‘சதி’ – பெண்கள் கொலைகளும், பார்ப்பனர்கள் சதியும்! (3) மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

5 Min Read

வங்க தேசத்தைச் சேர்ந்த பார்ப்பனர் ராஜாராம் மோகன் ராய். இவரும் ஒரு “இந்திய ஆங்கிலேயர்தான்! இந்தியாவிலி ருந்து இங்கிலாந்திற்கு சென்ற முதல் பார்ப்பன இந்தியர் இவர். “பிரம்ம சமாஜம்” என்ற அமைப்பை நிறுவியவர். இவர் இந்து மதத்தில் பல சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்று முயற்சித்தவர். இவரது அண்ணன் திடீரென்று இறந்த போது, அவரது மனைவியை (இவரது அண்ணியை) உடன்கட்டை ஏற்றிக் கொன்றதைக் கண்டு மிகவும் மனம் வருந்தினார்.

இந்தக் காட்டுமிராண்டிப் பழக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற முடிவுக்கு இவர் வர இந்த நிகழ்ச்சியே காரணம். அரசாங்கத்திற்கு “சதி”யைத் தடுக்க வேண்டும் என்று அதிகளவு அழுத்தம் கொடுத்தவர் இவர். ஊரில் ஒரு கும்பலைச் சேர்த்துக் கொண்டு “சதி” பழக்கத்தைத் தகர்க்க முயன்றவர். ஊரில் யாராவது மரணமடைந்து மயானத்திற்குக் கொண்டு சென்றால் அங்கே “சதி”க் கொடுமை நடக்கிறதா என்று பார்த்துவர தன் ஆட்களை அனுப்புவார் ராஜாராம் மோகன்ராய்.அப்படி ஏதாவது நடப்பதாக அறிகுறிகள் தெரிந்தால் உடனே அரசாங்கத்திற்குத் தெரிவிப்பார். ஆனாலும் இந்த ஏற்பாடுகள் எல்லாம் இவர் வசிக்குமிடத்தில்தான் இவரால் செய்ய முடிந்தது. அந்தக் காலக்கட்டத்தில் “சதி தர்மா ரக்க்ஷா’ என்ற ஒரு பிற்போக்கு அமைப்பு அமைந்திருந்தது. ராஜஸ்தானில் “சதி” புகும் பெண்களை தெய்வமாக்கும் ஒரு முயற்சிக்கு முழு ஆதரவு கொடுத்து வந்த அமைப்பு இது.

வாரன் ஹேஸ்டிங்கிற்குப் பிறகு கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்றவர் ஆம்ஹெர்ஸ்ட் பிரபு. அவர் இந்தப் பிரச்சினையைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. அய்ந்து ஆண்டுகள் இவர் ஆட்சியில்தான் இந்த நாடு இருந்தது. 1827இல் ஆட்சிக் காலம் முடிந்த உடன் அவர் எழுதிய ஒரு குறிப்பில், “சதியை முற்றிலுமாக ஒழிக்க ஒரு சட்டத்தைப் பரிந்துரைக்க நான் தயாரில்லை. மக்கள் மனதளவில் அதை ஏற்கும் நிலையில் இருக்கும்போதுதான் அப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவர முடியும்.

இது எவ்வளவு கொடிய பழக்கம் என்று அறியும் உணர்திறன் எனக்கு இல்லை. மீறி ஒரு விசயத்தை நான் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். உள்நாட்டு மக்களுக்கு அறிவைப் பரப்பினால் இந்த மூடநம்பிக்கை படிப்படியாக ஒழியும் என்று நான் நம்புகிறேன். பயன்பாடு மிக்க பகுத்தறிவுக் கல்வியினால் முன்னேற்றம் ஏற்படும்போது விதவைகளைக் கொல்லும் பழக்கம் நிலைத்திருக்காது” என்று லார்ட் ஆம்ஹெஸ்ட் எழுதினார். உறுதியான எதிர்ப்பு ஆங்கில அரசிடமிருந்து வராததால் “சதி” க் கொடுமை மோசமான விளைவுகளுடன் அடங்கா வீரியத்துடன் தொடர்ந்தது.

ஆர்ம்ஹெர்ஸ்டைத் தொடர்ந்து ஜூலை 1828இல் வில்லியம் பெண்டிங் பிரபு தலைமை ஆளுநராகப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றபின் “சதி”யைப் பற்றி தீவிரமாக அனைத்து செய்திகளையும் ஆய்வு செய்தார். அந்தக் கொடுமையான பழக்கத்தை முழுமையாக உணர்ந்த அவர் 1829ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “சதி”யை சட்ட விரோதமான பழக்கம் என்று ஆணை பிறப்பித்தார்.

அதே ஆண்டில் பார்ப்பனர்களுக்கு மரண தண்டனை கிடையாது என்ற பாகுபாட்டை நீக்கியும் பெண்டிங் பிரபு வரலாற்றையே மாற்றிய சட்டத்தையும் கொண்டு வந்தார். “பார்ப்பனர்கள் உயிர் அனைத்து மாநிலங்களிலும் ‘புனித’மாகக் கருதப்படுகிறது என்ற போதும் மரண தண்டனையைப் பொறுத்த வரையில் அனைத்து ஜாதியினரும் சமம் என பிரிட்டிஷ் நிர்வாகம் கருதுகிறது” என்று எழுதிய பெண்டிங் பிரபு. “இந்து மக்களின் பொது உணர்வுக்கு மாறாக இருக்கும் ஒன்றை (மரண தண்டனை பார்ப்பனர்களுக்கு விதி விலக்கு) என்பதை நினைத்துப் பார்க்கவே இயலாது” என்றும் எழுதினார்.

1817இல் ஆங்கிலேய அரசால் கொண்டு வரப் பட்ட சட்டமாக அது இருந்தாலும் 1829இல்தான் கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபுவின் மேற்சொன்ன குறிப்புகளோடு முழுமையாக அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. பார்ப்பனர்கள், “சுயராஜ்யம்” முழக்கம்” பின்னாளில் (பால கங்காதர திலகர்) எழுப்ப, ஸநாதன பழக்கங்களில், பார்ப்பனர் மேலாண்மையில் ஆங்கிலேய அரசாங்கம் தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க இந்த சட்டம் ஒரு காரணமானது.

1829இல் வில்லியம் பெண்டிங் பிரபு “இந்திய ஒழுங்கு முறை சட்டம் XVII” என்ற ஒரு சட்டம் இயற்றினார். அந்தச் சட்டம் “சதி” பழக்கம் மனிதத்தன்மை கொண்ட அனைத்து உணர்வுகளுக்கும் எதிரான அருவருப்பான வழக்கம்” என்று கலாச்சார நடுநிலைக் கருத்தோடு அந்தச் சட்ட முன்வரைவு தொடங்குகிறது. “அது இந்துக்களின் கட்டாயக் கடமையென்று எங்குமே கூறப்படவில்லை” என்றும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

“சதியின் போது நடக்கும் கொடூரச் செயல்கள் இந்துக்களுக்கே அதிர்ச்சியளிக்கின்றன. அந்த நடைமுறையை முற்றிலும் ஒழிக்காமல் அதன் மோசமான விளைவுகளை முடிவுக்குக் கொண்டு வர முடியாது” என்றும் அவர் குறிப்பிடுகிறார். மேலும் அவர், “சட்ட பூர்வமான “சதி”, சட்ட விரோதமான சதி” (தானே விரும்பி ”உடன் கட்டை” ஏறுவது சட்டபூர்வமான “சதி” என்றும், மற்றவர்கள் கட்டாயப்படுத்தி பெண்களை நெருப்பில் தள்ளிக் கொல்வது, ”சட்ட விரோதமான சதி” என்றும் பார்ப்பனர்கள் வற்புறுத்தலால் ஆங்கிலேய அரசு ஒரு புது விளக்கம் கொடுத்தது. ஆனால் பார்ப்பனர்கள் பெண்களை சிதையில் உள்ள நெருப்பில் தள்ளிக் கொல்வது அனைத்துமே “சட்டபூர்வ சதி” என்று ஏமாற்றினர் என்பதே நடைமுறையாக இருந்தது.) என்று வேறுபடுத்திப் பார்க்காமல் எல்லா சூழல்களிலும் அது ஒரு குற்றம்தான்” என்று பெண்டிங் பிரபுவின் சட்டம் ஆணித்தரமாக நிலை நாட்டியது.

“சதி”யை ஒரு பெண், தானாகவே முன்வந்து செய்தாலும், இல்லையென்றாலும் அதற்கு உதவியாகவும், தூண்டுதலாகவும் செயல்படும் அனைவரும் “மரணம்” விளைவிக்கும் குறிப்பான நோக்கமின்றி, ஆனால் “மரணம்” விளையும் என்கிற அறிவுடன் ஆட்கொலை (culpable homicide) செய்ததாகவே அறியப்படுவர்” என்று அந்தச் சட்டம் விளக்கியது. இந்தச் சட்டத்தால் பார்ப்பனர்களால் நடத்தப்பட்ட கொடிய வழக்கமான “சதி” கொலைக் குற்றமாக்கப் பட்டது. ஏற்கெனவே 1817இல், இயற்றப்பட்ட “ஒழுங்கு முறை சட்டம்” பார்ப்பனர்களுக்கு மரண தண்டனையை விலக்கிய உத்தரவை நீக்கியதாலும், “சதி”யைக் கொலையாக அரசு அறிவித்ததாலும் பெண்கள் மேல் நடத்தப்பட்ட இந்தக் கொடுமை ஒழிந்தது.

வில்லியம் பெண்டிங் பிரபு “சதி” என்ற கொலைகார வன்கொடுமையை, பெண்களின் வாழ்வுரிமையை அழித்த பழக்கத்தை ஒழிக்கக் கடுமையான முயற்சியை மேற்கொண்டு சட்டத்தை உருவாக்கினார். இன்றைக்குப் பெண்கள் கணவன் இறந்த பிறகும், அதிலும் முக்கியமாக பார்ப்பனப் பெண்கள் உயிரோடு இருக்கிறார்கள், நெருப்பில் தள்ளிக் கொல்லப்படாமல் இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் மனித நேசமும், துணிச்சலும் கொண்டிருந்த வில்லியம் பெண்டிங் பிரபுதான் காரணம். வரலாறுகளில் கூறப்படும் சாதனையாளர்களில் முதன்மையானவர் மகளிர் ஊயிரைக் காத்த இந்த ஆங்கிலேயர்தான்.

அவர் இந்தச் சட்டத்தை அமல்படுத்திய போது ஆங்கிலேய அதிகாரிகள் மிகவும் கண்டிப்புடன் அதை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு இடப்பட்டிருந்தனர்.அவர்களுக்கு முன் ஆண்ட கடைசி முகலாய பேரரசர் அவுரங்கசீப் “சதி”க்கு தடை விதித்தாலும், அதிகாரிகள் “கையூட்டு”ப் பெற்றுக் கொண்டு அந்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற விடவில்லை. ஆனால் பார்ப்பனர்களின் ஏமாற்று வித்தை ஆங்கிலேயர்களிடம் பலிக்கவில்லை. ஆங்கிலேயர்கள் பெண்களைக் கொன்று குவிக்கும் அந்த காட்டுமிராண்டிப் பழக்கத்தை வெறுத்ததுதான் அதற்குக் காரணம். அந்தப் பழக்கத்தையே இங்கிலாந்து நாட்டில் மிகவும் ஏளனமாக நினைத்தார்கள், பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *