சென்னை, ஜூன் 21- கடந்த 2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், கோவை மாநகராட்சியில் விதிகளை மீறி ‘புறவாசல்’ வழியாக நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களை பணிநீக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த முறை கேட்டிற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் ஆணை யிட்டுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, கோவை மாநகராட்சியில் 69 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளி யானது.
இதில் 654 பேர் விண்ணப் பித்த நிலையில், 440 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, இறுதி யாக 54 பேர் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர்.
இந்த நியமனங்களை ரத்து செய்யக் கோரி, கருணை அடிப்படை யில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வரும் ஈஸ்வரி உள்ளிட்ட 11 பேர் கடந்த 2021இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, “மனுதாரர்கள் தேர்வு நடைமுறையில் பங்கேற்காத தால், இந்த நியமனத்தை எதிர்க்க அவர்களுக்கு உரிமை இல்லை” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து ஈஸ்வரி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவர்களின் மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
“எங்களுக்கு உரிய தகுதி இருந்தும், இந்த வேலைவாய்ப்பு குறித்து முறையாக விளம்பரம் செய்யப்படாததால் எங்களால் தேர்வில் கலந்துகொள்ள முடி யவில்லை. அப்போதைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் செல்வாக்கு காரணமாக, விதிகள் மற்றும் இடஒதுக்கீட்டு நடை முறைகளைப் பின்பற்றாமல் ஒரே நாளில் 54 பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த நியமனங்களை ரத்து செய்ய வேண்டும்.”
நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள்
எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் என்.செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட இதர முறையான தேர்வு நடைமுறைகளைப் பின்பற்றியோ இந்த 54 பணி நியமனங்களும் செய்யப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
தகுதியான வழிமுறைகளைப் பின்பற்றாமல், புறவாசல் வழியாக இந்த நியமனங் கள் நடந்துள்ளதால், கோவை மாநகராட்சியின் அந்த 54 இள நிலை உதவியாளர்களையும் உடனடியாக பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்படுகிறது.
இந்த முறைகேடான நியமனங் களுக்கு உடந்தையாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தற்போது காலியாகும் பணியிடங்களுக்கு, தகுதியான நபர்களை மட்டுமே சட்டப்பூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றி தேர்வு செய்ய வேண்டும்.
