சிங்கப்பெருமாள்கோவில், ஜூன் 18– செங்கல்பட்டு மாவட்ட கழக சார்பில், முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் ஆண்டு பிறந்த நாள் – திராவிடர் எழுச்சி நாள் – கழகப் பரப்புரைக் கூட்டம் 7.6.2026 அன்று மாலை 6 மணிக்கு சிங்கப்பெருமாள் கோவில் – தேசிய நெடுஞ்சாலை புதிய நடை மேம்பாலம் அருகில் எழுச்சியோடு நடைபெற்றது.
சிறப்பாக நடைபெற்ற இக்கூட்டத் திற்கு செங்கல்பட்டு மாவட்ட கழகத் தலைவர் அ.செம்பியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ம.நரசிம்மன் வரவேற்புரையாற்றினார். மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் மு.அருண்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
மு.கலைவாணன் படத்திறப்பு
இப்பொதுக்கூட்டத்திற்கு, கடந்த 22.5.2026 அன்று மறைவுற்ற பொம்ம லாட்டக் கலைஞர், பகுத்தறிவு கலைத் துறை மாநில தலைவர் கலைமாமணி மு.கலைவாணனுக்கு வீரவணக்கம் செலுத்தி, அவரது பெயரில் நினைவு மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் மாலை சூட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த மு.கலைவாணன் படத்தினை கழகப் பொதுக்குழு உறுப் பினர் அ.பா.கருணாகரன் திறந்து வைத் தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.ராஜ்குமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் மு.பிச்சைமுத்து, மறைமலைநகர் திருவள்ளுவர் மன்ற மேனாள் செயலாளர் மா.சமத்துவமணி, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சிங்கை. கோ.கணேஷ், கவிஞர் சிவசக்தி வேல் பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். மாநில கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன் னீர்செல்வம் தொடக்க உரையாற்றினர்.
கலைஞரின்
சமூக நீதித் திட்டங்கள்
நிறைவாக கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில், கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கையில் விடுத்த வேண்டுகோளின்படி திராவிடர் கழக சார்பில் 4 மாநிலங்களில் 103 இடங்களில் நடத்தப்படுகின்ற கலைஞர் பிறந்த நாள் நிகழ்வுகளின் நோக்கம், அவசியம் பற்றி விளக்கினார். முத்தமிழறிஞர் கலைஞர், “பாராட்டிப் போற்றிவந்த பழைமை உலகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்” எனத் தொடங்கி எழுதிய கவிதையின் முழு விளக்கமாகத் தந்தை பெரியாரின் சமுதாயப் பணி அனைத்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதை விரிவாகக் கூறினார்.
கலைமாமணி மு.கலைவாணனின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் நேர்த்தியை புலப்படுத்தி – அவரின் தந்தையார் ந.மா.முத்துக்கூத்தன் அவர்களின் திரையுலகப் பயணத்தையும், திராவிட இயக்கத்துக்கு கலையின் முலமாக அவர் ஆற்றிய அயராதப் பிரச்சாரப் பணிகள் பற்றியும் விவரித்தார்.
தந்தை பெரியாரின் மாணாக்கராகக் கலைஞர் ஆற்றிய கழகப் பணி, தந்தை பெரியாரின் பிரச்சாரக் கருவிகளான “குடிஅரசு‘, ‘விடுதலை’ ஏடுகளில் கலைஞர் பணியாற்றியது, கலைஞரின் திரைப்படக் கதை – உரையாடல்கள் திராவிட இயக்கத்தின் எழுச்சிக்கு வித்திட்டப் பாங்கு, போராட்ட களங் கண்ட கலைஞர் அனுபவித்த சிறைக் கொடு மைகள், ஆட்சித் துறையில் கலைஞரின் சாதனைகள், சமூக நீதித் திட்டங்கள், நெருக்கடி நிலை காலத்தில் ஜனநாயகக் காவலராக கலைஞர் காட்டிய துணிச்சல், இந்தியக் குடியரசுத் தலைவர்கள் பலரும் அப்பொறுப்பில் தேர்வு செய்யப்பட்டதில் கலைஞரின் அளவிலா பங்கு – ஆகியவற் றைப் பற்றி விளக்கி, தனிக் கட்சித் தொடங்கியுள்ளஅண்ணாமலை நடத்தி வருகின்ற அரசியல் நாடகத்தின் பின்புலம், காட்சிப் பதிவுகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி.யின் – ஆரியத்தின் மறுபதிப்பே என்பதையும் விளக்கமாகப் பேசினார்.
இப்பொதுக்கூட்டத்தில் மனித உரிமைகள் மற்றும் மனிதவள மேம்பாட்டு மாநில தலைவர் டாக்டர் சுரேஷ், காட்டாங்குளத்தூர் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் கே.ஆர்.சி.ஜே.ரத்தீஷ், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி சி.எம்.கதிரவன், மு.பகலவன், பெரியா பிஞ்சு ப.மகிழன், சீ.தீனதயாளன், மாவட்ட ப.க. துணைத் தலைவர் செ.முடியரசன், மறைமலைநகர் நகர கழக செயலாளர் வி.வசந்தன், நகர ப.க. அமைப்பாளர் மு.அறிவு, செங்கல்பட்டு நகர கழக தலைவர் பொன்.இராசேந்திரன், மறைமலைநகர் ப.க. ம.ஏழுமலை, இராமச்சந்திரன், செங்கை ராமகிருஷ்ணன், கூடுவாஞ்சேரி இராசு, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வடசென்னை மாவட்ட கழக காப்பாளர் கி.இராமலிங்கம், அமைப்பாளர் சி.பாசுகர், செம்பியம் கழகத் தலைவர் ப.கோபாலகிருஷ்ணன், ஆவடி மாவட்ட கழகத் தோழர்களான க.கலைமணி, வை.கலையரசன் மற்றும் பல கழகத் தோழர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
கழகக் கொடிகள்
சிறப்புரையாளருக்கும், கழகப் பொறுப்பாளர்களுக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
இப்பொதுக்கூட்டத்திற்கென்று ஆங்காங்கே விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. சிங்கப்பெருமாள் கோவில் தேசிய நெடுஞ்சாலையின் மத்தியில் கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்திட, கழகக் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழகம் – மாவட்ட ப.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தின் இறுதியாக மாவட்ட மகளிரணித் தலைவர் நூர்ஜகான் நன்றி கூறினார்.
