிருந்தால், அது பயன்படாது.
ஆட்சியைப் பொறுத்தவரையில்,
திட்டங்களுக்கு வளர்ச்சி வரவேண்டும்!
இதற்கு மாற்று வழி என்ன என்று நீங்கள் சொல்லவேண்டும். அதுமட்டுமல்ல, ஓர் ஆட்சி முடிந்து, இன்னொரு ஆட்சி என்பது –அது கட்சிகளுக்கு வேண்டுமானால், மாறுதல் இருக்கலாம். ஆட்சியைப் பொறுத்தவரையில், திட்டங்களுக்கு வளர்ச்சி வரவேண்டும்.
உதாரணமாக, பழைய அரசாங்கங்கள் அப்படி செய்திருக்கின்றன. முதன்முதலில் மதிய உணவுத் திட்டம் சென்னையில், சர் பிட்டி தியாகராயர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அன்றைக்கு நிதி கொடுக்கவில்லை வெள்ளைக்காரர்கள் என்பதால், அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.
காமராசர் முதலமைச்சராக இருந்தபொழுது, பகல் உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். மக்களிடம் நிதி திரட்டித்தான் முதலில் அந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. பிறகு, அரசாங்கமே அத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கியது, அவருடைய ஆட்சிக் காலத்திலேயே!
பிறகு, எம்.ஜி.ஆர். ஆட்சி வந்தவுடன், ‘சத்துணவுத் திட்டம்’ என்று பெயர் மாற்றி, அத்திட்டத்தைத் தொடர்ந்தார். பிறகு, கலைஞர் ஆட்சியில், சத்துணவுத் திட்டத்தோடு, இரண்டு முட்டை வழங்கினார். முட்டை சாப்பிடாதவர்களுக்கு இரண்டு வாழைப் பழங்கள் கொடுத்தார்.
சத்துணவுத் திட்டத்தோடு, காலை உணவுத் திட்டத்தையும் கொண்டு வந்தார் மு.க.ஸ்டாலின்!
அதற்குப் பிறகு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், சத்துணவுத் திட்டத்தோடு, காலை உணவுத் திட்டத்தையும் கொண்டு வந்தார். இப்போது புதிதாக வந்த அரசு. அந்தக் காலை உணவுத் திட்டத்தை நிறுத்தவில்லை.
தொடர்ச்சியாக இதுபோன்ற திட்டங்களுக்கு ஆகக் கூடிய செலவு என்பது, செலவீனம் அல்ல; அது முதலீடு. ஏனென்றால், அந்த சாப்பாட்டின் மூலமாக, பிள்ளைகளின் பசி தீருகிறது என்பதைவிட, கவனச்சிதறல்கள் இல்லை, பள்ளிக்கூடத்திற்கு வருகிறார்கள்; இடைநிற்றல் இல்லை; அதற்குப் பதிலாக நன்றாக அவர்கள் படித்து, பொறியாளர்கள், வழக்குரைஞர்களாக, மருத்துவர்களாக ஆகிறார்கள்.
அதன்மூலமாக மனித வளம் பெருகுகிறது. மனித வளம் பெருகுவது என்பது, இந்தக் கடன்மூலமாகத்தான் வருகிறது. திரும்ப மக்களுக்கு அதன் பலன் கிடைக்கிறது.
இது பொதுவான பொருளாதாரம். மலிவான அரசியலில், 100 ரூபாய் வருகிறது; 120 ரூபாய் கடன் வாங்கியிருக்கிறோம் என்று சொல்லக்கூடாது.
ஆகவேதான், ஓர் அரசாங்கத்தினுடைய வெள்ளை அறிக்கை என்பதற்கு அப்பாற்பட்டு – என்ன செய்யப் போகிறோம் என்று அவர்கள் சொல்லவேண்டும். இதற்குத் தீர்வு என்ன? என்பதைப்பற்றி அவர்கள் சொல்லவில்லை.
வெள்ளை அறிக்கை ஓர் அரசியல் உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டு இருக்கிறது!
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், இது ஓர் அரசியல் உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டு இருக்கிறதே தவிர, தீர்விற்காக அல்ல.
இரண்டாவதாக, குற்றம் சொல்வது என்பது சரியான வாதமாகாது. தவறு செய்தார்கள் கடந்த ஆட்சியினர் என்று வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும்கூட, அதற்காகத்தானே உங்களை நாங்கள் மாற்றியிருக்கிறோம் என்று மக்கள் சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்.
ஆகவே, கடந்த ஆட்சியின்மீது குற்றம் சொல்லிக் கொண்டிருந்தால், நீண்ட நாள்களுக்கு அது தாக்குப் பிடிக்காது. கேட்கும்போது வேண்டுமானால், சில புரியாத மக்கள் தலையாட்டுவார்கள்; விவரம் தெரிந்த மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
நாங்கள், இன்னின்ன திட்டங்களைச் செய்திருக்கிறோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம், நிறைவேற்றிக் காட்டி, முந்தைய அரசை விட சிறப்பாக செயல்படுகிறோம் என்று இருக்கவேண்டும்.
உதாரணமாக, மகளிர் உரிமைத் தொகையாக, தி.மு.க. அரசு 1000 ரூபாய் கொடுத்தார்கள் என்று சொன்னால், ரூ.2500 அய் நாங்கள் கொடுப்போம். அதற்காக, இன்னின்ன வகையில் நிதியை உருவாக்குவோம் என்றுதானே சொல்லவேண்டும்.
வரி போடவேண்டும் அல்லது ரூபாய் நோட்டு அடிக்கவேண்டும்; ரூபாய் நோட்டு அடிக்கின்ற அதிகாரம் மாநில அரசுக்குக் கிடையாது, ஒன்றிய அரசுக்குத்தான் உண்டு. அல்லது வருவாயைப் பெருக்கவேண்டும்.
இவையெல்லாவற்றையும்விட, கடன் வாங்குவது. கடன் வாங்குவதற்கு, பொருளாதாரத்தில் எந்த அளவிற்கு வளர்ச்சி இருக்கிறதோ, அதுவரையில் வாங்கலாம்.
கடன் வாங்கித்தான்
ஆட்சியை நடத்த வேண்டும்!
கடனைத் திருப்பிக் கொடுக்கக் கூடிய சக்தி வளர வளர, கடன் வாங்கித்தான் ஆட்சியை நடத்த வேண்டும். கடன் வாங்காத பொருளாதாரம் என்பது இருக்கிறதே, அது தனி மனித பொருளாதாரத்திற்குச் சரியாக இருக்கலாம். அரசு பொருளாதார தத்துவத்திற்கு நேர் எதிரானதாகும்.
பழிவாங்கும் அரசியலால் பயனில்லை!
செய்தியாளர்: மேனாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள்மீது, ஊழல் தடுப்புப் பிரிவு ரூ.3 கோடிக்கு மேல் ஊழல் செய்திருக்கிறார் என்று 8 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்களே, அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: எ.வ.வேலு அவர்கள், சட்டமன்றத்தில் தி.மு.க. கொறடவாக இருக்கிறார். சட்டமன்றத்தில் நிறைய பேசினார். அவரும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
பழிவாங்கும் அரசியலால் பயனில்லை; நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறார்கள்.
நெருக்கடி காலத்தையே சந்தித்த ஓர் இயக்கம் தி.மு.க. ஆகவே, நிச்சயமாக நெருப்பாற்றில் நீந்தி வெளியே வந்தவர்கள், இதையும் சந்தித்து, தக்க விடையை மக்களுக்கு அவர்கள் காட்டுவார்கள்.
முதலமைச்சர், சினிமாவில் இருந்து விடுபட்டார்; சினிமா ஸ்டைலில் இருந்து இன்னும் விடுபடவில்லை!
செய்தியாளர்: சட்டமன்றத்தில் முதலமைச்சர் அவர்கள், ‘‘அப்பாவைக் காணோம்’’ என்று குட்டிக்கதைச் சொன்னாரே, அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: இதுகுறித்து ‘விடுதலை’யில் அறிக்கை எழுதியிருக்கிறேன்.
‘‘யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’’
முதலமைச்சர், சினிமாவில் இருந்து விடுபட்டார். சினிமா ஸ்டைலில் இருந்து இன்னும் விடுபடவில்லை. இந்தக் குட்டிக்கதைகள், லாவணிக் கச்சேரிகளை அரசியலில் நடத்தக்கூடாது. அது மீ்ண்டும் பூமிராங் ஆகி, இன்னும் அதிகமாகி வந்து, இந்தச் சண்டையில், வளர்ச்சி, நாடு அரசியல், பொது ஒழுக்கம் எல்லாம் கீழே போய்விடும்.
ஆகவேதான், முதலமைச்சர், முதலமைச்சராக இருக்கவேண்டும். ஆட்சியை, ஆட்சியாக நடத்தவேண்டும். அதனை சினிமாக் காட்சியினுடைய மற்றொரு பகுதியாக ஆக்கக் கூடாது.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
