ர.பிரகாசு
1944-ஆம் ஆண்டு, ஜூலை 8, 9 ஆகிய நாட் களில் நெல்லை மாவட்ட முதலாவது திராவிட இளைஞர் மாநாடு நடைபெற்றது. இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழ சண்முகபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த ‘டாக்டர் நாயர் பந்தலில்’ மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 8-ஆம் தேதி மாலை 4 மணிக்கு ரயில் நிலையம் வந்தடைந்த பெரியாரை, பாண்டு வாத்தியங்கள் முழங்க, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். மாலை 6 மணிக்கு மாநாட்டுப் பந்தலை அடைந்தவுடன், சென்னையைச் சேர்ந்த பி.ஜனார்த்தனன், கொடியேற்றி வைத்தார். பின்னர், பெரியார் மாநாட்டைத் திறந்துவைத்து ஒரு மணி நேரம் சொற்பொழிவாற்றினார்.
அதன்பிறகு, எஸ்.ஏ.வெற்றிவேல் வரவேற்புரை வாசித்தார். மாநாட்டுத் தலைவர் கே.ஏ.அன்பழகன் (பேராசிரியர்) சொற்பொழிவுடன், முதல் மாநாடு இரவு 10 மணிக்கு முடிவற்றது. மறுநாள் காலை 9 மணிக்கு மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. நாகம்மையாரின் சேவைகள் பற்றி மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரும், சர் ஏ.டி.பன்னீர்செல்வம் குறித்து மணியம்மையாரும் நீதிக்கட்சித் தலைவர்களான பனகல் அரசர், நாயர், சர் பிட்டி.தியாகராயரைப் பற்றி பொன்னம்பலனாரும் விரிவாகப் பேசினர். அதன்பிறகு, எதிர்கால வேலைத் திட்டங்கள் குறித்து, ஒரு மணி நேரம் உரையாற்றினார் பெரியார். பின்னர், பெரியார் அங்கிருந்து புறப்பட்டு திண்டுக்கல்லுக்குச் சென்றார்.
அதன்பிறகும் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. பேரறிஞர் அண்ணாவின் பணிகள் குறித்து, குடந்தை எஸ்.கே.சாமியும் பெரியாரின் பணிகள் குறித்து, பாவலர் பாலசுந்தரமும் அரைமணி நேரம் இளைஞர்கள் மத்தியில் விளக்கப் பேசினர். மதிய உணவுக்குப் பிறகு, மாலை 4 மணிக்கு மீண்டும் மாநாடு கூடியது, திராவிட நாட்டுப் படத்தைத் திறந்துவைத்து, ‘திராவிட நாடு’ லட்சியம் குறித்து நாவலர் நெடுஞ்செழியன் பேசினார். பின்னர், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக, மாநாட்டுத் தலைவர் பேராசிரியர் திராவிட மக்களின் கடமைகள் குறித்துப் பேசினார்.
பின்னர், அதே மாநாட்டுத் திடலில் இரவு 9.30 மணிக்கு பொதுக் கூட்டம் நடைபெற்றது. பரங்குறிச்சி முத்தையன் பெருமான் தலைமையில், நடைபெற்ற இப்போதய கூட்டத்தில் சுமார் 6 ஆயிரம் பேர் பங்கேற்றிருந்தனர். ஒலிபெருக்கி வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. திராவிட மக்களின் எதிர்கால நிலை குறித்து. ஜனார்த்தனன், பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், என்.கே.சாமி, அருப்புக்கோட்டை பழனிச்சாமி ஆகியோர் பேசினர். இறுதியாக, மாநாடு ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த டி.தங்கையா நன்றி கூற, நள்ளிரவு 1.30 மணிக்கு மாநாட்டு நிகழ்ச்சிகள் முடிவற்றன. இந்தப் பொதுக் கூட்டத்தில், நெல்லை ஜில்லா திராவிடர் கழகத்திற்கு நிர்வாக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அத்துடன், சென்னையில் பெரியாருக்கு சிலை நிறுவ, இந்தப் பொதுக்கூட்டத்தில் நிதி வசூலிக்கப் பட்டது. 55 ரூபாய் 8 அணா காசுகள் மக்கள் நிதி வழங்கினர். மேலும் 95 ரூபாய் தருவதாகவும் அக்கூட்டத்தில் சிலர் உறுதியளித்தனர். அதன்படி சென்னையில் பெரியாருக்கு சிலை அமைக்க, அன் றைய தினம் 150 ரூபாய் 8 அணா காசுகள் வசூலானது.
நன்றி: ‘முரசொலி’ பாசறை, 23.6.2026, சென்னை
