பாவலர் மீனாட்சிசுந்தரம்!-வி.சி.வில்வம்

7 Min Read

வங்கியின் அடிப்படை வேலை களான எழுத்தர் மற்றும் காசாளர் பணியில் சேர்கிறார் ஒருவர்.‌ வங்கியின் உள்ளே கண்ணாடிக் கூண்டுக்குள் “மேலாளர்” என்கிற பதவியில் ஒருவர் அமர்ந்திருப்பார். அந்த இடத்திற்குத் தானும் செல்ல வேண்டும் என முடிவெடுக்கிறார் அவர். ஒரு கட்டத்தில் அதையும் கடந்து சிறப்பாக வருகிறார். அதற்கு இரண்டு விசயங்களைச் செய்ததாகக் கூறுகிறார். ஒன்று, தாம் செய்கிற வேலையில் ஆர்வம்; மற்றொன்று இந்தியாவில் எங்கு பணி மாறுதல் கிடைத்தாலும் சென்றவிடுவது. இப்படி நினைத்ததைச் சாதித்துக் காட்டிய பாவலர் மீனாட்சிசுந்தரம் அவர்களை மதுரையில் சந்தித்தோம்.

அய்யா வணக்கம்! தங்கள் பெயருக்கு முன்னால் உள்ள “பாவலர்” எனும் பட்டம் எப்படி வந்தது? 

என்னுடைய ஆர்வத்தால் வந்தது.  இயல்பாகவே தமிழின் மீது ஆர்வம் கொண்டவன் நான். பணி ஓய்விற்குப் பிறகு நிறைய எழுதத் தொடங்கினேன். அச்சமயத்தில் கரோனா தொற்று ஏற்பட்டு வீட்டினுள் இருக்கும் நிலை. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச் செயலாளர் சுப.முருகானந்தம் அவர்களும், நானும் யாப்பிலக்கணம் கற்கத் தொடங்கினோம்.

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பாரதிதாசன் என்பவர், “பாவலர் பயிலரங்கம்” எனும் பெயரில் வாட்சப் குழுமம் ஒன்று நடத்துகிறார். உலகெங்கும் உள்ள தமிழுணர்வாளர்கள் அதில் இருப்பர். அதில் இலக்கணம் சார்ந்த கவிதைகள் நிறைய வரும். நானும் யாப்பிலக்கணம் தொடர்பாக 500 விருத்தங்கள் எழுதினேன். அதன் பின்னரே 2021 ஆம் ஆண்டு “பாவலர்” எனும் பட்டத்தை எனக்கு வழங்கினர். மொழி இலக்கணமும் நான் படித்துள்ளேன். எண்ணம் பிறந்த மின்னல், பெரியார் பாவையும், எட்டுப் பத்தும், என் நாடு தமிழ்நாடு என்றாடு, முத்தமிழறிஞருக்கு மூன்று கவிமாலை ஆகிய 4 கவிதை நூல்கள் எழுதியுள்ளேன். இரண்டு நூல்கள் எழுத்தில் உள்ளன.

நீங்கள் எங்கு பணி செய்தீர்கள்?

எனது சொந்த ஊர் மதுரை, அனுப்பானடி. 1962 இல் பிறந்த எனக்கு, இப்போது 64 வயதாகிறது.‌ பெற்றோர் பெயர் காளியம்மாள் – செல்வமணி. மதுரை மாநகராட்சிப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை படித்தேன். பிறகு தியாகராயர் நன்முறைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு வரை படித்தேன். மாடல் பள்ளி (Model School) என்பதை, நன்முறைப் பள்ளி என்றே நிர்வாகத்தினர் குறிப்பிடுவர். தொடர்ந்து தெப்பக்குளம் தியாகராயர் கல்லூரியில் பியுசி, மதுரை கல்லூரியில் (Madura College) இளங்கலை வணிகவியல், சவுராஷ்டிரா கல்லூரியில் முதுகலையும் முடித்தேன். படித்துக் கொண்டிருக்கும் போதே 1982 இல் கார்ப்பரேசன் வங்கியில் வேலை கிடைத்தது.

 

1984ஆம் ஆண்டு வரை திருப்பூர், பிறகு 90 வரை மதுரையில் பணி. எழுத்தாளர் மற்றும் காசாளராக இருந்த நான், பதவி உயர்வு பெற்று கோவாவில் 3 ஆண்டுகள் பணி செய்தேன். தொடர்ந்து சேலம், ஈரோடு, நாமக்கல், மும்பை, பஞ்சாப் லூதியானா, மங்களூர் எனப் பணி செய்து 2020 ஆண்டு ஓய்வு பெற்றேன். நான் பணி செய்த கார்ப்பரேசன் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

எழுத்தராகப் பணியில் அமர்ந்த எனக்கு, மேலாளர் வரை உயர வேண்டும் என்கிற இலட்சியம் இருந்தது. அதைவிட கூடுதலாகப் பொது மேலாளர் (General Manager) வரை இலக்கை அடைந்தேன். பணி மாறுதல் என்றாலே தமிழர்களுக்குத் தயக்கம் இருக்கும். ஆனால் இந்தியாவில் எந்த இடத்திற்கும் செல்வதற்கு நான் தயாராய் இருந்தேன்.

பெரியாரியக் கொள்கை எப்போது அறிமுகமானது?

எனது தந்தையார் திராவிட முன்னேற்றக் கழகம். நான் எம்ஜிஆர் ரசிகனாக இருந்து, பின்னர் திமுகவிற்கு வந்தேன். கலைஞரின் பேச்சுகள் எனக்குள் திராவிட இயக்கச் சிந்தனை யைத் தூண்டிவிட்டன.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச் செயலாளர் சுப.முருகானந்தம் அவர்களின் அறிமுகம் 1977 இல் கிடைத்தது. அனுப்பானடியில் பெரியார் பெருந்தொண்டர் ஒருவர் தையலகம் வைத்திருந்தார். அங்கு நான், முருகானந்தம், வழக்குரைஞர் மகேந்திரன், பங்கஜம் குடியிருப்பு அன்பு உள்ளிட்ட சில தோழர்கள் அடிக்கடி சந்திப்போம். அந்தக் கடையின் வாசலில் சிறிய சுவர் ஒன்று இருக்கும். அதில் பெரியார் கருத்துகளை ஒரு தாளில் எழுதி ஒட்டி வைப்வோம். பொரிகடலை வாங்கி, அதில் நாட்டுச் சர்க்கரைச் சேர்த்து, பேசிக் கொண்டே சாப்பிடுவோம்.

அப்போதே ஆசிரியரை அழைத்து கூட்டம் நடத்தி இருக்கிறோம். செல்வேந்திரன், இறையன் போன்றோரும் வந்துள்ளனர். அந்தக் காலக் கட்டத்தில் இராமசாமி – கஸ்தூரி இணையர்கள், சில இளைஞர்கள் உதவியுடன் “புரட்சிக்கவிஞர் வாசகர் வட்டம்” எனும் அமைப்பை ஏற்படுத்தினர். செனாய் நகரில் இருந்த மணியம்மையார் அரங்கத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இது எனக்குள் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தின.

என்ன மாதிரியான திருப்புமுனை?

வாரந்தோறும் விதவிதமான தலைப்புகளில், பலரின் பேச்சுகளையும் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதுகுறித்தக் கருத்துகளையும் எங்களைக் கூறச் சொல்வார்கள். நானும் கவிதைகள் படிக்கத் தொடங்கினேன். வரவேற்புரை, முன்னிலை, நன்றியுரை எனச் சிறு, சிறு வாய்ப்புகள் கிடைத்தன. வழக்குரைஞர் அருள்மொழி சிறு வயதில் பாரதிதாசன் கவிதைகளை இந்தக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

பாரதிதாசனின் “மானுடம் போற்று” என்கிற கட்டுரை நூலில் “நெய்வாழை” குறித்து என்னைப் பேசச் சொன்னார்கள். அதுசமயம் திருக்குறள் மற்றும் பாரதிதாசன் கவிதைகள் நூலை எப்போதும் கைகளில் வைத்திருப்பேன். பிறகு திராவிட இயக்க உணர்வாளர்கள் இணைந்து, “புரட்சிக்கவிஞர் பேரவை” எனும் அமைப்பை 1987 இல் தொடங்கினோம்.

2022 பணி ஓய்விற்குப் பிறகு  வா.நேரு, சுப.முருகானந்தம், நான் மூவரும் இணைந்து பகுத்தறிவு எழுத்தாளர் மன்றக் காணொலிக் கூட்டத்தைத் தொடங்கினோம். அதேபோல பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் பரிந்துரையின் பேரில் புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டேன். இரண்டிலும் தலா 200 கூட்டங்களை நிவர்த்தி செய்திருக்கிறோம்.

உங்கள் காலத்தில் வங்கிப் பணி என்பது பார்ப்பனர்கள் நிறைந்த இடம். அதிலும் பல மாநிலங்களில் நீங்கள் பயணம் செய்துள்ளீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?

“பார்ப்பனர்களைப் பார்த்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்”, என்றார் பெரியார். ஊருக்கும், எந்த நாட்டிற்கும் சென்று பழகிவிடுவார்கள். அதனால்தான் பணி மாறுதல் எங்கு கிடைத்தாலும் சென்றுவிட வேண்டும் என நானும் முடிவு செய்திருந்தேன். அப்படி பல இடங்களுக்கும் சென்றதால் தான் பணி உயர்வும், ஆங்கிலம், ஹிந்தி, கொங்கணி (கோவா), கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளும் தெரிய வந்தன.

பொதுவாகப் பணி இடங்களில் நான்  கொள்கைப் பேசுவதில்லை; ஆனால் நான் ஒரு “பெரியாரிஸ்ட்” என்பதை எல்லோரும் அறிந்தே வைத்திருந்தனர். வங்கியில் பூஜை நடக்கும் போது என்னையும் அழைப்பார்கள். “உங்களை நான் தடுக்கவில்லை; என்னையும் நீங்கள் அழைக்காதீர்கள்” என்று சொல்லிவிடுவேன்.

பொது மேலாளர் வரை நான் பணியில் இருந்துள்ளேன். எனது அறையில் கடவுள் படங்களை நான் அனுமதிப்பதில்லை. அதேநேரம் கார்ப்பரேசன் வங்கியின் நிறுவனர் “கான்பகதூர் ஹாஜி அப்துல்லா” அவர்களின் படத்தை அறையில் மாட்டியிருப்பேன். ஆந்திர மாநிலம் உடுப்பியில் தனது சொந்த வீட்டையே வங்கிக்குக் கொடுத்தவர்.

தங்கள் பேச்சிலும், கவிதையிலும் திராவிடக் கருத்துகளே அதிகம் இருக்கிறதே?

ஆமாம்! அதிலென்ன அய்யம்? திராவிடக் கருத்தியலால் பயன்பெற்ற கோடிக்கணக்கான தமிழ்க் குடும்பங்களில் நாங்களும்  இருக்கிறோம். என்னுடன் பிறந்தோர் 8 பேர். அதில் ஒருவர் மறைந்துவிட்டார். நாங்கள் ஏழு பேரும் அரசு ஊழியர்கள். வங்கிப்பணி, நீதிமன்றத்தில் தட்டச்சர், காயிதேமில்லத் கல்லூரியில் கண்காணிப்பாளர், பொதுப்பணித் துறையில் ஊழியர், முதுநிலை ஆசிரியர், மருத்துவக் கல்லூரியில் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாளர் எனத் திராவிடக் கருத்தியலால் பயன்பெற்றவர்கள் நாங்கள்! அதில் ஒரு சகோதரி தனது புதிய இல்லத்திற்குப் ‘பெரியார் இல்லம்’ என்று சூட்டியதோடு, பெரியார் உருவத்தைத் தனது கையில் பச்சையும் குத்தியுள்ளார்.

நான் மதுரைக் கிளையில் இருந்த போது, என்னுடன் பணிபுரிந்தவர் ரெ.பரிமளா அவர்கள். இருவரும் 1991இல் கவிஞர் சுரதா தலைமையில் திருமணம் செய்து கொண்டோம்.

அவரின் தந்தையார் ரங்கநாதன். கல்லல் ஒன்றியத் திமுக பொருளாளராக இருந்தவர். எங்களுக்கு யாழினி என்கிற மகள் இருக்கிறார். கல்லூரிப் பேராசிரியர் மற்றும் திமுக மகளிரணி சமூக வலைத்தளப் பொறுப்பாளர். மகன் கதிர், வழக்குரைஞராக இருக்கிறார். வங்கியில் பணிபுரிந்த நாங்கள், ஓய்விற்குப் பிறகு சென்னையிலேயே தங்கிவிட்டோம்.

ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறித்து தங்கள் பார்வை என்ன?

படிப்பை முடித்து, வங்கியில் வேலை பார்த்து, திருமணம் செய்து, பிள்ளைகளைப் படிக்க வைத்து, அவர்களுக்குத் திருமணம் செய்து, ஓய்விற்குப் பிறகு சென்னையில் வசிக்கிறேன். இதைச் செய்து முடிக்க எனக்கு 64 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால் ‘விடுதலை’ நாளிதழுக்கு ஆசிரியராக இருந்த அனுபவம் மட்டுமே நமது தலைவருக்கு 64 ஆண்டுகள்!

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் வைத்த நம்பிக்கைகளைப் பொய்த்துப் போகாமல் காப்பாற்றிய வாய்மை தான் ஆசிரியர்! எத்தனையோ எதிர்ப்புகள், எத்தனையோ சதிகள் தாண்டியது ஆசிரியரின் சாதனைகள். நேரடி அரசியலில் ஈடுபடாவிட்டாலும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குக் காரணமாக இருந்தவர். இடஒதுக்கீட்டைக் காப்பாற்றிக் கொடுத்தவர். ஆசிரியரை ஒரு கவிஞராகவும் நான் பார்க்கிறேன். இயல்பாகவே அவரின் எழுத்தில், பேச்சில் எதுகை, மோனை, இயைபு இருக்கும். அனைத்து வகையிலும் நமக்குக் கிடைத்த அற்புதமான தலைவர் அவர்”, என உணர்வோடு செய்திகளைப் பகிர்ந்து கொண்டார் பாவலர் மீனாட்சிசுந்தரம் அவர்கள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *