சென்னை, ஆக. 25- உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையற்ற கல்விக்கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று (24.8.2026) உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது.
விவாதத்துக்கு பதிலளி்த்து பேசியபோது அமைச்சர் பெ.விஸ்வ நாதன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி ஊக்குவிப்புத் திட்டம் (சிஏஎஸ்) செப்.1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.
அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப 6,000 உதவிப் பேராசிரியர்கள் 3 கட்டமாக நியமிக்கப்படுவர். கவுரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கு ரூ.35 ஆயிரமாகவும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கு ரூ.30 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.
உயர்கல்வி பயிலும் மாணவர் களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையற்ற கல்விக்கடன் வழங்க ‘கல்வி உத்தரவாதத் திட்டம்’ செயல்படுத்தப்படும். இரண்டு ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் உள்ள விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மாணாக் கர்கள். அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு முழு கல்விக் கட்டண விலக்கு அளிக்கப்படும்.
ஆய்வகங்களை மேம்படுத்தும் வகையில், இரசாயனப் பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள், ஆய்வக நுகர்பொருட்கள், சிறிய அளவிலான பழுதுபார்ப்புகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவை களைப் பூர்த்தி செய்ய 270 அரசு கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 2026-2027-ஆம் கல்வியாண்டு முதல் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர் தடையின்றிப் படிக்க ரூ.20 இலட்சம் வரை பிணையில்லா கல்விக் கடன் வழங்க புதிய “கல்வி உத்தரவாதத் திட்டம்” அறிமுகம் செய்யப்படுகிறது.
உயர்கல்வி பயிலும் திருநர் மாணாக்கர்களின் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக, அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் 50 திருநர் மாணாக்கர்களுக்கு தலா ரூ.2 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும், என்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.
