வரலாற்றில் சில உரைகள் நிலைத்து நிற்பவை. காலந்தோறும் பல்வேறு தருணங்களில் மீண்டும் மீண்டும் நினைவில் நிறுத்தி சிந்திக்க வேண்டியவை. அத்தகைய சிறப்புக்குரிய ஒன்று, ‘தந்தை பெரியாரின் மரண சாசனம்’ என்று அழைக்கப்படும் இறுதிப் பேருரை. 1973-ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று, அவர் இந்த உரையை சென்னை தியாகராயர் நகரில் தந்தை பெரியார் ஆற்றினார்.
ஒன்றரை மணி நேர உரையான இது, இரவு 10 மணி வரை நீண்டது. நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திடலை அடைய இரவு 12 மணி ஆகிவிட்டது என்கிறார், இந்நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கும் இன்றைய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
1973-ஆம் ஆண்டே ‘விடுதலை’யில் இந்த உரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் வெளியான நிலையில், பெரியார் ஆற்றிய முழு உரையும் இந்நூலில் எழுத்து வடிவம் பெற்றுள்ளது. இந்த உரை, பல வகையில் தனித்துவ மானது. பெரியார் எதிர் காலத்தில் மேற்கொள்ளவிருந்த உரிமைப் போராட்டத்திற்கு மக்களைத் தயார் செய்யும் வகையில், இவ்வுரை அமைந் திருந்தது. மிகவும் நேரடியாக மக்க ளுக்குப் புரியும் மொழியில், நகைச்சுவை உணர்வுடன் இந்த உரையை அவர் மேற்கொண்டார்.
உரையின் நடுவே தனக்கு வலி ஏற்படவே, வலியால் துடித்தபடி, “ம்… ஆ… அம்மா…. அம்மா…” என்று அரற்றுகிறார். பின்னர் “… ம்… ம்…” என்று தன்னையே ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மீண்டும் பேசத் தொடங்குகிறார்.
‘தமிழர்கள் தன்மான உணர்வுடன் இருக்க வேண்டும்’ என்பதைப் பல்வேறு உதாரணங்களுடன் அவர் எடுத்துரைக்கிறார். இங்குள்ள கடவுள், மதம் தொடங்கி அரசியலமைப்புச் சட்டம் வரை 97 சதவீத தமிழர்களை இழிமக்கள் என்றே நடத்துவதை அவர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்கிறார். ‘அதை மாற்ற வேண்டும்’ என்கிறார், ‘அந்த இழிநிலை ஒழிய, அறவழியில் போராட வேண்டும்’ என்கிறார்.
இந்த உரையில், அறிவியல் கருத்து களையும் குறிப்பாக, ‘டெஸ்ட் டியூப் பேபி’, ‘அமெரிக் கர்கள் மேற்கொள்ளும் வான் வெளி ஆராய்ச்சி’, ‘உலகெங்கும் அதிகரித்து வரும் மனிதர்களின் சராசரி ஆயுள்’, ‘தொலைப்பேசிக் கருவி’ உள்ளிட்டவை பற்றி எல்லாம் பேசுகிறார்.
பெரியாரின் இந்த உரையில் உள்ள சில பகுதிகள், பின்னாள்களில் நமது இன எதிரிகளால் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டதை முன்னுரையில் ஆசிரியர் அவர்கள் எடுத்துக்கூறி இருக்கிறார். மேலும் அந்த வழக்கில், நமக்கு சாதகமான தீர்ப்பைப் பெற எடுக்கப்பட்ட முயற்சிகளையும் இந்த உரையின் வரலாற்று முக்கியத்துவத்தையும் இந்த நூலின் முன்னுரை தெளிவுபடுத்துகிறது. “தோழர்களே, இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் மான உணர்ச்சி! நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம்; போகணும். மனுஷனுக்கு இருக்கிற உரிமை என்ன தெரியுமா? மனுஷனுக்கு இருக்கிற சக்தி, உரிமை” என்பதை, இந்த உரை முழுக்க அவர் வலியுறுத்துகிறார். உரை ஆற்றப்பட்டு, 53 ஆண்டுகளைக் கடந்திருந்தாலும் அதில் அவர் எட்ட நினைத்த லட்சியங்களை நாம் எட்டியதாகச் சொல்ல இயலவில்லை. இந்துத்துவம் கோலோச்சும் இக்கால கட்டத்தில், மீண்டும் ‘பெரியாரின் மரண சாசனம்’ என்று அழைக்கப்படும் இந்த இறுதிப் பேருரையை எடுத்து வாசித்துப் பரப்ப வேண்டிய தருணம் இது.
நன்றி: ‘முரசொலி’, 9.6.2026
