ஏழைக் குடும்பங்கள் பாதிக்கும் அபாயம் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய ஒன்றிய அரசு திட்டமாம்!

புதுடில்லி, ஜூன் 26 வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு உதவும் வகையில் நாடு முழுவதும் ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், தற்போதைய நடைமுறைப்படி குடும்ப (ரேசன்) அட்டை வைத்துள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல் மாதந்தோறும் 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த விநியோக முறையில் முக்கிய மாற்றங்களைச் செய்ய ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-இல் திருத்தம் கொண்டுவர முன்மொழியப்பட்டுள்ளது. இந்த புதிய உணவுப் பாதுகாப்பு (திருத்த) மசோதா 2026 குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான காலக்கெடு ஜூலை 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசின் விளக்கமும் புதிய நடைமுறையும்

தற்போதைய விநியோக முறையில், குறைந்த உறுப்பினர்களைக் கொண்ட அந்தியோதயா குடும்பங்களுக்கு அதிக உணவு தானியம் கிடைப்பதாகவும், இதில் நிலவும் முரண்பாடுகளைக் களையவே புதிய திருத்தம் கொண்டு வரப்படுவதாகவும் ஒன்றிய உணவுத் துறை தெரிவித்துள்ளது.

7 கிலோ உணவு தானியம்

புதிய திருத்தத்தின் சிறப்பம்சங்கள்:குடும்பத்திற்குப் பதிலாக, நபர் ஒருவருக்கு மாதம் 7 கிலோ உணவு தானியம் என்ற அடிப்படையில் விநியோகம் செய்யப்படும். ஒரு குடும்ப அட்டைக்கான அதிகபட்ச வரம்பு 35 கிலோவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குடும்பத்தில் இரண்டு நபர்கள் இருந்தால் 14 கிலோவும், 4 நபர்கள் இருந்தால் 28 கிலோவும் வழங்கப்படும்.

5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இருக்கும் பெரிய குடும்பங்களுக்கு மட்டுமே அதிகபட்ச வரம்பான 35 கிலோ உணவு தானியம் கிடைக்கும்.

ஏழை குடும்பங்களை பாதிக்கும்

ஒன்றிய அரசின் இந்த புதிய திட்டத்திற்கு ஏழை எளிய மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இத்திட்டம் அமலுக்கு வந்தால், குறைவான உறுப்பினர்களைக் கொண்ட ஏழைக் குடும்பங்களுக்குக் கிடைக்கும் உணவு தானியத்தின் அளவு பெருமளவில் குறையும்.

“குடும்பத்தில் 4 உறுப்பினர்கள் இருந்தால் கூட இனி 28 கிலோ மட்டுமே கிடைக்கும் என்பதால், இந்த விகிதாச்சார முறை தங்களைப் பெரிதும் பாதிக்கும்” என அந்தியோதயா அட்டைதாரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பெரிய குடும்பங்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று அரசு கூறினாலும், பரம ஏழைகளாக உள்ள சிறு குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்த புதிய திருத்தத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *