பிலாஸ்பூர், ஜூன் 21 சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக் கழகம் ஒன்று, தனது அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களில் ‘இந்தியா’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘பாரத்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் புகழ்பெற்ற குரு காசிதாஸ் மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகம் இனிவரும் காலங்களில் மாணவர்களுக்கு வழங்கக் கூடிய மதிப்பெண் பட்டியல்கள், பட்டச் சான்றிதழ்கள் மற்றும் இதர அதிகாரப் பூர்வ தகவல் தொடர்புகள் அனைத்திலும் ‘இந்தியா’ (India) என்ற சொல்லுக்குப் பதிலாக ‘பாரத்’ (Bharat) என்ற சொல்லைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அலோக்குமார் சக்ரவால் கூறியதாவது:
“பல்கலைக்கழகத்தின் ஆவணங்களில் ‘பாரத்’ என்ற பெயரைப் பயன்படுத்துவது தொடர்பான தீர்மானம், பல்கலைக்கழக நிலைக்குழுவால் (Standing Committee) சுமார் 6 மாதங்களுக்கு முன்பே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு விட்டது” என்று தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ்.இன் ஆசைப்படி மத்திய பல்கலைக்கழகம் ஒன்றில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம், கல்வி வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
ம.பி., உ.பி., உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களிலும் இத்தகைய மாற்றங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
