சென்னை, ஜூன் 16– சென்னையின் முக்கிய போக்கு வரத்து இணைப்புகளில் ஒன்றான பூங்கா – வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் (MRDS) சேவை, 2028ஆம் ஆண்டிற்குள் முழுமையாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை ரயில்வே வாரியத்தின் இறுதிப் பரிசீலனையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பறக்கும் ரயில் சேவை
கடந்த 1997ஆம் ஆண்டு தொடங் கப்பட்ட இந்த பறக்கும் ரயில் சேவை, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு தெற்கு சென்னையை நகர மய்யத்துடன் இணைக்கும் முக்கிய வழியாய் இருந்து வருகிறது. எனினும், போதிய பராமரிப்பு இல்லாமை, நிலையங்களின் தரம் குறைவு மற்றும் பாதுகாப்பு வசதிகள் பற்றாக்குறை காரணமாக, இச்சேவையை மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
தமிழ்நாடு அரசும் இதில் ஆர்வம் காட்டிய நிலையிலும், நிதிப்பற்றாக்குறை காரணமாக இத்திட்டம் தாமதமானது. இதையடுத்து, கடந்த ஆண்டு பிரதமர் அலுவலகம் (PMO) நேரடியாக தலையிட்டு இத்திட்டத்தை விரைவுபடுத்த உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக, கடந்த ஏப்ரல் மாதம் ரயில்வே வாரியத்திற்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டது. சில தொழில்நுட்ப திருத்தங்களுடன் அடுத்த ஒரு மாதத்திற்குள் இதற்கு இறுதி ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.4,500 கோடி
ரயில்வே வாரியத்தின் அனுமதி கிடைத்தவுடன், சுமார் ரூ.4,500 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) அதிகாரப் பூர்வமாக ஏற்கும்.
இத்திட்டத்தின் கீழ், சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான 18 நிலையங்கள் மற்றும் வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான 3 நிலையங்கள் என மொத்தம் 21 ரயில் நிலையங்கள் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு மெட்ரோ தரத்திற்கு உயர்த்தப் படவுள்ளன.
அதே கட்டணம்
மறுசீரமைப்புப் பணிகள் நடை பெறும் காலத்திலும், பொதுமக்களின் பயணத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தற்போதைய கட்டண முறையிலேயே ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
சிறப்பு மெட்ரோ பெட்டிகள்
பறக்கும் ரயில் பாதையின் தற்போதைய தண்டவாள அமைப்பிற்கு ஏற்றவாறு பிரத்யேக மெட்ரோ ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படும்.
நவீன வசதிகள்
பயணிகளின் வசதிக்காக அனைத்து நிலையங்களிலும் நவீன நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் (Lifts) அமைக்கப்படும்.ரயில் நிலையங்களை வருவாய் ஈட்டும் மய்யங்களாக மாற்றும் நோக்கில், அங்கு வணிக வளாகங்கள் மற்றும் நவீன கடைகள் உருவாக்கப்படும்.
சிக்னல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் முழுமையாக நவீனமயமாக்கப்பட்டு, பயணிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். ஒருங்கிணைந்த போக்குவரத்து: நிலையங்கள் அனைத்தும் பிற போக்குவரத்து அமைப்புகளுடன் எளிதாக இணையும் வகையில் ‘ஒருங்கிணைந்த போக்குவரத்து மய்யங்களாக’ மாற்றப்படும்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “தமிழ்நாடு அரசு மற்றும் தெற்கு ரயில்வேயின் இந்த கூட்டு முயற்சிக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கவுள்ளது.
இத்திட்டம் 2028 இறுதிக்குள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது, சென்னையின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பு வலுவடைவதோடு, நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு வேகமான, பாதுகாப்பான மற்றும் உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவம் கிடைக்கும்” என்றனர்.
