‘‘சமூக நீதி வரலாறு’’ எனும் தலைப்பில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் மாணவர்களுக்கு விடுத்த வேண்டுகோள்!

3 Min Read

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை முதல் நாள் (25.06.2026) செய்தி!
போராடிப் பெற்ற சமூக நீதி உரிமைகளை தக்க வைத்து அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல – மாணவர்களாகிய நீங்கள் தயாராக வேண்டும்!

தென்காசி, ஜூன் 26 ‘‘மீண்டும் ஆதிக்க சக்திகள் தலை தூக்கி இருக்கும் இந்த காலகட்டத்தில், தமிழ்நாடு பெற்ற சமூக நீதி உரிமைகளை தக்க வைத்து அதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு மாணவர்களாகிய நீங்கள் தயாராக வேண்டும்’’ என்று, திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன், ‘‘சமூகநீதி வரலாறு’’ எனும் தலைப்பில் பாடம் நடத்தும் போது மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இருந்து இரண்டாம் நாளிலிலும் புதிதாக கலந்து கொண்ட இருபால் மாணவர்களையும் சேர்த்து160 பேர் கலந்து கொண்டனர். இதில், பெண்கள் 62. ஆண்கள் 98, அதிலும், பட்டப்படிப்பு பெற்றவர்கள் 57, பொறியா ளர்கள் 16, பட்டயப் படிப்பு பெற்றவர்கள் 6 பேர் ஆவர்.

திராவிடர் கழகம்

தென்காசி மாவட்டம் சார்பாக, 47 ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, ஜூன் மாதம் 25,26,27,28 ஆகிய நான்கு நாட்களில் நடத்தத் திட்டமிடப்பட்டு, குற்றாலம் சிறப்பு நிலை பேரூ ராட்சியில் நேற்று (25.06.2026) தேநீர் மற்றும் மதிய உணவு இடைவேளை உள்பட காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை தென்காசி மாவட்டம் இராமாலயம் பகுதியில் உள்ள இராமவர்மபுரம் வடக்குத் தெருவில் உள்ள, ‘வீகேயென்’ இல்லம் இரண்டாம் கட்டடத்தில், முதல் நாள் கொள்கை வகுப்புகள் சிறப்பாக நடைபெற்றன. இதில் எட்டு முக்கியமான தலைப்புகளில் எட்டு முக்கியமான ஆளுமைகள் சிறப்பாக பாடம் நடத்தினர்.

திராவிடர் கழகம்

தொடக்க விழாவைத் தொடர்ந்து, பகுத்தறிவு ஊடகத்துறையின் மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, ‘‘தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு’’ எனும் தலைப்பிலும், பேராசிரியர் பா.காளிமுத்து, ‘‘திராவிடர் கழக வரலாறு’’ எனும் தலைப்பிலும், பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன், ‘‘தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி’’ எனும் தலைப்பிலும், கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, ‘‘ஏன் வேண்டும் இடஒதுக்கீடு?’’ எனும் தலைப்பிலும், பேராசிரியர் முனைவர் மு.சு.கண்மணி, ‘‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’’ எனும் தலைப்பிலும், கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், ‘‘உயிர்கள், படைப்பா? பரிணாமமா?’’ எனும்‌ தலைப்பிலும், கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன், ‘‘சமூகநீதி வரலாறு’’ எனும் தலைப்பிலும், திண்டுக்கல் ஈட்டி கணேசன், ‘‘மந்திரமா? தந்திரமா?’’ எனும் தலைப்பிலும் மொத்தம் எட்டு வகுப்புகளை நடத்தினர்.

 

‘‘சமூக நீதி வரலாறு’’ எனும் தலைப்பில் பாடம் நடத்திய கழகப் பொருளாளர் வீ.குமரேசன், சமூக நீதியின் முழு பரிமாணத்தையும் எடுத்துரைத்து, அதன் சாரமாக, ‘‘ஆதிக்கச் சக்திகள் தலை தூக்கும் நேரத்தில், போராடிப் பெற்ற சமூகநீதி உரிமைகளை தக்க வைத்து, அதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லவும் வேண்டும்’’ என்று, மாணவர்களுக்கு, அடுத்த தலை முறையான நீங்கள் அதற்கு தயாராக வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

திராவிடர் கழகம்

நிகழ்ச்சியில், மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு தஞ்சை இரா.குணசேகரன், தென்காசி மாவட்டக் காப்பாளர் டேவிட் செல்லதுரை, தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், செயலாளர் கை.சண்முகம், விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன், தூத்துக்குடி மாவட்டக் காப்பாளர் மா.பால் இராஜேந்திரம், குடந்தை மாவட்டக் காப்பாளர் தாராசுரம் இளங்கோவன், தென்காசி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முருகன், தென்காசி மாவட்ட இளைஞரணித் தலைவர் கோபால், பெருவளப்பூர் சித்தார்த்தன், தமிழ்ச் சுடர், தகவல் தொழில்நுட்ப குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், பகுத்தறி வாளர் கழக மாநில துணைத் தலைவர் கே.டி.சி.குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தும் பயிற்சி வகுப்புகள் பணிகளை முன்னெடுத்தும் சிறப்பித்தனர்.

திராவிடர் கழகம்

மாநில ஒருங்கிணைப்பாளரும், பயிற்சிப் பட்டறை ஒருங்கிணைப்பாளருமான தஞ்சை இரா.ஜெயக்குமார் ஒவ்வொரு வகுப்பாசிரியர்கள் பற்றியும் அறிமுகம் செய்து, ஒட்டுமொத்த வகுப்புகளையும் நெறிப்படுத்தினார்.

திராவிடர் கழகம்

ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மா.அழகிரிசாமி, பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன், முனைவர் மு.சு.கண்மணி, கோ.கருணாநிதி ஆகியோர் படக்காட்சிகள் (பி.பி.டி) மூலமாக பாடங்களைக் கற்பித்தனர். வகுப்புகளின் இடைவேளைகளில், ‘தாமிரபரணி கலைக்குழு’வின் சார்பில் தோழர்கள் மதியழகன், சங்கர், மரியடேவிட், ஸ்டீபன் ஆகியோர் பகுத்தறிவுப் பாடல்களையும், ஜாதி ஒழிப்பு கருத்தமைந்த குறு நாடகங்களையும், இசைப்பின்னணியுடன் நடத்தி, மாணவர்களின் கவனம் ஈர்த்தனர். ஒவ்வொரு வகுப்பின் இறுதியிலும் மாணவர்களை கேள்விகள் கேட்கச் சொல்லி, அவற்றுக்கு உரிய பதில்களை அந்தந்த வகுப்பா சிரியர்கள் வழங்கினர். பார்வையாளர்களும் இறுதிவரை இருந்து பாடங்களை கேட்டுப் பயன்பெற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *