சென்னை, ஜூலை 16- உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஓய்வுபெற்ற 46 ஆயிரம் பேருக்கு இடைக்கால ஓய்வூதியம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பதாவது:
தமிழ்நாட்டில் 2003 ஏப்.1ஆம் தேதி முதல் பணியில் சேர்ந்து 2025 டிச.31ஆம் தேதிவரை ஓய்வுபெற்ற உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் வரக்கூடிய ஊழியர்கள் 46 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அவர்களுக்கு இடைக்கால ஓய்வூதியம் வழங்குவதற்காக கடந்த 2025 ஜூன் 16இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 2026 ஜனவரி 1 முதல் இடைக்கால ஓய்வூதியமாக அவர்களுக்கு ரூ.10 ஆயிரம்வழங்கப்பட வேண்டும்.
ஆனால் ஓய்வுபெற்ற 46 ஆயிரம் பேருக்கும் இந்த இடைக்கால ஓய்வூதியம் இதுவரை வழங்கப்படவில்லை. ஓய்வூதியம் என்பது சலுகையல்ல; அது உரிமை. தங்களது கடந்த காலஉழைப்பு சக்தியை இச்சமூகத்துக்கு வழங்கியவர்களுக்கு, சமூக பொருளாதார பாதுகாப்பை வழங்க வேண்டியது இந்த சமூகத்தின் கடமையாகும். ஊழியர்களின் கண்ணியமான வாழ்வுக்கு ஓய்வூதியம் அவசியம் எனவும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
எனவே தமிழ்நாடு அரசு, 2003 ஏப்ரல் 1 முதல் பணியில் சேர்ந்து, 2025 டிச.31 வரை ஓய்வுபெற்ற அனைவருக்கும், இடைக்கால ஓய்வூதியமான ரூ.10,000-அய் மாதந்தோறும் வழங்க வேண்டும் இத்துடன் இந்த பணியாளர்களில் உயிரிழந்த 7,864 பேரின் இணையர்களுக்கு குடும்ப ஓய்வூதியத்தை வழங்கவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பில்
7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில்
139 பேருக்கு ஆணை!
139 பேருக்கு ஆணை!
சென்னை, ஜூலை 16- பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கான இணைய வழியில் கலந்தாய்வு கடந்த 13ஆம் தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு செய்யப்பட்டு அதை உறுதிபடுத்த 14ஆம் தேதி மாலை 5 மணி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்த 139 மாணவர்களுக்கு நேற்று (15.7.2026) காலை 7 மணிக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை இணைய வழியில் வழங்கப்பட்டது. அவர்களில் 91 பேர் மாற்றுத் திறனாளிகள். 38 பேர் விளையாட்டு வீரர்கள், 8 பேர் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆவர்.
இந்த நிலையில், சிறப்பு பிரிவினருக்கான இணைய வழி பொது கலந்தாய்வு நேற்று (15.7.2026) தொடங்கியது. இதில் பங்கேற்க மொத்தம் 4,927 பேர் தகுதிபெற்றுள்ளனர்.
