நியூயார்க், ஜூலை 29- ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா மீது 100 சதவீத கூடுதல் வரி விதிக்க வழிவகை செய்யும் புதிய மசோதா, அமெரிக்க செனட் சபையின் நடைமுறை வாக்கெடுப்பில் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.
அமெரிக்காவிற்கு வருகை தந்துள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி முன்னிலையில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. அமெரிக்காவின் முக்கிய இரு கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டின் ஆதரவோடும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, அது அதிகாரப்பூர்வ சட்டமாவதற்கான முதல் முக்கிய படியை எட்டியுள்ளது. ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தும் நோக்கிலும், அந்நாட்டுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் கியூசு தீவில்
நிலநடுக்கம் – ரிக்டரில் 7.1 ஆக பதிவு
நிலநடுக்கம் – ரிக்டரில் 7.1 ஆக பதிவு
டோக்கியோ, ஜூலை 29- ஜப்பானின் தெற்குப் பகுதியில் கியூசு தீவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தில், நேற்று (28.7.2026) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது.
இதைத் தொடர்ந்து, ஒரு மீட்டர் (3.28 அடி) உயரம் வரை அலைகள் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மய்யம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரவு முழுவதும் தீவிரமாக நடைபெற்றன. பலர் காயமடைந்துள்ளதுடன், சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலையிலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காஷிமா நகரில் உள்ள ‘ஏயான் மால்’ வணிக வளாகத்தின் இரண்டாவது தளம் இடிந்து விழுந்ததில் பலர் கட்டடத்திற்குள் சிக்கிக்கொண்டதாக குமாமோட்டோ தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
‘நிப்பான் பேப்பர் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் யாட்சுஷிரோ ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குமாமோட்டோ மற்றும் அண்டை மாகாணமான நாகசாகியில் வசிக்கும் சுமார் 2.60 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வெளியேறுமாறு தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை முகமை அறிவுறுத்தியுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குமாமோட்டோ பகுதி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து தென்மேற்கே சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பாதிப்பு பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
எபோலா தொற்றிலிருந்து மீண்ட உகாண்டா!
கம்பாலா, ஜூலை 29- ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா தொற்றுப் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஜூன் மாத மத்தியில் கடைசி எபோலா நோயாளி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், சந்தேகத்துக்குரிய நபா்கள் அனைவரும் 21 நாள்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனா்.
இதையடுத்து, புதிய சமூகப் பரவல் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டு, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அண்டை நாடான காங்கோவில் இருந்து எல்லை வழியாக வந்த நபா்கள் மூலமே இந்நோய் முதன்முதலில் உகாண்டாவில் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிலவின் மீது மோதி ஆராய்ச்சி செய்யும் பால்கன்-9 ராக்கெட்
நியூயார்க், ஜூலை 29- அமெரிக்காவின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பால்கன்-9 ரக ராக்கெட், நாசாவின் கென்னடி விண்வெளி மய்யத்தில் இருந்து, கடந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி 2 லேண்டர்களுடன் நிலவுக்கு புறப்பட்டு சென்றது. 2 லேண்டர்களும் நிலவை அடைந்து விட்டன. அதில், ஒரு லேண்டர் நிலவின் மீது மோதி விட்டது. ‘புளு கோஸ்ட்’ என்ற மற்றொரு லேண்டர் நிலவில் வெற்றியுடன் தரையிறங்கி உள்ளது. 2 வாரங்கள் செயல்பட்டு, நிலவில் சூரியன் மறையும் ஒளிப்படம் ஒன்றை எடுத்து அனுப்பியது. எனினும், நிலவில் சூரியன் மறைந்ததும் தன்னுடைய ஆற்றலை அது இழந்தது. இந்த நிலையில், லேண்டர்களை இறக்கி விட்ட அந்த ராக்கெட்டின் மேல் பகுதி, தன்னுடைய வேலையை முடித்து விட்டு பூமிக்கு திரும்ப வேண்டும். ஆனால், அது உயர்மட்ட சுற்று வட்டப்பாதையில் சிக்கிக்கொண்டது.
பூமிக்கு திரும்பாததால், ராக்கெட் என்ன ஆனது? என விஞ்ஞானிகள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். இதுபோன்று 1,053 முறை கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டதில், பல முறை பூமி மற்றும் நிலவு ஆகியவற்றின் சுற்றுவட்டப்பாதைகளை அது கடந்து சென்றது கவனிக்கப்பட்டது. ஆனால், அதன் மீதும் மோதும் வகையில் நெருங்கிச் செல்லவில்லை.
இந்த விண்கலப் பகுதி எரிபொருள் தீர்ந்து கட்டுப்பாட்டை இழந்து நிலவை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் நிலவின் மேல்பரப்பில் இந்த மோதல் விரைவில் நடக்கப்போகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி, சுற்றுவட்டப்பாதை தொடர்பான விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வந்தனர். அதன் பயணம் மற்றும் வருங்காலத்தில் அதற்கு என்ன நடக்கும்? என்பது பற்றி கணித்துள்ளனர்.
அதன்படி, வருகிற 5ஆம் தேதி மதியம் 1.14 மணியளவில் அது நிலவில் உள்ள அய்ன்ஸ்டீன் பள்ளம் அருகில் மோதக்கூடும். அப்போது மணிக்கு 8 ஆயிரத்து 700 கி.மீ. அல்லது ஒலியின் 7 மடங்கு வேகத்தில் அது இயங்கும் என விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர். இதனால், யாரும் அச்சப்பட தேவையில்லை. விண்வெளியில் இதுபோன்ற குப்பைகள் சேராமல் அதனை கவனத்துடன் அகற்றுவது பற்றிய தேவையை உணர்த்தியுள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அந்த ராக்கெட்டின் மேல் பகுதி, இதுவரை 26 நாட்களில் பூமியை ஒரு முறை சுற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
