ஆந்திரா அமைச்சர் நாரா லோகேஷ் பாராட்டு!
அமராவதி, ஜூன் 24 தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறியது தொடர்பாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நேற்று முன்தினம் (22.06.2026) செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “முந்தைய ஆட்சிக் காலத்தில் நடந்தவற்றுக்கு இப்போது எங்கள் மீது பழி சுமத்தப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. காலதாமதம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிறுவனங்கள் வேறு மாநிலங்களைத் தேடிச் செல்கின்றன. அப்போது இருந்த ஓர் அமைச்சரும், அவரது சகோதரரும் முன்னெடுத்த செயல்பாடுகளால் ஏற்பட்ட ஊழல்களே இன்று பல நிறுவனங்கள் வெளியேறுவதற்குக் காரணம்” என்று தி.மு.க. மீது குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செயல் தலைவரும், ஆந்திரா மாநில மனிதவள மேம்பாடு; தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு; ரியல் டைம் கவர்னன்ஸ் (RTG) துறை அமைச்சருமான நாரா லோகேஷ் தனியார் ஆங்கில செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசியது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அரசியல் எவ்வளவு இரக்கமற்றதாக இருக்கக்கூடும் என்பது குறித்து நான் பேசினேன். தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முந்தைய திமுக அரசுடன் நாங்கள் கடுமையாகப் போட்டியிட்டோம் – சிலவற்றை வென்றோம், சிலவற்றை இழந்தோம். ஆனால், அரசாங்கம் தவறாகப் பணம் கேட்பதாக எந்தவொரு முதலீட்டாளரும் புகார் கூறி, நான் கேள்விப்பட்டதே இல்லை. பாராட்ட வேண்டிய விஷயத்தைப் பாராட்டத்தான் வேண்டும்: திமுக அரசு ஒரு நேர்மையான மற்றும் தொழில்முறை சார்ந்த முதலீட்டு நடைமுறையை நடத்தியது. அது நிச்சயமாகப் பாராட்டத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
