தொகையாய்த் தரவுகள்! மிகையாய் நகைச்சுவை! பகைக்குப் பங்கம்

‘‘அய்யாவின் வாழ்நாள் மாணவன் என்பதைவிட எனக்கு வேறு சிறப்போ – பெருமையோ கிடையாது’’ என்று அடக்கத்தோடும் – அறிவார்ந்த  ஆண்டு, அவிழ்ந்து, அடங்கிய தன்மையோடும், ‘எனக்கு சொந்தப் புத்தி தேவையில்லை  – பெரியார் தந்த புத்தியே போதுமானது’ என்று ஒரு நிரந்தரப் பிரகடனத்தை பொது வாழ்வில் பதிவு செய்துள்ள பெரியார் பெரும் படையின் – தளபதியாய் – தலைவராய் – ‘பெரியாரே பரவாயில்லை! இவரைத் தாங்க முடியவில்லையே’ என எதிரிகளை அலறடித்து களத்தில் பெரியார் வெற்றிக் கொடியைத்  தாங்கி, வினையாற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’ எனும் ஒரு புதிய கோணத்தில்  தேர்ந்தெடுத்த தலைப்புக்கான மூன்றாம் பொழிவினை நேற்று (22.6.2026)  வழக்கம்போல மாலை நேரத்தில் அன்னை மணியம்மையார் அரங்கில் ஆற்றத் தொடங்கினார்.

‘மூன்றாம் பொழிவு மிகை நகைச் சுவை உரை என்பதா? தொகையாக தரவுகளை கொட்டிய உரை என்பதா? பகையைப் பக்குவமாய் பங்கம் செய்த பாங்கை பாராட்டுவதா?’ என கேட்போரை வியக்கச் செய்து, விளக்கங்களை விளக்கொளியாய் பரவச் செய்து, தந்தை  பெரியார் சிந்தனைகளின் கூர்மையின் சிறப்பை எடுத்துரைத்தார்.

பொதுவாக நாட்டில் தேர்தல் நடைபெறுவதையும், தேர்தலுக்கு முன் நடைபெறும் நிகழ்வுகளையும், தேர்தலுக்குப் பின் அரசியல் கட்சி களின், அரசியல்வாதிகளின் நடை முறையும், அதனைத் தொடர்ந்து  வெற்றி பெற்ற கட்சியை நோக்கி ‘கட்சி மாறிகள்’ படையெடுத்துச் செல்வதையும்பற்றி  தந்தை பெரியார் 1937 வாக்கிலேயே எவ்வளவு பார்த்திருக்கிறார் என்றும், – அந்தச் சிந்தனையின் கூர்மை இன்று நடைபெற்ற  தேர்தலுக்குப் பிறகு மட்டுமல்ல, எப்போதும்  ‘அற்ற குளத்து பறவையாய்’  ஆகும்  அரசியல் வாதிகளோடு ஒப்பிடுங்கள் – எவ்வளவு காலப் பொருத்தமாய் அமைந்துள்ளது என்பது விளங்கும் என்று தனது கருத்தைத் தமிழர் தலைவர் பதிவிட்டார்.

தந்தை பெரியார் இந்தியாவில் அரசியல் என்பது ஆரிய – திராவிடப் போராட்டம் என்பார். அந்தச் சிந்தனைக் கூர்மையை உறுதி செய்யும்படி தேர்தலில் அது எவ்வகை  ஆயினும், ‘களம்’கடைசியில் பார்ப்பனர் அணி – பார்ப்பனர் அல்லாதார் அணி  என்றே நிற்பதைக் கணித்த,  தேர்தலில் நிற்காத பெரியாரின் சிந்தனைக் கூர்மை எவ்வளவு துல்லிய மானது– தொலைநோக்கானதும் என்பதறியலாம்.

தேர்தலுக்குப் பிறகு ஆள் பிடிப்பதும்,  கட்சி மாறலும் ‘குதிரை பேரம்’ என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. திராவிடர்களுக்குக் காளையும், ஆரியர்க்கு குதிரையும் என்பதே வரலாறு. ஆக, அரசியலிலே ஆரியர்களின் யோக்கியமில்லா, ஒழுக்கமில்லா அரசியலை ‘குதிரை பேரம்’ என்றுதான் அழைக்கிறார்கள். ‘காளை பேரம்’ என்று பெயரிடப்படவில்லை என்ற தும் கரவொலி கட்டடத்தை அதிரச் செய்தது.

தேர்தலுக்குப்பின் அரசியல் ‘கட்சி மாறி’கள் யோக்கியமற்றவாறு 1937இல் நடந்து கொண்டதையும், தற்போது அவ்வாறே நடப்பதற்கும் உள்ள நூறு விழுக்காடு பொருத்தத்தைப்பற்றி பெரியாரின் சிந்தனைக் கூர்மையை ‘கூண்டுப்பறவை – கூட்டுக்குள் பறவை’ என்று சொல்லாடலில் இந்தியா முழுவதும் முதல் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் கட்சி மாறும் கூத்துவரை எடுத்துரைத்துப் பலத்த கைதட்டலுக்கிடையே அடித்து விளாசினார்.

ஆளும் திறமையும் ஆட்சிச் சிறப்பும் மிக்க தமிழர்களை அசிங்கப்படுத்த சர்.ஏ. இராமசாமி முதலியார் அவர்களை ‘தாலியறுத்த இராமசாமி’ என்று பார்ப்பனர்கள் எழுதிய அநாகரிகத்தை நயம்பட எடுத்துக் கூறினார். பார்ப்பனர்கள், ‘பார்ப்பனரல்லாதாரின் அறிவு – ஆற்றல் – சிறப்பை என்றும் ஏற்க மாட்டார்கள்’ என்ற பெரியாரின் சிந்தனைத் தெறிப்புதான் எத்தனை கூர்மையானது!

‘‘நீதிக்கட்சியின் பணக்காரர்கள் – ஏழைகளுக்காகப் பாடுபட்டார்கள்; படிப்பாளிகள் – படிக்காத மக்களுக்காக பாடுபட்டார்கள். நீதிக்கட்சி சமூகநீதி காத்த யோக்கியமான கட்சி’’ என்று ஆசிரியர் நீதிக்கட்சியின் பெருமைகளைப் பட்டியலிட்டபோது  பார்வையாளர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை எனும் தலைப்பில் பேசலாம் என்றுதான் திட்டமிட்டு, பேசிய பின்னர், நேரிலும் தொலைபேசி மூலமும் பலர், மிக வியப்படைந்து  பாராட்டியதால்,   அய்யாவின் சிந்த னைகளின் கூர்மையைத் தொடர்ந்து பேசலாம்’’ என முடிவு செய்துள்ளேன் என்று தொடங்கியவர், ‘‘எனது  நான்காவது பொழிவு  ஜூலை ஆறாம் தேதி நடைபெறும் –  சந்திப்போம்’’ என்று   பொழிவை நிறைவாக்கினார்.

தொகுப்பு: . அன்பழகன்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *