சென்னை, ஜூன் 26- சென்னையில் ஏஅய் தொழில்நுட்ப உதவியோடு சாலை விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மாநகாராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 70% முடிந்த நிலையில், மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டு 6 மாத்தில் செயல்பாட்டிற்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதிவேகமாக செல்வோர், சிக்னல், சாலை விதிகளை மீறுவோருக்கு இதன்படி அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் இந்தியர் என்பதற்கான ஆதாரங்கள் இவைதான்
புதுடில்லி, ஜூன் 26- பாஸ்போர்ட், ஆதார் போன்றவை இந்திய குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என்று வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இதனால் நாம் இந்தியர் தான் என்பதை எந்த ஆவணம் நிரூபிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. குடியுரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட விதிகளின்படி பிறப்புச் சான்றிதழ், 10,12-ஆம் வகுப்பு சான்றிதழ், பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்கள், நில ஆவணங்கள் குடியுரிமை சான்றிதழ்களாக கருதப்படும் என்கின்றனர்.
‘நீட்’ விடைத்தாள் வெளியானது
புதுடில்லி, ஜூன் 26- ‘நீட்’ மறுதேர்வின் தற்காலிக விடைக்குறிப்பை NTA வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் விண்ணப்ப எண், கடவுச்சொல்லை கொடுத்து பதிவிறக்கம் செய்யலாம். 4 வகை வினாத்தாள்களுக்கான விடைக்குறிப்புகளும் வெளியான நிலையில், விடையில் தவறு இருப்பதாக நினைத்தால், ஒரு கேள்விக்கு ரூ.200 கட்டணம் செலுத்தி ஜூன் 28-க்குள் எதிர்ப்பு விண்ணப்பிக்கலாம். ஜூன் 21-ஆம் தேதி நடைபெற்ற மறுதேர்வை நாடு முழுவதும் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.
பொதுத் தேர்வில்
தோல்வி அடைந்தவர்களுக்கு
சென்னை, ஜூன் 26- பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத் தேர்வு ஜூன் 29-இல் தொடங்கவுள்ளது. +2 துணைத்தேர்வு ஜூன் 29 – ஜூலை 7 வரை நடைபெறும். அதேபோல், 10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 8 – 16 வரை நடைபெறும் என தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 233 மய்யங்களில் 64,447 மாணவர்கள் தேர்வெழுத இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2-ஆவது வாய்ப்புக்கு ரெடியா மாணவர்களே?
தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று
ஒன்றியக் கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்
கேரள கல்வித்துறை அமைச்சர்
ரோஜி எம்.ஜான் வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 26 சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ரோஜி எம் ஜான் மற்றும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் லெனின் பிரசாத் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் ரோஜி எம் ஜான் கூறியதாவது: இந்தியாவில் மாணவர்களின் பிரச்சினைகள் குறித்து குரல் கொடுப்பதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ‘மாணவர்களின் குரல்’ இயக்கம் தொடங்கப்பட் டுள்ளது. இதன் மூலம் ஒன்றிய அரசிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் முக்கியமாக 3 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும். தற்போதைய தேர்வு முறைகளை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும். அனைத்து தேர்வுகளுக்குமான ஆண்டு வாரியான அட்டவணைகள் (Annual Calendar) முறையாக வெளியிடப்பட வேண்டும் ஆகியன அக்கோரிக்கைகள் ஆகும்.
ஆகஸ்ட் 9-இல் டில்லியில் முற்றுகை
நீட் (NEET) தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் (NTA) குளறுபடிகள் மற்றும் செயல்பாடுகளைக் கண்டித்து, நாடு தழுவிய அளவில் 40 நாள்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொடர் போராட்டத்தின் இறுதி நாளான ஆகஸ்ட் 9ஆம் தேதி, டில்லியில் தேசிய அளவில் மிகப்பெரிய அளவிலான மாணவர் போராட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் 13 பேர் உயிரிழப்பு
முழு அறிக்கையை
விசாரணைக் குழு சமர்ப்பித்தது!
சென்னை, ஜூன் 26 திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு காரணமாக, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்த அரசு சார்பில் மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுவினர் ஏற்கனவே கடந்த 23ஆம் தேதி தங்களது இடைக்கால அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரிடம் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், வாயு கசிவுக்கான காரணங்கள், தொழிற்சாலையின் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் எதிர்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பல்வேறு முக்கிய தரவுகளுடன் கூடிய தங்களது முழுமையான இறுதி அறிக்கையை இக்குழுவினர் தற்போது அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.
அடுத்தகட்ட நடவடிக்கை
இந்த முழு அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் மற்றும் விபரங்களின் அடிப்படையில், விபத்துக்கு காரணமானவர்கள் மீதும், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும் கடுமையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
