மக்களை மடையர்களாக்கும் புதிய ஆபத்துகள்! கேள்விக்குறியாகும் செய்திகளின் உண்மைத் தன்மை! ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கை தரும் தகவல்கள்!
தந்தை பெரியார் இயக்கத்தின் முதற்பணி அதுதானே!
தந்தை பெரியார் இயக்கத்தின் முதற்பணி அதுதானே!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை
அறிக்கை
மக்களை மடையர்களாக்கும் புதிய ஆபத்துகள்! கேள்விக்குறியாகும் செய்திகளின் உண்மைத் தன்மை! ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கை தரும் தகவல்கள்! திராவிடர் கழகமே முன்னின்று பகுத்தறி வூட்டும்! தந்தை பெரியார் இயக்கத்தின் முதற்பணி அதுதானே! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
உலகப் புகழ்பெற்ற ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் டிஜிட்டல் செய்தி அறிக்கை (Digital News Report 2025) பல முக்கிய உண்மைகளை எடுத்துக்காட்டுகிறது. உலகம் முழுவதும் மக்கள், செய்திகளைத் தெரிந்துகொள்ளும் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் டிஜிட்டல் செய்தி அறிக்கை கூறுகிறது. உலகம் முழுவதும் தொலைக்காட்சி, நாளிதழ்கள், செய்தி இணையதளங்கள் போன்ற பாரம்பரிய ஊடகங்களின் செல்வாக்கு குறைந்து கொண்டிருக்கிறது. காரணம், இவற்றைப் பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைகிறது.
இந்தியா மட்டுமல்ல…
உலகெங்கும்!
உலகெங்கும்!
அதே நேரத்தில் சமூக ஊடகங்கள், காணொலித் தளங்கள், பாட்காஸ்ட் எனப்படும் ஒலித் தளங்கள், இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுக் (AI) கருவிகள் முக்கியச் செய்தி ஆதாரங்களாக மாறி வருகின்றன. யூடியூபர்கள், பாட்காஸ்டர்கள், டிக்டாக் உள்ளடக்கங்களை உருவாக்குவோர் போன்றோர் வழங்கும் செய்திகளே பொது விவாதங்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இந்தியாவில் ‘டிக் டாக்’ தடை செய்யப்பட்டுள்ளதால், அந்த இடத்தை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ் ஆகியவை முன்னணியில் இருக்கின்றன. குறிப்பாக இளைஞர்கள், முறையான பத்திரிகையாளர்களையும், ஊடகவியலாளர்களையும் விட இத்தகைய நபர்களின் கருத்துகளை அதிகம் பின்பற்றுகின்றனர்.
உலகம் முழுவதும் ஃபேஸ்புக்கிலிருந்து 36% பேரும், யூடியூப்பிலிருந்து 30% பேரும் செய்திகளைத் தெரிந்து கொள்கின்றனராம். அடுத்தடுத்த இடத்தில் இன்ஸ்டாகிராம் (19%), வாட்ஸ் அப் (19%), டிக்டாக் (16%), டுவிட்டர் (12%) போன்ற தளங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அந்த ஆய்வு கூறுகிறது. இவை அனைத்தும் மொத்தம் நான்கே (கூகிள், மார்க் ஸக்கர்பெர்க்கின் ‘மெட்டா’, எலான் மஸ்க்கின் ‘எக்ஸ்’, ஸாங்க் யிமிங் என்ற சீனரது ‘பைட் டான்ஸ்’) நிறுவனங்கள் நடத்துபவை என்பதை மனதில் கொள்ள வேண்டும். வழக்கமான செய்தி ஊடகங்களும் கூட, வெகு மக்களைச் சென்றடைவதற்காக இந்தச் சமூக ஊடகங்களையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இந்த நிறுவனங்கள் எதை மக்களுக்குக் காட்ட வேண்டும் என்று கருதுகின்றனவோ, அவற்றுக்கு முக்கியத்துவம் தரலாம்; எவற்றை மறைக்க வேண்டும் என்று கருதுகின்றனவோ, அவற்றை மறைக்கலாம், அல்லது குறைவாகக் காட்டலாம். சமூகத் தரநிலைகள் (Community Standards) என்ற பெயரில் இந்த நிறு வனங்களின் அதிகாரிகள் எடுக்கும் முடிவால், அரசுக்கும், அதிகாரத்துக்கும் எதிரான கருத்துகள் வருவதைத் தடுக்க முடியும். அரசுகள் நெருக்கடி கொடுத்தால் அந்தந்த நாடுகளில் அதற்கேற்ப தர நிலைகள் என்னும் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்கள் என்று பரவலாகக் குற்றச்சாட்டு உண்டு.
சில நிறுவனங்களை மட்டும் சார்ந்திருப்பது ஆபத்து!
தொலைக்காட்சிகளில் செய்திகளைப் பார்க்கும் வழக்கம் கூட குறைந்துவருகிறது. ஒவ்வொருவர் கையிலும் செல்பேசி இருக்கிறது. அது பேசுவதற்கான கருவியாக மட்டுமல்லாமல், திறன் பேசியாக (Smart Phone) மாற்றம் பெற்ற பின், அதிலும் விரைந்து இணையம் கிடைக்கும் வகையிலான 5ஜி போன்ற வசதிகள் வந்தபின்னர், 2020 முதல் வீடியோ வழி செய்தி பார்ப்போர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது என்றும், இந்தியா, தாய்லாந்து, கென்யா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பலர் செய்திகளைப் படிப்பதை விட பார்ப்பதையே விரும்புகின்றனர் என்றும் அந்த ஆய்வுக்காக மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. தொலைக்காட்சி நிறுவனங்கள் கூட, இணைய நேரலை, தனித் தனிக் காணொலிகள் என தங்கள் ஊடகத் தயாரிப்புகளையே மக்கள் அதிகம் பார்ப்பது யூடியூப் வழியாகத் தான் என்கின்றனர். இந்தச் சார்புத் தன்மை மிகவும் ஆபத்தானது என்கின்றனர் கருத்துச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுப்போர்.
முன்பு குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே ஊட கங்களை நடத்தும்போதும், அரசுகளின் கட்டுப்பாடுகள் அதிகமாக அந்த நிறுவனங்களின் மீது இருக்கும். அதனால் பல செய்திகள் வெளிவருவது அரசுகளால் தடுக்கப்பட்டது; புதிய ஊடகங்களின் வரவு, எல்லா மட்டத்திலிருந்தும் செய்திகள் வருவதற்கான கதவைத் திறந்துவிட்டது. ஆனால், அதன் பாதகங்கள் வேறு வடிவில் முன் நிற்கின்றன.
உண்மைத் தன்மை குறித்து
58% பேர் கவலை!
செய்திகள் உண்மைத் தன்மை கேள்விக்கு உள்ளாகி யுள்ளது. இது குறித்து, ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிடுகையில், “இணையத்தில் எது உண்மை, எது பொய் என்பதைத் தீர்மானிப்பது கடினம் என 58% பேர் கவலை தெரிவிக்கின்றனர் என்று குறிப்பிடுகிறது. அதற்கான காரணம், “இன்ஃப்ளூயன்சர்களும், அரசியல்வாதிகளும் தவறான தகவல்களைப் பரப்புவதற்கு இத்தகைய சமூக ஊடகங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர்” என்று உலகளவில் இதுதான் நிலைமை என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. இப்படி பரப்பப்படும் செய்தி கள் உண்மையானவையாகப் பெரும்பாலும் இருப்பதில்லை.
அனைத்தும் பொய் என்று சொல்ல முடியாது. ஆனால், அவை முழு உண்மையானவை அல்ல! அரை உண்மைகள்! அவை முழுப் பொய்களை விட பல நேரங்களில் ஆபத்தானவை.
பொய்களில் மூன்று வகை!
நமக்குக் கிடைக்கும் தகவல்களில் உண்மை அல்லாத தகவல்களை மூன்றாகப் பிரிக்கிறார்கள்.
- Misinformation – தவறான தகவல்; அறியாமல் பொய்யான தகவல்களைப் பரப்புவது
- Disinformation – திரிபுபடுத்தப்பட்ட தகவல்; ஏமாற்றும் நோக்கத்துடன் பொய்யான தகவல்களை வேண்டுமென்றே உருவாக்கிப் பரப்புவது
- Malinformation – தீய தகவல்; உண்மையான தகவல்களை அப்படியேவோ, கூட்டியோ, குறைத்தோ தீங்கு விளைவிக்கும் நோக்கத்தோடு பயன்படுத்துவது.
இவை அனைத்தையும் இந்தியாவில் வெகு இயல்பாக ஜாதி, மதவாத சக்திகளும், அதையொட்டிய அரசியல் இயக்கங்களும் பயன்படுத்துகின்றன.
இவை போக, ட்ரோல் தொழிற்சாலைகளே (Troll factory) பா.ஜ.க.வால் இயக்கப்படுவதைப் பல புத்தகங்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றன. இவை தேர்தல்களுக்கு எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஆதாரப் பூர்வமாக விளக்கியிருக்கின்றன அந்தப் புத்தகங்கள்! ஆனால், ‘வல்லவனுக்கு வல்ல வன் வையகத்தில் உண்டு’ என்பது போல, அதைத் தாண்டிய கருத்துருவாக்கங்கள் அவர்களையே பதம்பார்த்துவிட்டன என்பதையும் தேர்தல் முடிவுகள் நமக்குக் காட்டுகின்றன.
செய்தி நிறுவனங்களின் மீதான உலகளாவிய நம்பிக்கை 40%
எனவே, வரக் கூடிய செய்திகள் உண்மையானவையா, பொய்யானவையா, திரிக்கப்பட்டவையா என்பதை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும். சமூக ஊடகங்களில் செய்தி நிறுவனங்களின் பெயர் போட்டே, அவர்களின் இலச்சினையைப் பொய்யாகப் பயன்படுத்தியும் கூட தகவல்கள் பரப்பப்படுகின்றன. செய்தி நிறுவனங்களின் மீதான உலகளாவிய நம்பிக்கை 40% ஆக நிலைத்திருக்கிறது என்று ராய்ட்டர்ஸ் நிறுவன ஆய்வு கூறுகிறது. ஒரு தகவல் உண்மையா என்பதை உறுதிப்படுத்த மக்கள் இன்னும் நம்பகமான செய்தி நிறுவனங்களையும் அரசின் அதிகாரப்பூர்வ ஆதாரங்களையும் நாடுகின்றனர். ஆனால், இந்த எண்ணிக்கை இளைஞர்கள் மத்தியில் மிகவும் குறைவு. காரணம் அவர்களுக்குச் செய்தித் தாள்களைப் படித்த பழக்கம் இல்லை. தொலைக்காட்சிகள் கூட அவர்களுக்குப் பொழுதுபோக்கும் சாதனம் தான்! திரைப்படம், பாடல், விளையாட்டுகள், கேளிக்கைகள் இவற்றுக்காக மட்டுமே தொலைக்காட்சிகளைப் பார்க்கப் பழக்கப்பட்டவர்கள். அதனால், அவர்கள் கையில் உள்ள செல்பேசிகளில், கேளிக்கைகளுக்கிடையே வரும் ஓரிரு தகவல்களும், பரபரப்புக்கென உருவாக்கப்படும் அல்லது திரிக்கப்படும் செய்திகளும் அவர்களைக் கவர்கின்றன.
அந்தச் செய்திகளைச் சொல்வோர் யார்? அதன் உண்மைத் தன்மை என்ன? ஆதாரம் என்ன? செய்திகளைச் சொல்வோருக்கு இருக்கும் பொறுப்பு (Responsibility) என்ன? என்ற எந்த கேள்வியும் அவர்களுக்கு இல்லை. இதில் இளைஞர்களை மட்டும் சொல்ல முடியாது. செல்பேசிகளில் இத்தகைய செயலிகளைப் பயன்படுத்தும் எல்லோருக்கும் இதே நிலைமை தான்! அதனால் தான் பொய்ச் செய்திகள் மிக வேகமாகப் பரவி விடுகின்றன. ஒவ்வொரு செய்தி நிறுவனமும், உண்மை சோதிக்கும் பிரிவை (Fact Check Unit) வைத்திருக்க வேண்டிய அளவுக்கு போலிச் செய்திகள், திரிப்புகள், புரட்டுகளின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளன. உண்மை அறிவதற்கான பல வாய்ப்புகள் எளிய தேடலின் மூலமே கூட சாத்தியமாகி விடும். அதற்குப் பெரிய தொழில்நுட்ப அறிவு தேவையில்லை என்கிறார்கள். கூகிள் போன்ற ஏதோ ஒரு தேடு பொறி (Search Engine) போதுமானது. ஆனால், சமூக ஊடகச் செய்திகளை நம்பிவிடுவோரில் 1% அளவுக்குக் கூட உண்மை சோதிக்கும் பிரிவுச் செய்திகளைப் படிப்பதோ, பார்ப்பதோ, உண்மை அறிய வேண்டும் என்று தேடுவதோ இல்லை. பல ஆண்டுகளாக உலா வந்துகொண்டிருக்கும் பொய்ச் செய்திகளைத் தோழர்கள் அவ்வப்போது நமக்குப் படித்து, அதன் ஆபத்துகளை எடுத்துக் காட்டியதுண்டு.
செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் செய்திகள்!
இது தவிர, புதிய செயற்கை நுண்ணறிவுச் செயலி களின் வரவும் செய்திகளின் மீது தாக்கம் செலுத்துகிறது. 7% பேர் ஏற்கெனவே செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் மூலம் செய்திகளைப் பெறுகின்றனர். 25 வயதுக்குட்பட்டவர்களில் இது 15% ஆக உள்ளது. செய்திகளைச் சுருக்குதல், மொழிபெயர்த்தல், தொடர்புடைய செய்திகளை பரிந்துரைத்தல், செய்தி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தல் ஆகிய வற்றுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தாலும், செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் செய்திகளைப் பற்றி மக்கள் இன்னும் சந்தேகத்துடன் உள்ளனர். ஆனால், இந்நிலை நீடிக்காது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இது அதிகப்படுவதற்கான வாய்ப்புகளே உள்ளன.
வெறும் 18% பேர் மட்டுமே பணம் செலுத்திப் படிக்கின்றனர்!
செய்தி ஊடகங்களின் சரிவுக்குப் பெரும்பாலான மக்கள் இலவச செய்திகளையே பயன்படுத்துவதும் காரணமாகிறது. இந்தியாவிலும் பல நிறுவனங்கள் சந்தா கேட்கின்றன என்றாலும், அவற்றைச் செலுத்திப் படிப்போர் மிக மிகக் குறைவே! வளமான நாடுகளில் கூட வெறும் 18% பேர் மட்டுமே இணையச் செய்திகளுக்காகப் பணம் செலுத்துகின்றனர். இதனால், அச் செய்தி நிறுவனங்களும் முறையான ஊடகவியலாளர்களுக்கு மதிப்பூதியமோ, சம்பளமோ செலுத்தி செய்தி பெறுவதில் தடங்கல் ஏற்படுகிறது.
உலகளாவிய செய்திச் சூழல் இப்போது ஒரு பெரிய மாற்றக் கட்டத்தில் இருப்பதை உணர முடிகிறது. பாரம்பரிய பத்திரிகை, ஊடகங்களின் செல்வாக்கு குறைவதும், சமூக ஊடகங்கள் சார்ந்தவர்கள் தகவல் பரப்பின் மய்யமாக மாறி வருவதும், தவறான தகவல்கள், அரசியல் தலையீடுகள், துருவமயமாக்குதல் (Polarisation) மற்றும் உண்மையை அடையாளம் காணும் சவால்கள் போன்றவை அதிகரித்து வரு கின்றன. இதனை எதிர்கொள்ள இளைஞர்களையும், மாணவர்களையும் பழக்குவதும், அறிவூட்டுவதும், நெறிப்படுத்துவதும் அவசியம். பெற்றோர், கல்வி நிலையங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். அவர்களே, இத்தகைய சமூக ஊடகங்களை நம்பிக் கொண்டிருப்பது, சமூகச் சிந்தனையாளர்களுக்கு நம்பிக்கையின்மையே ஏற்படுத்துகிறது. நோய் நாடி, நோயின் முதலும் நாடப்பட்டுவிட்டது, அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்பட வேண்டும். உண்மைக்கான சவாலை நாம் சந்திக்க வேண்டும்.
சேலம் பொதுக்குழுவில்
அதற்கான திட்டம் அறிவிக்கப்படும்!
அதற்கான திட்டம் அறிவிக்கப்படும்!
யாரிடமோ எதிர்பார்ப்பதை விட, அதற்கான செயல்திட்டத்தை நாமே தொடங்குவோம். திராவிடர் கழகமே தொடங்கும்! வரவிருக்கும் சேலம் பொதுக்குழுவில் அதற்கான திட்டம் அறிவிக்கப்படும். பகுத்தறிவூட்டும் பணி என்பது அனைத்து வகை மூடநம்பிக்கைகளில் இருந்தும் மக்களை மீட்பது தானே! கடவுள், மதம், சாஸ்திரம், சடங்குகள் என்பவையும் இப்படி யாராலோ சொல்லப்பட்டு, எந்தக் கேள்வியும் இல்லாமல் நம்பப்பட்டவைதானே! இன்று அந்த வரிசையில் சமூக ஊடகங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பகுத்தறிவூட்டுவதே
பெரியார் இயக்கத்தின் முதற்பணி!
பெரியார் இயக்கத்தின் முதற்பணி!
அவற்றை முறியடித்து, “யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே! உன் சாஸ்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வௌக்கமாத்தைவிட உன் அறிவு பெரியது. அதை சிந்தி” என்று சொன்ன தந்தை பெரியாரின் இயக்கத்தின் முதற்பணி அதுதானே!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
20.6.2026
