சென்னை, ஜூன் 22- ரயிலில் பயணச் சீட்டு இல்லாமல் ‘ஓசி’ பயணம் செய்பவர்களுக்கு பயணக் கட்டணத்துடன் சேர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் பயணச் சீட்டு இல்லாமல் ரயிலில் பயணம் செய்தால் ரயில்வே சட்டம் 1989இன்படி ரூ.250 அபராதம் விதிக்கப்படுகிறது.
அபராதம் உயர்வு
இந்த நிலையில், ரயில்களில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்தால் விதிக்கப்படும் அபராதத் தொகையை ரூ.250இல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை 20.6.2026 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையின்படி, பயணிகள் அனுமதிக்கப்பட்ட பயணச்சீட்டு மற்றும் பாஸ் ஆகியவற்றை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். எந்தப் பெட்டிக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்து பயணம் செய்கிறோமோ அந்தப் பெட்டியில் மட்டுமே பயணிக்க வேண்டும். பயணச்சீட்டு இல்லாமலும், முறையற்ற பயணத்தையும் தவிர்க்க வேண்டும்.ரயில்வே அதிகாரிகள் கேட்கும்போது பயணச்சீட்டு, பாஸ் ஆகியவற்றை கண்டிப்பாகக் காண்பிக்க வேண்டும். மேலும், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வோருக்கு ரயில்வே சட்டத்தின்படி ரூ.250 அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது. இது ரூ.500 ஆக உயர்த்துப்பட்டு இனி வசூலிக்கப்படும்.
இதுகுறித்து, பயணச்சீட்டு பரிசோதகர்கள் கூறியபோது, ‘பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்பவர்கள் பயணச்சீட்டு தொகையுடன் இந்த அபராதத் தொகையை செலுத்த வேண்டும். உதாரணமாக பயணச்சீட்டு தொகை ரூ.800 என்றால் அதனுடன் அபராத தொகை ரூ.500 சேர்த்து ரூ.1,300 செலுத்த வேண்டும். இதேபோல, நடைமேடை பயணச்சீட்டு எடுக்காதவர்களுக்கும் மாற்றி அமைக்கப்பட்ட இந்த அபராதத் தொகை பொருந்தும்’ என்றார்கள்.
உடனடி அபராதம்
இதேபோல, பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணித்தல், ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் புகைப்பிடித்தல், மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் பயணித்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு தற்போது ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப் பதிவு செய்து, அதற்கான அபராதத்தை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றத்தில் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அதற்கு மாற்றாக குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படையினரிடமே அபராதம் செலுத்தும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதற்கான அபராத தொகைகள் அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் கூறியதாவது:-
பெண்கள் பெட்டியில் ஆண்கள் பயணித்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.2,500 ஆகவும், மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் பயணித்தால் ரூ.500-லிருந்து ரூ.2 ஆயிரமாகவும், ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் புகைபிடித்தால் ரூ.100-லிருந்து ரூ.2 ஆயிரம் ஆகவும், ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் அனுமதி இல்லாத பொருட்கள் கொண்டு சென்றால் ரூ.2 ஆயிரம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பயணிகளை கட்டாயபடுத்தி பொருட்கள் வாங்க வைத்தாலோ, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பயணிக்க அழைத்தாலோ ரூ.2 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். இந்த அபராதத் தொகைகளை உடனடியாக கட்டவில்லை என்றால், நீதிமன்றத்தில் இரு மடங்காக அபராதத் தொகையை கட்ட வேண்டும்.
அவ்வாறு கட்டவில்லை என்றால் சிறை தண்டனை வழங்க வாய்ப்பு உள்ளது. எனவே, பயணிகள் ரயில்வே சட்ட விதிகளுக்கு உட்பட்டு தங்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
