புதுக்கோட்டை, ஜூன் 23- சேலத்தில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக பொதுக்குழு மற்றும் இளைஞர் அணி அமைப்புகளை கட்டமைப்பு செய்தல் குறித்து நடைபெற்ற இந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட கழகத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகித்தார். கழகக் காப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்டச் செயலாளர் ப. வீரப்பன், மாவட்டத் துணைத் தலைவர் சு.கண்ணன், மாநகரத் தலைவர் அ.தர்மசேகர், இளைஞரணிச் செயலாளர் ஆறு. பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் கழக இளைஞர் அணி மாநிலச் செயலாளர் நாத்திக.பொன்முடி கருத்துரையாற்றினார்.
அப்போது அவர் கழக ஏடான விடுதலை நாளிதழை வீடுகள் தோறும் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியம் குறித்தும் கழகத்தில் புதிய இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது அவசியம் குறித்தும் திராவிடர் கழக வரலாறு குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கட்டளையின்படி கழகத்தின் அறப்போராட்ட களத்திற்கு ஆயிரம் இளைஞர்களை இணைக்கும் பணியாக புதுக்கோட்டை கழக மாவட்டத்தின் சார்பில் 15 புதிய இளைஞர்களைச் சேர்த்து அந்தப் பட்டியலை வழங்குவது என்றும், திராவிடர் கழக, இளைஞர் அணி, மாணவர் கழகம் சார்பில் ஒன்றியங்கள் தோறும் கழக பரப்புரைக் கூட்டங்களை நடத்துவது என்றும் கழக ஏடுகளான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு ஆகிய இதழ்களின் சந்தாக்களை புதுப்பிப்பது என்றும் புதிய சந்தாக்களை சேர்த்து வழங்குவது என்றும் வருகிற 25, 26, 27, 28 ஆகிய நான்கு நாட்களில் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து குறைந்தது ஐந்து மாணவர்களை பயிற்சிக்கு அனுப்புவது போன்ற தீர்மானங்களும் இயற்றப்பட்டன.
இந்நிகழ்வில் மேலும் நகர அமைப்பாளர் பி. சேகர், திருமயம் ஒன்றியத் தலைவர் அ. தமிழரசன், ஒன்றியச் செயலாளர் துரை. இந்திரஜித், விடுதலை செய்தியாளர் ம. மு.கண்ணன் உள்ளிட்ட தோழர்களும் கலந்து கொண்டனர். கழகக் காப்பாளர் சுப்பையா நன்றி கூறினார்.
