‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–3) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை

உலகில் கூர்மையோடு சிந்தித்தவர்கள் ஏராளமாக இருப்பார்கள் வரலாற்றில்!
பெரியாரின் சிந்தனைகளின் கூர்மை என்பது
சமூகத்தின் சொத்து – வளர்ச்சியின் வரலாறு –முன்னேற்றத்திற்கான துடுப்பு, பாதை!

சென்னை, ஜூன் 23  உலகில் கூர்மையோடு சிந்தித்த வர்கள் ஏராளமாக இருப்பார்கள் வரலாற்றில்! ஆனால், தந்தை பெரியாரைப் பொருத்தவரையில், அவருடைய சிந்தனையின் கூர்மை என்பது சமூகத்தின் சொத்து. வளர்ச்சியின் வரலாறு. முன்னேற்றத்திற்கான துடுப்பு, பாதை.  காலத்தை வென்றவை. பறவை, கூட்டுக்குள் இருப்பது இயற்கை, மகிழ்ச்சி; கூண்டுக்குள் இருப்பது செயற்கை – கொடுமை –  அடிமைத்தனம்  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents
உலகில் கூர்மையோடு சிந்தித்தவர்கள் ஏராளமாக இருப்பார்கள் வரலாற்றில்! பெரியாரின் சிந்தனைகளின் கூர்மை என்பது சமூகத்தின் சொத்து – வளர்ச்சியின் வரலாறு –முன்னேற்றத்திற்கான துடுப்பு, பாதை!‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–3)ஆய்வுச் சொற்பொழிவுகள் புத்தகமாக வெளிவரவேண்டும்!எனக்கு மற்ற பணிகளின் சுமைகள் அதிகமாக இருந்தாலும், இது எனக்கு ‘இன்பச் சுமை’பெரியாரின் வாழ்நாள் மாணவன் என்று சொல்வதில்தான் எனக்கு உண்மையான ஒரு மகிழ்ச்சி!தந்தை பெரியார் அவர்கள் மக்கள் மொழியில் பேசினார்; மக்களுக்காக சிந்தித்தார்கள்; மக்களுக்காக எழுதினார்கள்!பெரியாரின் சிந்தனையின் கூர்மை என்பது சமூகத்தின் சொத்து – வளர்ச்சியின் வரலாறு– முன்னேற்றத்திற்கான துடுப்பு, பாதை!கருத்தில் ஊறிய, அனுபவ முத்துகள்!‘குதிரை பேரம்’ என்றால் ‘ஆரிய பேரம்’ என்று  புது அர்த்தம்!‘‘அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்!’’சில அரசியல்வாதிகளுக்குப் புதிய கட்சிகள் ‘வேடந்தாங்கல்’பறவை, கூட்டுக்குள் இருப்பது இயற்கை – மகிழ்ச்சி! கூண்டுக்குள் இருப்பது செயற்கை – கொடுமை அடிமைத்தனம்!நீதிக்கட்சியைப் போன்று ஒரு யோக்கியமான கட்சி வேறு எதுவும் கிடையாது!பணக்காரர்களாக இருந்தார்கள், ஆனால், ஏழைகளுக்காகப் பாடுபட்டார்கள்!

‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–3)

நேற்று (22.6.2026) மாலை 6.30 மணியளவில், சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார்  அரங்கத்தில், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் ஆகியவற்றின் சார்பில்,  ‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–3) என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய ‘‘தந்தை பெரியாரின் சிந்தனைகளின் கூர்மை’’ என்ற தலைப்பில் நடைபெறுகின்ற ஆய்வுத் தொடர் சொற்பொழிவு–3 இல் கலந்துகொள்வதில் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைகின்றோம்.

ஆய்வுச் சொற்பொழிவுகள்
புத்தகமாக வெளிவரவேண்டும்!

இந்தப் பொழிவுகளை நேரில் கேட்டவர்களும், ‘விடுதலை’ வாயிலாக படித்த நண்பர்கள் பலரும், என்னைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, என்னை உற்சாகப்படுத்தக் கூடிய அளவில், ‘‘மிகச் சிறப்பான கருத்துகள்; அவையெல்லாம் புத்தகமாக வெளிவரவேண்டும்’’ என்று சொன்னார்கள்.

புத்தகமாக எழுதுவதற்கு நினைத்துத் தொடங்கி, அதற்குப் பிறகு, மக்கள் மத்தியில் முதலில் போய்ச் சேரட்டும் என்பதற்காகத்தான் இந்தப் பணியைத் தொடங்கி, ஓரிரண்டு நிகழ்வுகளில் முடித்துவிடலாம் என்று முதலில் நினைத்தோம்!

எனக்கு மற்ற பணிகளின் சுமைகள் அதிகமாக இருந்தாலும், இது எனக்கு ‘இன்பச் சுமை’

ஆனால், அது போகின்ற போக்கைப் பார்த்தால், இதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம், தொடரும் என்கிற நிலை உள்ளது. எனக்கு வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் இதனைச் செய்யவேண்டும் என்று முடிவெடுத்தேன். இது எனக்கு ஒரு பெரிய இளைப்பாறுதல் (Relaxation). எனக்கு மற்ற பணிகளின் சுமைகள் அதிகமாக இருந்தாலும், இது எனக்கு ‘இன்பச் சுமை’யாகும்.

உரையாற்றுகின்ற எனக்கு இதில் சுமையும் இருக்கிறது, அதைக் கேட்கிற உங்களுக்கு எப்படியி ருந்தாலும், பேசுகின்ற எனக்கு சுவையாகவும் இருக்கிறது!

பெரியாரின் வாழ்நாள் மாணவன்
என்று சொல்வதில்தான் எனக்கு உண்மையான ஒரு மகிழ்ச்சி!

ஏனென்றால், பெரியாரின் வாழ்நாள் மாணவன் என்று சொல்வதில்தான் எனக்கு உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உண்மையும்கூட அது. அதை நான் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பை இந்த அவை எனக்கு வழங்கியிருக்கிறது.

அந்த அடிப்படையில்தான், தொடர்ந்து பல செய்திகளை சுவையாகக் கொடுக்கவிருக்கிறோம்.

ஆய்வுச் சொற்பொழிவாக இருந்தாலும், அந்த ஆய்வுச் சொற்பொழிவுகளில் சில பேருக்கு ஒரு கடினமான பரிசோதனையாக இருக்கும்.

தந்தை பெரியார் அவர்கள் மக்கள் மொழியில் பேசினார்; மக்களுக்காக சிந்தித்தார்கள்; மக்களுக்காக எழுதினார்கள்!

பேசுகின்றவர்களுக்கும் பரிசோதனையாக இருக்கும். கேட்கின்றவர்க ளுக்கும் அதைவிட பெரிய அளவிற்குப் பரிசோதனையாக இருக்கும். அதுபோல இல்லாமல், தந்தை பெரியார் அவர்கள் மக்கள் மொழியில் பேசினார்; மக்களுக்காக சிந்தித்தார்கள். மக்க ளுக்காக எழுதினார்கள். மக்களுக்காகப் பேசினார்கள்; மக்களுக்காகப் போராடினார், வென்று காட்டினார்!

ஆகவே, எல்லாமே மக்களுக்காகத்தான். அதுவும், மேட்டுக்குடி மக்கள் என்று சொல்லக்கூடிய உயர்வர்க்கத்தினருக்கு அல்ல.

ஒடுக்கப்பட்ட மக்கள், மிதிக்கப்பட்ட மக்கள், வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மக்கள் இவர்களுக்காகத்தான் பேசினார்.

அந்தந்த சந்தர்ப்பத்தில், என்னென்ன செய்ய வேண்டும் என்று பெரியாருடைய சிந்தனையின் கூர்மை, செயலாக்கத்தில் வந்தது.

பெரியாரின் சிந்தனையின் கூர்மை என்பது சமூகத்தின் சொத்து – வளர்ச்சியின் வரலாறு– முன்னேற்றத்திற்கான துடுப்பு, பாதை!

உலகில் கூர்மையோடு சிந்தித்தவர்கள் ஏராளமாக இருப்பார்கள் வரலாற்றில்! ஆனால், தந்தை பெரியாரைப் பொருத்தவரையில், அவருடைய சிந்தனையின் கூர்மை என்பது சமூகத்தின் சொத்து. வளர்ச்சியின் வரலாறு. முன்னேற்றத்திற்கான துடுப்பு, பாதை.

அப்படிப்பட்ட ஒரு பெரிய வாய்ப்பை உருவாக்கி யவர். அதோடு அவரது உண்மைகள் அவை. காலத்தை வென்றவை.

அவருடைய ஒவ்வொரு அனுபவமும், கடைந்தெ டுத்த வாழ்க்கை அனுபவம். அதில் திரண்ட வெண்ணை யைப் போல, அந்த வெண்ணையை நாம் நெய்யாக ஆக்கிச் சுவைப்பதைப்போல, நமக்கு இந்த வாய்ப்பு வருகிறது.

கருத்தில் ஊறிய, அனுபவ முத்துகள்!

அன்றைக்கு (1937 ஆம் ஆண்டு) அதாவது 89 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் அவர்கள் பேசிய கருத்து, இன்றைக்கும் அது பொருந்துகிறது. காலத்தை வென்ற, கருத்தில் ஊறிய, அனுபவ முத்துகள். அந்த முத்துக்களை கடலில் மூழ்கி எடுப்பதுபோலத்தான், ‘தமிழர் தலைவர்’ புத்தகத்தில் இருப்பதை எடுத்துச் சொன்னேன்.

இன்றைக்கு மக்கள் மத்தியில் இருக்கின்ற பிரச்சி னைகள் என்னவென்று உங்களுக்கெல்லாம் தெரியும். ஜனநாயகம் என்ற பெயரால், ஓர் அசல் கூத்து நடந்து கொண்டிருக்கின்றது.

‘குதிரை பேரம்’ என்றால் ‘ஆரிய பேரம்’ என்று  புது அர்த்தம்!

மனிதர்களுக்குள்ளே நடக்கின்ற பேரத்திற்கு, அப்பாவியான குதிரையைப் பலியாக்கி விட்டார்கள். ‘‘குதிரை பேரம், குதிரை பேரம்’’ என்று புது அர்த்தம் ஆக்கியிருக்கிறார்கள். ஆனால், அதில் ஒரு மகிழ்ச்சி என்னவென்றால், காளை மாடுதான் திராவிடம். குதிரை என்பது ஆரியர்கள் கொண்டு வந்தது. திராவிடக் காளை அப்படிப்பட்ட பேரத்திற்கு என்றும் ஆளாகாது!

எனவே, ‘குதிரை பேரம்’ என்றால், இது முழுக்க முழுக்க ‘ஆரிய பேரம்’ என்று அர்த்தம்.

ஆரிய பேதம் – ஆரிய பேரம். ஆகவே, அப்படிப்பட்ட ‘குதிரை பேரம்’ இப்பொழுது நடக்கிறது.

அந்தக் காலத்தில் புலவர்கள் மிகவும் மரியாதையாகப் பாடினார்கள். நம்முடைய தமிழ்ப் புலவர்களுக்கும், திராவிடத்திற்கும், ஆரி யத்திற்கும் இருக்கின்ற வேறுபாடு அது.

‘‘அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்!’’

‘‘அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்’’ என்றால், குளத்தில் தண்ணீர் இருக்கும் போது மீன்களை உண்பதற்காகப் பறவைகள் வந்து தங்கும். தண்ணீர் வற்றிப்போனதும் அந்த இடத்தை விட்டே பறந்து போய்விடும். அதேபோல, நம்மிடம் செல்வம் மற்றும் புகழ் இருக்கும் போது நம்மைச் சுற்றி இருப்பவர்கள், நமக்கு ஒரு துன்பம் அல்லது வறுமை வரும் போது நம்மை விட்டு ஓடிவிடுவார்கள். இவர்கள் சுயநல வாதிகள் ஆவர்.

இதற்குமேல் சொல்லவேண்டிய அவசியமில்லை. இது அறிவார்ந்த அரங்கம்.

சில அரசியல்வாதிகளுக்குப்
புதிய கட்சிகள் ‘வேடந்தாங்கல்’

இன்னும் சில அரசியல்வாதிகளுக்குப் புதிய கட்சி கள் ‘வேடந்தாங்கல்’ – அரசியல் வேடந்தாங்கல். இது சீசன்தான், நீண்ட காலத்திற்கு அங்கேயும் இருக்க மாட்டார்கள்.

பறவை, கூட்டுக்குள் இருப்பது இயற்கை – மகிழ்ச்சி! கூண்டுக்குள் இருப்பது செயற்கை – கொடுமை அடிமைத்தனம்!

பறவைக்கு உரிமையானது எது என்றால், பறப்ப தும், கூட்டுக்குள் போவதும்தான். இதில் இரண்டு செய்திகளை நன்றாகக் கவனிக்கவேண்டும். பறவை, கூட்டுக்குள் இருப்பது இயற்கை;– மகிழ்ச்சி; கூண்டுக்குள் இருப்பது செயற்கை – கொடுமை – அடிமைத்தனம். கூட்டிற்கும், கூண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது.

எனவே, அவர்கள் கூட்டுக்குள் இருக்கும் பறவைகளா? கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகளா? என்பதை கூவத்தூர் வரலாறு சொல்லும்.

இப்போது அரசியல்வாதிகளை ‘Resort’-டில் தங்க வைக்கிறார்கள். ‘Resorts’ என்றால் என்ன அர்த்தம் என்றால், திறந்தவெளி சிறைச்சாலை! அரசியல் திறந்தவெளி சிறைச்சாலைக்கெல்லாம் இப்போது ‘Resort’–டுகள் பயன்படுகின்றன.

இப்படி நவீன செய்திகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். மிகக் கடினமான விசயத்தை, கொஞ்சம் தேனைத்தடவிக் கொடுக்கவேண்டும் அல்லவா!

நீதிக்கட்சியைப் போன்று ஒரு யோக்கியமான கட்சி வேறு எதுவும் கிடையாது!

நீதிக்கட்சி, அதன்மீது அபாண்டமான அவதூறு களைச் சொல்லி, (நீதிக்கட்சி சிறப்பாக ஆண்டது. அவர்களது ஆட்சி போன்று சிறப்பான ஆட்சி வேறு இல்லை.) பார்ப்பன ஏடுகள், பார்ப்பன பிரச்சாரங்கள் அன்றும், இன்றும், என்றும் நம்மவருடைய ஆட்சியை சாயமடித்துக் காட்டு வார்கள். நம் ஆட்களின் மூளை ஏற்கெனவே காயப்பட்டுவிட்டது. எனவே, சாயமடித்த பார்வையும், காயம்பட்ட மூளையும் இரண்டும் சேர்ந்ததால், ஏமாந்து போயினர் மக்கள்.

நீதிக்கட்சியைப் போன்று ஒரு யோக்கியமான கட்சி வேறு எதுவும் கிடையாது. ஒழுக்கமானவர்கள். ஒவ்வொரு அமைச்சர்களும் பணக்காரர்கள்தான், அதிலொன்றும் சந்தேகமேயில்லை. ஏனென்றால், அன்றைய சூழ்நிலையில், அந்த வாய்ப்புகள் அவர்களுக்குத்தான் முதலில் இருந்தன.

யார் முன்னால் இருக்கிறார்களோ, யாருக்கு வாய்ப்பு இருந்ததோ அவர்களுக்குத்தான் கிடைத்தது. ஏனென்றால், மற்றவர்கள் கீழேயிருந்து எழுந்து உட்கார வேண்டும். அவர்களுக்கு எப்ப டியோ அந்த வாய்ப்புக் கிடைத்தாலும், அவர்கள் குறுகிய சிந்தனையாக தங்கள் ஜாதியினரை மட்டுமே நினைக்கவில்லை.

பணக்காரர்களாக இருந்தார்கள்,
ஆனால், ஏழைகளுக்காகப் பாடுபட்டார்கள்!

பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்க ளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அவர்கள் உழைத்தார்கள், பயன்பட்டார்கள். ‘நான் வசதியாக இருக்கிறேன் எனக்கு அது போதும்’ என்று அவர்கள் ஒதுங்கிக் கொள்ளவில்லை. பணக்காரர்களாக இருந்தார்கள், ஆனால், ஏழைகளுக்காகப் பாடுபட்டார்கள். படித்தவர்களாக இருந்தார்கள், படிக்காதவர்களுக்காகப் பாடுபட்டார்கள். இவை அத்தனையும் புரிந்து கொண்டு, சமூகத்திற்கு அவர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று தந்தை பெரியார் எடுத்துரைத்தார். பணக்காரரான தந்தை பெரியார், தன்னுடைய பணம், சொகுசு வாழ்க்கையை விட்டுவிட்டு, சொந்தப் பணத்தை, பத்திரிகையின் மூலமாகவும், இயக்கத்தின் மூலமாகவும் செலவு செய்தார். பிற்காலத்தில் மக்கள் அவருக்குக் கொடுத்தார்கள். ஆனால், முன்னாளில் அப்படி இல்லை.

அந்த நீதிக்கட்சியை, பொய் சொல்லி, பொய்ப் பிரச்சாரம் செய்து தோல்வியுறச் செய்தார்கள். எப்படித் தெரியுமா?

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *