தோஹா, ஜூலை 23- கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 12 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் நாட்டை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்கின. இதில், ஈரானில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் வளைகுடா நாடுகள், அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்தன. அந்நாடுகளில் அமெரிக்காவின் படைத்தளங்கள் அமைக்கப்பட்டன. இதனால், அந்த நாடுகளையும் ஈரான் தாக்கியது.
அதில், கத்தார் நாட்டின் ராஸ் லப்பான் பகுதியில் உள்ள முக்கிய இயற்கை எரிவாயு ஆலையில் ஏற்றுமதி முனையம் குண்டுவீச்சால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு எரிவாயு ஏற்றுமதி செய்யும் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், நிரந்தர போர் நிறுத்தத்திற்கான அமைதிப்பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதனால் பதற்றம் சற்றுத் தணிந்தது. இதனை தொடர்ந்து, கத்தார் அரசு தனது மூடிக்கிடந்த எரிவாயு ஏற்றுமதி முனையத்தை மீண்டும் இயக்கி, உற்பத்தியை தொடங்க திட்டமிட்டது.
இதற்காக, ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் அங்குள்ள பர்சான் எரிவாயு பகிர்மான ஆலையில் மறுசீரமைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டு, ஆலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இந்த கோர விபத்தில் ஆலையில் பணியாற்றி கொண் டிருந்த 12 இந்தியர்கள் உள்பட 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 66 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். மேலும், 18 தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியுடன் காணாமல் போன தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இங்கிலாந்துப் பிரதமர்
பதவியிலிருந்து விலகிய கீர் ஸ்டார்மர்
லண்டன், ஜூன் 23- இங்கிலாந்து பிரதமர் பதவியிலி ருந்து கீர் ஸ்டார்மர் பதவி விலகியுள்ளார். புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டு நடந்த இங்கிலாந்து பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றிபெற்றது. இதையடுத்து அந்நாட்டின் பிரதமராக கீர் ஸ்டார்மர் பொறுப்பேற்றார்.
இதனிடையே, இங்கிலாந்து பிரதமராக செயல்பட்டு வந்த கீர் ஸ்டார்மரின் செல்வாக்கு கட்சிக்குள் குறையத் தொடங்கியது. நாட்டின் பொருளாதாரத் தேக்க நிலை, பணவீக்கம், உதவித்தொகை ரத்து, சட்டம் – ஒழுங்கு பிரச்சினை உள்பட பல்வேறு விவகாரங்களில் கீர் ஸ்டார்மரின் செல்வாக்கு ஆளும் கட்சி எம்.பி.க்கள் மத்தியில் குறையத்தொடங்கியது. கடந்த மே மாதத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் தொழிலாளர் கட்சி படுதோல்வியடைந்தது.
அதேவேளை, தொழிலாளர் கட்சியில் ஸ்டார்மருக்கு மாற்றாக மான்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் பார்க்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த மேக் கர்பீல்ட் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் போட்டியிட்டு 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றார்.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் பதவியிலிருந்து கீர் ஸ்டார்மர் இன்று விலகியுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் தோல்வி, சொந்த கட்சி அமைச்சர்களின் எதிர்ப்பு உள்பட பல்வேறு காரணங்களால் இங்கிலாந்து பிரதமர் பதவியிலிருந்து கீர் ஸ்டார்மர் விலகியுள்ளார். இதையடுத்து, இங்கிலாந்தின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
