தென்காசி, ஜூன் 25- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் பேரூராட்சிகள் இயக்குநரகம் செயல்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 487 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக அரசின் நிதி ஒதுக்கீடு இல்லாததால், பணியாளர்களுக்கு 2 மாதங்களாக ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான மின்சாரம், குடிநீர் வசதி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பணிகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்வதிலும் இழுபறி ஏற்பட்டது.
இதனால் தமிழ்நாடு முழுவதும் பேரூராட்சிகளில் நிர்வாகம் முடங்கியது. அடிப்படைப் பணிகள் அடியோடு பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பேரூராட்சி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பணியாளர்களுக்கு எவ்வளவு நாட்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பது குறித்த விவரத்தை கேட்டறிந்து ஒரு மாத ஊதியம், குடிநீர் கட்டணம், மின்கட்டணம் ஆகியவற் றுக்கான நிதியை விடுவித்துள்ளனர். அதாவது மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு பேரூராட்சிக்கும் ரூ.10 லட்சம் முதல் 25 லட்சம் வரை ஒரு மாத நிதி மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
சாமி தரிசனத்துக்கும் லஞ்சமாம்!
பழநி கோயிலில் விரைவு தரிசனத்துக்காக
ரூ.3 ஆயிரம் லஞ்சமாக பெற்ற காவலாளிகள் 3 பேர் பணி நீக்கம்
பழநி, ஜூன் 25- பழநி முருகன் கோயிலில் விரைவு தரிசனம் செய்ய வைப்பதாகக் கூறி ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற 3 காவலாளிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். சம்பந்தப்பட்ட அந்நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு பழநி வந்த வெளியூர் பக்தர்கள் 3 பேர், தனியார் காவலாளிகள் 2 பேரிடம் விரைவு தரிசனம் குறித்து கேட்டுள்ளனர். இதற்காக ரூ.3 ஆயிரம் பெற்றுக் கொண்ட காவலாளிகள், கோயிலில் இருந்த மற்றொரு காவலாளி மூலம் விரைவாக தரிசனம் செய்ய வைத்துள்ளனர்.
இந்த நிகழ்வு அந்த பக்தர்களின் உறவினரான கோயில் பணியாளர் ஒருவருக்குத் தெரியவந்தது. தகவலறிந்த கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, கண்காணிப்புப் படக் கருவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
இதில், காவலாளிகள் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து காவலாளிகள் 3 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.மேலும், சம்பந்தப்பட்ட தனியார் செக்யூரிட்டி நிறுவனத்துக்கும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து இணை ஆணையர் உத்தரவிட்டார்.
தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு
சென்னை, ஜூன் 25- தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்களை பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும் என்ற மாநில தகவல் ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை, பள்ளிகளின் விளம்பர பலகைகளில் வெளியிடுவதை கட்டாயமாக்கும்படி, தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் மே 25ஆம் தேதி உத்தரவிட்டது.
அதன்படி, ஜூன் 5-ஆம் தேதிக்குள் கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடும்படி, அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ, பிற வாரிய பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் ஜூன் 1ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்தார்.
இந்நிலையில் மாநில தகவல் ஆணைய உத்தரவையும், தனியார் பள்ளிகள் இயக்குநர் பிறப்பித்த அறிவிப்பையும் ரத்து செய்யக் கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், தகவல் உரிமைச் சட்டம், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது; சிபிஎஸ்இ போன்ற ஒன்றிய அரசின் பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த முடியாது என வாதிடப்பட்டது.
தமிழ்நாடு அரசுத் தரப்பில், தகவல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் கல்விக் கட்டணத்தை வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; இந்த உத்தரவை எதிர்த்து தனிப்பட்ட பள்ளிகள் தான் வழக்கு தாக்கல் செய்ய முடியும்; சங்கத்தின் சார்பில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது; விதிகளின்படி பள்ளிகள் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும் என வாதம் முன்வைக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு குறித்து ஜூன் 18ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார். இந்த வழக்கு நேற்று (24.6.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கவுதம் மற்றும் மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் விஜய ஆனந்த் ஆஜராகி வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
