புதுடில்லி,ஜூன் 17 டில்லியில் கடந்த மார்ச் 23ஆம் தேதி ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இணையருக்கு, பெண்ணின் குடும்பத்தினரால் ஆணவக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. தங்களுக்குப் பாதுகாப்பு கோரி அந்த இணையர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியன்று இணையர் வசிக்கும் உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத்தில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டது. இச்சூழலில், பெண்ணின் குடும்பத்தினர் அவரை நேரில் சந்திக்க அனுமதி வழங்கி ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் முன்னதாக ஓர் உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவு தங்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கும் எனக் கூறி, இணையர் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இணையருக்கு ஆதரவாகவும், பெண்ணின் குடும்பத்தினருக்கு எதிராகவும் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
நீதிபதிகள் இதுகுறித்துக் கூறுகையில்,
“இத்தகைய பிற்போக்குத்தனமான சக்திகளை (பெண்ணின் குடும்பத்தார்) ஒருபோதும் ஊக்குவிக்கக் கூடாது. அவர்கள் இந்த இணையரைத் தீவிரமாக வேட்டையாடி வருகிறார்கள். இது எவ்வகையிலும் சரியான நடைமுறை கிடையாது.”
இதையடுத்து, பெண்ணின் குடும்பத்தினர் அவரைச் சந்திக்க அனுமதி வழங்கி ராஜஸ் தான் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவிட்டனர்.
