சட்டமன்ற நேரலை நிறுத்தம் ‘ஜனநாயகத்தை இருட்டில் தள்ளுவதற்குச் சமம்’-உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

3 Min Read

சென்னை, ஜூன் 21 சட்டமன்ற நேரலை குறித்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகருக்கு நேற்று (20.06.2026) கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பான அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது நடைபெற்று வரும் ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படுவதில்லை என்பதைத் தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

ஆளுநர் உரை மீதான விவாதம்

“கொடுத்த வாக்கைக் காப் பாற்றியுள்ளார் முதல்-அமைச்சர். இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்பு செய்யப்பட்ட சட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடங்கியிருக்கிறது. இனி சட்டப்பேரவை நேரலை தொடரும். இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான நிர்வாகத்திற்கு இன்றைய நிகழ்வு மிகப்பெரிய எடுத்துக்காட்டு” என அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டு சொன்ன அன்றே நேரலை துண்டிக்கப்பட்டிருக்கிறது.

நேற்றைய தினம் (19.06.2026) மேகதாது அணை கட்டுவதை கண்டித்து முதல்-அமைச்சர் கொண்டு வந்த அரசினர் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேரலை செய்யப்பட்டன. அடுத்து, உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆளுநர் உரை மீதான விவாதங்கள் தொடங்கிய நிலையில் அவை இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படவில்லை.

பேச்சுரிமையை நசுக்கும் செயல்

இது இன்றைய ஆளுங்கட்சி கொடுத்த வாக்குறுதிக்கு மாறானது ஆகும்; மக்கள் பிரதிநிதி களின் குரலை மறைப்பது ஆகும்; சட்டமன்ற மாண்பைக் குலைப்ப தாகும்.

நேரலை நிறுத்தப்பட்டது மிகப்பெரிய தவறு என்றால், அதைவிடப் பெரிய தவறு பின்னர் இழைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின் விவாதங்கள் முற்றிலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, ஆளுங்கட்சியி னருக்கு வேண்டிய விவாத காட்சிப்பதிவுகள் மட்டும் எடிட் (Edit) செய்யப்பட்டு மாலையில் வெளியிடப்பட்டுள்ளன. பேச் சுரிமையை, அதிலும் குறிப்பாகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவைக்குள் இருக்கும் பேச் சுரிமையை நசுக்கும் செயலாகும். இது நல்லதொரு ஆக்கப்பூர்வமான சட்டமன்ற ஜனநாயகத்திற்கு உகந்தது இல்லை.

வெளிப்படைத்தன்மை

‘மாற்றம்’ என்ற சொல்லை மய்யமாக வைத்துத் தேர்தலை சந்தித்தவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் குரலை நசுக்குவதுதான் அவர்கள் செய்ய நினைக்கும் மாற்றமா? மக்கள் பிரதிநிதிகளின் பேச்சை மறைப்பது மக்களையே அவ மானப்படுத்துவது ஆகும்.

இந்த அரசு வெளிப்படைத் தன்மை உடைய அரசு என்ற பொருள்பட முதல்-அமைச்சர், பலமுறை பேசிய நிலையில், இப்போது அதற்கு முரணாக அவை விவாதங்களை, குறிப்பாக எதிர்க்கட்சியினரின் விவாதங்களை, வாக்களித்த மக்கள் தெரிந்துகொள்ள விடாமல் செய்வது ஜனநாயகத்தையே இருட்டில் தள்ளுவதற்கு சமம்.

பாசிச நடவடிக்கை

மேலும், ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப் போற்றப்படும் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்க மறுப்பதும், அரைகுறைச் செய்திகளை அளிப்பதும், “நாங்கள் தருவதை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்” என்று சொல்வதும் பாசிச நடவடிக்கைகள் ஆகும்.

ஒரே நேரத்தில் சட்டமன்றம் மக்கள் பிரதிநிதிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தையும் அவ மானப்படுத்தும் செயல் செய்யப் பட்டுள்ளது. உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறேன். வரும்  22.06.2026 அன்று எதிர்க்கட்சித் தலைவரான நானும், பிற தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் உரையாற்ற உள்ளதால், தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை நேரலை செய்வதற்குத் தங்களுக்கு உள்ள பேரவை தலைவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் அளித்த வாக்கு

இல்லாவிட்டால் சட்டமன்றம் கூடுவதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும்; மக்கள் அளித்த வாக்குக்கே மரியாதை இல்லாமல் போய்விடும். சட்டமன்றத்தையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும் இதுபோன்ற செயல்களை இனியும் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *